Published : 11 Nov 2013 04:46 PM
Last Updated : 11 Nov 2013 04:46 PM
வல்லிக்கண்ணனின் இயற்பெயர் ரா.சு. கிருஷ்ணசாமி. நெல்லை மாவட்டம் நான்குநேரி வட்டாரம் திசையன்விளையில் 12-11-1920ஆம் ஆண்டில், நடுத்தர வர்க்கக் குடும்பமொன்றில் பிறந்தார் வல்லிக்கண்ணன். அவரது தந்தையார் சுப்பிரமணியன் சுங்கத் துறையில் பணிபுரிந்த காலத்தில், அவரோடு பணியாற்றியவர் பிரபல நாவலாசிரியர் அ. மாதவையா. அக்காலகட்டத்தில் அ. மாதவையா நடத்திவந்த 'பஞ்சாமிர்தம்' இதழ்கள் பற்றி வ.க.வின் தந்தையார் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்ல, அதுவே அவருக்கு எழுத்தின் மீதான தாக்கத்தைத் தந்திருக்கிறது. 1931ஆம் ஆண்டில் அவரது தந்தையார் காலமானார். அப்போது வல்லிக்கண்ணன் வயது 11.
1936ஆம் ஆண்டிலிருந்து, அதாவது தன்னுடைய 16ஆவது வயதிலேயே கதைகள் எழுதத் தொடங்கிவிட்ட வல்லிக்கண்ணனின் முதல் சிறுகதை 'சந்திரகாந்தக் கல்' பிரசண்ட விகடன் இதழில் பிரசுரமானது. 1937இல் பள்ளி இறுதிப் படிப்பை முடித்த அவருக்குப் பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்க பணியாளர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது.
1940இல் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்திருந்த 'உலகச் சிறுகதைகள்' நூலைப் படித்தவுடன், உலக இலக்கியங்களை ஆழ்ந்து பயின்றால் மட்டுமே, தமிழில் உலகத் தரம் வாய்ந்த சிறுகதைகளைப் படைக்க முடியும் என்கிற உறுதிப்பாடு அவருள் எழுந்திருந்தது.
வல்லிக்கண்ணனின் தீவிர எழுத்துப் பணி குறித்து அவரது அலுவலகத்தைச் சேர்ந்த வேளாண்மை விரிவாக்க அலுவலர் அவரது மேலதிகாரிக்குத் தொடர்ந்து புகார் அனுப்ப, தான் பார்த்துவந்த வேலையை வ.க. ராஜினாமா செய்தார். 1941இல் தன் வாழ்க்கையை எழுத்துப் பணிக்கென அர்ப்பணித்துத் துறவு பூண்டார்.
'மறுமலர்ச்சி இலக்கிய இரட்டையர்கள்' என்றழைக்கப்பட்ட ந. பிச்சமூர்த்தியும், கு.ப. ராஜகோபாலனும் ஆரம்பித்துவைத்த கவிதை இயக்க அடிச்சுவட்டில் தன்னை இணைத்துக்கொண்டு, 1942ஆம் ஆண்டு முதல் வசன கவிதைகள் எழுதலாயினார்.
வாழ்பனுபவத்தின் கசப்பு அவரது அடிநாக்கு வரையில் ஏறிவிட்டிருந்தபடியால், நம்பிக்கை வறட்சி, ஏக்கம், வேதனை ஆகியவையே அவர் கவிதைகளின் அடிநாதமாக ஒலித்தன. ஆழ்ந்த தீர்க்கமான எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளியிடும் அவரது கவிதைகளின் நடை எளிய, சாதாரண பேச்சுப் பாங்கானவை.
1942ஆம் ஆண்டின் துவக்கத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அவர் வேலை தேட ஆரம்பித்தார். வேலை கேட்டுப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அவர் தொடர்ந்து கடிதங்கள் எழுதிவந்தார்.
கோவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த மாதமிருமுறை இதழான 'சினிமா உலகம்' இதழில் பணிபுரிய அதன்ஆசிரியர் பி.எஸ். செட்டியாரிடமிருந்து அழைப்பு வந்தது. 1943 பிப்ரவரியில் 'சினிமா உலக'த்தில் இணைந்தார். ஒரு கட்டத்தில் எழுத்தார்வம் காரணமாகப் பத்திரிகை வாய்ப்பை விடுத்துச் சென்னைக்குப் பயணமான வல்லிக்கண்ணன், அங்கு நவசக்தி, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றத் திட்டமிட்டு முயற்சி மேற்கொள்ள, திருச்சி துறையூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த 'கிராம ஊழியன்' பத்திரிகையில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. அப்போது 'கிராம ஊழியன்' இதழின் கெளரவ ஆசிரியராக கு.ப.ராஜகோபாலன். இருந்தார். வறுமையில் வாடிக்கொண்டிருந்த கு.ப.ரா. குடும்பத்தாரின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்கும் பொருட்டே இவ்விதழ் ஆரம்பித்து நடத்தப்பட்டுவந்தது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் அவ்விதழின் ஆசிரியராகச் செயல்பட்ட கவிஞர் திருலோக சீதாராம். கு.ப.ரா.வின் மறைவுக்குப் பிறகு 1944 மே முதல் 1947வரை , அதாவது ‘கிராம ஊழியன்’ இதழ் நிறுத்தப்படும் வரையில் வல்லிக்கண்ணன் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது கிராம ஊழியன் இதழை நடத்துவதற்குத் துணை நின்றவர் ந. பிச்சமூர்த்தி.
இவ்விதழில் பணியாற்ற காலத்தில் 'பாரதி அரிச்சுவட்டில்', 'பாரதிதாசனின் உவமை நயம்' ஆகிய கட்டுரைத் தொடர்களை வல்லிக்கண்ணன் எழுதிவந்தார். 1944-45 ஆண்டுவாக்கில் தன்னைப் பற்றி எழுதிவருகின்ற படைப்பாளியைக் காண விரும்பி, கிராம ஊழியன் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார் பாரதிதாசன். மெலிந்த உருவமுள்ள 24 வயது இளைஞனான வல்லிக்கண்ணனைப் பார்த்த அவருக்குப் பெருத்த திகைப்பும் வியப்பும் ஏற்பட்டு, வாழ்த்திச் சென்றுள்ளார்.
அதேபோல், 1945-46 காலகட்டத்தில், புதுமைப்பித்தனைச் சந்திக்கும் வாய்ப்பு வல்லிக்கண்ணனுக்குக் கிடைத்தது. திருலோக சீதாராமின் நெருங்கிய நண்பராக புதுமைப்பித்தன் இருந்ததால், அவருடன் சென்று புதுமைப்பித்தனைப் பலமுறை சந்தித்திருக்கிறார். 'குஞ்சாலாடு' எனும் சிறு நூலை “துரோணர்” புதுமைப்பித்தனுக்கு “ஏகலைவனாக”த் தன்னை வரித்துக்கொண்டு சமர்ப்பணம் செய்தார் . குரு-சீடர் பரம்பரை என்னும் அணுகுமுறையை ஏற்காத புதுமைப்பித்தன், “அப்படியானால் கட்டை விரலைக் கேட்க வேண்டியதுதான்” எனத் தனக்கே உரிய விதத்தில் நையாண்டி செய்தாலும் வல்லிக்கண்ணன் அதைப் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
படைப்பாளராக மட்டுமன்றி, சிறுபத்திரிகைகளின் மூல விசையாகவும் திகழ்ந்தார் வல்லிக்கண்ணன். 1950இல் 'ஹனுமான்' என்னும் பத்திரிகையில் இணைந்து பணியாற்றினார். அதுதான் வ.க.வின் இறுதியான இதழியல் பணி. 'பாரதிதாசனின் உவமை நயம்’, ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’, ‘காலத்தின் குரல்’, ‘தமிழில் சிறுபத்திரிகைகள்’, ‘சரஸ்வதி காலம்' ஆகிய படைப்புகள் வல்லிக்கண்ணனின் வலிமை மிக்க அடையாளங்கள்.
1962இல் 'எழுத்து' இதழில் 'விதி' என்கிற தலைப்பில் எழுதிய கவிதையொன்றில், இவ்வாறு குறிப்பிடுகிறார் வ.க.
நடந்தே கழியணும் வழி;
கொடுத்தே தீரணும் கடன்;
செய்தே அழியணும் வேலை;
அழுதே ஒழியணும் துக்கம்;
வாழ்ந்தே முடியணும் வாழ்வு;
இதுவே உலகின் நியதி எழுதுவது போலவே வாழ வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டிருந்த வல்லிக்கண்ணன், 75 ஆண்டுகளுக்கும் மேலான தன்னுடைய இலக்கிய வாழ்வை முற்றிலுமாக வாழ்ந்தே முடித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT