Published : 27 Sep 2016 10:57 AM
Last Updated : 27 Sep 2016 10:57 AM
எதற்காக வேலைக்குப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, பெரும்பான்மையான மக்களின் பதில் ‘பணம் சேர்க்க வேண்டும் இல்லையா’ என்பதுதான். தனக்கு, தன் குடும்பத்துக்கு, அடுத்த தலைமுறைக்கு மட்டுமல்ல ஆறேழு தலைமுறைகளுக்கு.. என சொத்து சேர்த்து வைத்துக்கொள்ள முற்படாத மனிதர்களே இல்லை.
பணம் சேர்த்து வைக்காத மனிதன் உருப்படாத ஆளாகவே கருதப்படுகிறான். அவனது வாழ்க்கையை வீணில் கழிந்ததாக தூற்றுகிறது நடைமுறை உலகம். ஆனால், எல்லோருக்கும் பொருள் தேடுவதில் ஆர்வம் இருப்பது இல்லை. சிலர் புகழ் தேடுகிறார்கள். சிலர் ஞானத்தைத் தேடுகிறார்கள். சிலர் அதிகாரத்தைத் தேடுகிறார்கள். சிலர் அமைதியைத் தேடுகிறார்கள்.
பொருள் தேடும்போது நாம் சம்பாதிக்கும் பணம் தீதின்றி வருகிறதா என்ற கேள்வியைக் கேட்கிறது திருக்குறள். இது ஒவ்வொருவரும் மனசாட்சியோடு கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.
‘பணம் எப்படி வருகிறது எனப் பார்க்கக் கூடாது; எப்படி செலவிடப்படுகிறது என்று தான் பார்க்க வேண்டும்’ என கற்றுத் தருகிறது இன்றைய உலகம். அறம், நீதி, நம்பிக்கை போன்றவை இன்று வேண்டாத விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன.
யூதர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள். ‘யூதனைப் போல வணிகம் செய்’ என்று சொல்வார்கள். பணம் சேர்ப்பதில் காட்டும் கவனத்தை, செலவழிப்பதிலும் காட்டுவார்கள். யூதர்களுக்கு இறை நம்பிக்கை மிக அதிகம். யூத வணிகர்கள் தங்களுக்கு என அடிப்படை அறத்தை கொண்டிருக்கிறார்கள். பொருளீட்டுவதில் காட்டும் ஈடுபாட்டுக்கு நிகராக மெய்ஞானத்திலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டும் எப்படி ஒன்றுகலந்திருக்கிறது என்பது முரணான விஷயம். ஆனால், யூதர்கள் அப்படித்தான்.
எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மோசஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. அறிவியல் தொழில்நுட்பம், கலை, இசை, வணிகம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்களே முன்னணியில் இருக்கிறார்கள். உலக வர்த்தகத்தில் 70 சதவீதம் யூதர்களின் கைவசமே உள்ளன.
யூதர்களின் பாரம்பரிய மொழி ஹிப்ரு. பைபிள் ஹிப்ரு மொழியிலே எழுதப்பட்டிருக்கிறது. யூத குடும்பங்களில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை எதிர்காலத்தில் அறிவாளியாக திகழ வேண்டும் என்பதற்காக இசை கேட்பதும், கணிதப் பயிற்சிகள் மேற்கொள்வதும், ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதும், இலக்கியங்களை வாசிப்பதும் வழக்கம். யூத ஆண்கள் ‘கிப்பா' என்ற சிறிய தலைக் குல்லாவை அணிவார்கள். அது அவர்களின் அடையாளம். எல்லா இடங்களிலும் கட்டாயம் இந்தக் குல்லாவை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
யூதர்களின் கோயில் ‘சினகாக்’ எனப்படுகிறது. இந்தியாவில் கொச்சி, மும்பை, கொல்கத்தா மற்றும் புனேவில் யூத ‘சினகாக்’ உள்ளன. கொச்சியின் மட்டாஞ்சேரியில் உள்ள யூதர்களின் தெருவில் உள்ள ‘சினகாக்’கில் மட்டுமே தற்போது வழிபாடு நடத்தப்படுகிறது. கொச்சியில் இருந்த யூதர்கள் ‘பெனி இஸ்ரேல்’ என அறியப்படுகிறார்கள். 1694-ல் கொச்சினில் வந்து குடியேறிய முதல் யூதர் டேவிட் இசக்கியல் ரஹபி என்கிறார்கள்.
கொச்சியை ஆண்ட அரசர் ராஜா ரவிவர்மா யூதர்களை ஆதரித்தார். இன்றும் யூத குடும்பங்களின் வாரிசுகளில் ஒருசிலர் அங்கே வசிக்கிறார்கள்.
சமீபத்தில் ‘The Trial of Viviane Amsalem’ என்றொரு பிரெஞ்சு திரைப்படத்தைப் பார்த்தேன். ஒரு யூத பெண் விவாகரத்து வாங்குவதற்காக எப்படி எல்லாம் நீதிமன்றத்தில் அலைக்கழிக்கப்படுகிறாள் என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
யூத வாய்மொழிக் கதைகளில் ஒன்று மாயப் பை ஒன்றைப் பற்றி பேசுகிறது.
சாலையில் மாயப் பை ஒன்றைக் கண்டெடுக்கிறான் ஒரு ஏழை. அந்த மாயப் பையில் ஒரே ஒரு தங்க நாணயம் இருக்கிறது. அதை வெளியே எடுக்கும்போது ஒரு குரல் கேட்கிறது:
‘‘இது ஒரு மாயப் பை. இதில் உள்ள தங்க நாணயத்தை நீ எடுத்துக்கொண்டால் உடனே இன்னொரு புதிய நாணயம் உருவாகிவிடும். எத்தனை முறை நாணயத்தை எடுத்தாலும் நாணயங்கள் புதிதாக வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், நாணயத்தை செலவழிக்க நினைத்தால் அந்த மாயப் பையை ஆற்றில் தூக்கி எறிந்துவிட வேண்டும். அந்த மாயப் பை ஒரு மீனாக உருமாறி மறையும். அதன் பிறகே நாணயத்தை செலவழிக்க முடியும். ஒருவேளை அதற்கு முன்பு செலவழிக்க முயன்றால் தங்க காசு சாம்பலாகிவிடும்’’ என்றது அந்தக் குரல்.
‘ச்சே... தங்கக் காசு கிடைத்தும் செலவழிக்க முடியவில்லையே…’ என்று அந்த ஏழைக்கு ஆதங்கம்.
அவன் அந்த மாயப் பையில் இருந்து வேண்டுமான அளவு தங்க நாணயங்களை எடுத்தெடுத்து சேகரிக்கத் தொடங்கினான். பெட்டி பெட்டியாக தங்க நாணயம் சேர்ந்த போதும் அந்த மாயப் பையை ஆற்றில் தூக்கி எறிய மனம் வரவில்லை. அதனால் அதில் இருந்து எடுக்கும் நாணயத்தை அவன் செலவழிக்கவே இல்லை. தினமும் வீதியில் யாசகம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில்தான் வாழ்ந்து வந்தான். தன் வாழ்நாளின் இறுதிவரை அவனால் அந்த மாயப் பையைத் தூக்கி எறிந்துவிட்டு, சேகரித்த நாணயங்கள் போதும் என நினைக்கவே முடியவில்லை.
முடிவில் ஒருநாள் அந்த மனிதன் இறந்து போனான். அவன் வீட்டை சோதித்த உறவினர்கள், ‘இவ்வளவு தங்க நாணயங்களை சேகரித்து வைத்தவன், எதற்காக பிச்சைக்காரனைப் போல வாழ்ந்தான்?’ என்பது புரியாமல் திகைத்தார்கள்.
இந்தக் கதையில் வரும் மனிதனின் நிலைதான் இன்றைய நவீன வாழ்க்கை முறையும். பணம்… பணம்… எனத் தேடி சேகரித்து, அதைக் கொண்டு உரியமுறையில் வாழத் தெரியாமல், நோயும் அவதியும் பற்றிக்கொள்ள அற்ப ஆயுளில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.
சாலையில் பலர்கூடி வேடிக்கை பார்க்க, தனது வாய்க்குள் நீண்ட கத்தியை விட்டு விழுங்கி காட்டுபவன்… பணம் சம்பாதிக்கவே அச்செயலை செய்து காட்டுகிறான். பணம், மனிதர்களைத் துரத்துகிறது. பணம், மனித மனதை உருமாற்றுகிறது. பணம், துட்டு, காசு என்பது வெறும் சொற்கள் இல்லை. நம் வாழ்க்கைமுறையின் அடையாளம்.
பணத்தை அடைவதும் காப்பாற்றுவதும் எளிதில்லை. பணம், எப்போதும் பிரச்சினையைக் கூட்டிக் கொண்டுதான் வரும். பணம், வேகமாக கைவிட்டுப் போய்விடும். பிரச்சினைகள் எளிதில் போய்விடாது. இதுவே உலகம் காட்டும் உண்மை.
- கதை பேசும்…
இணையவாசல்: > யூத வாய்மொழிக் கதைகளை வாசிக்க
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT