Published : 26 Oct 2013 03:12 PM
Last Updated : 26 Oct 2013 03:12 PM
ஜே.பி. சாணக்யாவின் கதைகளில் வரும் மனிதர்கள், பெரும்பாலும் விளிம்புநிலை மனிதர்கள். இத்தகைய மனிதர்கள் வரும் கதைகள் நமது கதைகளாக மாறிவிடுவது இயற்கையாக நடக்கிறது. ஆனால் இவரது மொழி அவ்வாறு செயல்படுவதில்லை. பனிமூட்டம், புகை மூட்டம் ஆகியவற்றிற்கிடையே பாத்திரங்கள் சஞ்சரிக்கிறார்கள். இந்த மூட்டம் சாணக்யா உருவாக்குவது. தவிர இவர் கதைகளின் வழியே கருத்துகளைச் சொல்பவரல்ல. கதாபாத்திரங்களின் வழியே மனநிலையையும் அவர்களின் வாழ்க்கை நெருக்கடிகளையும் கூறுகிறார். இத்தகைய களம்தான் சிருஷ்டிகரம் தங்கும் இடம்.
'என் வீட்டின் வரைபடம்' தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'பிளாக் டிக்கட்' என்ற கதையை எடுத்துக்கொள்கிறேன். பாலுறவைத் தொழிலாகக் கொண்டவர்கள், குடிக்கிறவர்கள், மற்றும் பிளாக் டிக்கெட் விற்பவர்கள், சிரிப்புப் போலீஸ், பிளாக் டிக்கெட் விற்பவர்களுக்கிடையேயான நெருக்கடி மிகுந்த உறவுகள், பிளாக் டிக்கெட்டைப் பெற்று வெளியே கூடுதல் விலைக்கு விற்க முனைவதற்கான திட்டம் ஆகியவை சித்தரிக்கப்படுகின்றன, ஒத்தக்கை சண்முகம், அலிபாபா, பட்டு, மலர் ஆகியோர் பிளாக் டிக்கெட்டை விற்றுப் பிழைப்பவர்கள். தியேட்டர் நிர்வாகத்தின் கெடுபிடியினால் அவர்களுக்கு டிக்கெட் கொடுக்கும், பாரி டிக்கெட் கொடுக்காமல் நிறுத்திவிடுகிறான். அவர்கள், அவனுக்கு மது கொடுத்து வசப்படுத்துகிறார்கள். தியேட்டர் அதிபரின் மறைமுகமான 'சதி'யினால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுதான் கதை. ஜே.பி. சாணக்யாவை அறிமுகம்படுத்தும் விதமாக அவரது கதைகளின் சுருக்கத்தைச் சொல்வது எனக்குப் பொருத்தமாகப்படவில்லை. அவர் எழுதியிருக்கும் விதத்தை எடுத்துக்காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். இக்கதையின் ஒரு சிறு பகுதி”
பாரி, சண்முகத்தின் முகத்தைப் பார்க்காமல் ஒரு டிக்கெட்டைக் கிழித்துக் கையில் திணித்து, சில்லரை கொடுத்து, சண்முகத்திற்குப்பின் இருக்கும் முகத்தைப் பார்த்து “ம்.. ம்...” என்றான்.
“என்ன பாரி?” என்றான் சண்முகம்
“தப்பா எடுத்துக்காத, மேனேஜர் மாறிட்டாரு. முன்ன மாதிரி இல்ல. வேலைக்காவாது நவுரு” என்றான் பாரி.
“என்ன பாரி ஒரு வாரமா... இதையே சொல்ற?”
“ஒரு வாரத்துககு முந்தி சொன்னேனா?' இப்பத்தானே சொல்றேன்.. புரிஞ்சிக்க மாட்டிறீயே...”
“பாரி...” என்றான் சண்முகம்,
“என் வேலைக்கு ஒலை வைச்சிடாதே. ஆமாம். நவுரு...”
“பஸ்ட் அன் லாஸ்ட் என்ன சொல்றே' என்றான்.
“எனக்கு வேலை போயிடும்” என்றான் பாரி.
“இந்த கேபின்லே தின்னுட்டு இங்கேயே தூங்கிடுவியா”
“என்ன மெரட்றியா?”
பாரி சண்முகத்தை உற்றுப் பார்த்தான். சண்முகம், பாரியை ஏளனமாகப் பார்த்தான்.
“பழசெல்லாம் மறந்திராத பாரி.”
“யோவ் செக்யூரிட்டி” என்று கத்தினான் பாரி.
“அந்த அளவுக்கு ஆயிடிச்சா... சரிதாங்க ஓகே ஓகேப்பா” என்று வெளியே வந்தான். செக்யூரிட்டியை ஒரு முறை முறைத்தான். பட்டு பரிதாபமாக நின்றுகொண்டிருந்தாள். சண்முகத்திற்கே இன்னும் ஒரே டிக்கெட்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தவுடன் பட்டு கத்த ஆரம்பித்தாள்...
நான் இவரது கதைகளைப் பற்றி எழுதி விளக்குவதைக் காட்டிலும், எடுத்துக்காட்டப்பட்டுள்ள இச்சிறு பகுதி இவரது சிருஷ்டியைக் காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT