Published : 17 Jun 2016 11:13 AM
Last Updated : 17 Jun 2016 11:13 AM
சுமார் 50 ஆண்டுகள் 1920 தொடங்கி 1970 வரை 78 ஆர்.பி.எம் இசைத் தட்டுகள்தான் இந்திய மத்தியதர வர்க்கத்தின் முக்கியப் பொழுதுபோக்காக இருந்தன. இதற்கான ஒலிப்பதிவு எங்கு செய்யப்பட்டாலும் அதை இசைத்தட்டாக மாற்றுவது கொல் கத்தா அருகில் டம்டம் என்ற இடத்தில் தான். இசைத்தட்டைப் பாட வைக்க கிராமபோன் என்ற கருவி வேண்டும். இக்கருவியில் ஒரு தட்டு சீராக ஒரே வேகத் தில் சுழல ஏற்பாடு செய்யப்பட்டிருக் கும். சவுண்ட் பாக்ஸ் என்ற இணைப்பும் இருக்கும். அரக்கினால் செய்யப்பட்ட தால் தட்டு எளிதில் உடைந்துவிடும். உடைந்த இசைத்தட்டைத் தண்ணீரில் தேய்த்து தேள் கடித்த இடத்தில் போட்டால் வலி இறங்கும் என்பார்கள்.
50 ரூபாய்க்கு ஒரு கிராமபோனை ஓர் ஏலக் கடையில் இருந்து அப்பா வாங்கி வந்தார். ஏலக் கடைக்குப் போவது சீட்டாடுவது, குதிரைப் பந்தயத்துக்குப் போவது போல. இது நல்லதா, கெட்டதா என்பது என்ன வாங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. எங்கள் வீட்டுக்கு நல்ல பொருட்கள் வந்திருக்கின்றன; ஓட்டை உடைசலும் வந்திருக்கின்றன. எங்களை மிகவும் திண்டாட வைத்தது ஒரு ரேடியோ. பெரிய கம்பெனி பெயரில் இருந்தாலும் ஏதோ மலிவான பிளைவுட் டப்பா மாதிரி இருந்தது. ஏலக் கடையில் பாடியிருக்கிறது. எங்கள் வீட்டுக்கு வந்தவுடன் அது மவுன விரதம் கடைபிடித்தது.
சுதந்திர இந்தியாவில் ரேடியோவுக்கு லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றபோது, திண்டாடிப் போய்விட்டோம். லைசென்ஸ் இல்லாமல் ரேடியோ வைத்திருந்தால் அது இந்திய சட்டப்படி கடல் கொள்ளைக்குச் சமானம். எங்களால் லைசென்ஸ் வாங்க முடியவில்லை. ரேடியோ வாங்கியதற்கு ரசீது வேண்டும். அது இல்லை.
எங்கள் கிராமபோனுக்கு இரட்டை ஸ்பிரிங்க். ஒரு முறை சாவி கொடுத்தால் ஓர் இசைத்தட்டின் இரு பக்கங்களையும் கேட்கலாம். சாவி கொடுக்கும்போது அரைத் திருகு அதிகமானாலும் ஸ்பிரிங்க் உடைந்துவிடும். எளிதில் ரிபேர் செய்ய முடியாது.
இரட்டை ஸ்பிரிங்க் கிடைக்காததால் இன்னொரு கிராமபோன் வாங்கினார் அப்பா. ஆமாம், இதுவும் ஓர் ஏலக் கடையில்தான். இது ஒழுங்காக வேலை செய்தது.
அப்பா ஒவ்வொன்றாக ஏகப்பட்ட இசைத்தட்டுகள் வாங்கிவிட்டார். இசைத் தட்டுத் தேர்வில் அவர் தவறேதும் செய்யவில்லை. எம்.எஸ் அவர்கள் சிறு வயதில் பாடிய ‘சொன்னது சரியா கிளியே’ என்ற பாட்டு முடிந்தபோது ஒரு வாத்தியக்காரர் “பலே!” என்று பாராட்டியிருக்கிறார். அதுவும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அடுத்த பக்கம், ‘எல்லா அருமைகளும் எல்லாப் பெருமை களும்’ என்ற பாட்டு. இரண்டும் சதிர்ப் பாட்டு என்று நினைக்கிறேன். எம்.எஸ். அவர்கள் ‘எவரி மாட்ட’ என்றொரு கீர்த்தனையும் பாடியிருந்தார் விரிவாக, அதாவது ஆறு நிமிடங்கள். ராஜரத்தினம் பிள்ளையுடைய புகழ்பெற்ற தர்பார் ராக வாசிப்பு. அதன் பின்பக்கம், ‘நிரவதிசுகதா’ என்ற தியாகய்யர் கீர்த் தனை. கர்னாடக சங்கீதத்தை சர்வ சுத்தமாக வாசித்த ராஜரத்தினம் பிள்ளை ஒரு சைகல் பாட்டையும் வாசித்திருக் கிறார். அது ‘மை சிஸ்டர்’ என்ற படத்தில் இருந்து என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட அதே மாதிரி பாட்டு ‘பிரசிடென்ட்’ என்ற படத்திலும் சைகல் பாடியிருக்கிறார். ராஜரத்தினம் பிள்ளை ‘மை சிஸ்டர்’ பாட்டைத் தேர்ந்தெடுக்க நிச்சயம் காரணம் இருந்திருக்கும்.
இந்த இசைத்தட்டுகள் ஒரு விஷயத் தைப் புலனாக்குகின்றன. அந்த நாட்களி லேயே கலைஞர்கள் எல்லாப் பிரதேச இசையையும் ரசித்திருக்கிறார்கள். ‘ராம் ராஜ்யா’ என்ற படத்தின் பிம்ப்ளாஸ் ராகப் பாட்டு தமிழ் நாடெல்லாம் பரவியிருந்தது.
‘டிராமா செட்’ என்று ஒன்றிருந்திருக் கிறது. ஒரு முழு நாடகம் ஐந்து, ஆறு அல்லது எட்டு இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற அமைப்பு பல நாடகங் களைப் பதிவுசெய்து விற்பனை செய் திருக்கிறது. எங்கள் வீட்டில் ‘அல்லி அர்ஜுனா’ மற்றும் ‘கோவலன்’ டிராமா செட்கள் இருந்தன. ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ் டிராமாடிக் பார்டி’ என்று அறிவித்த பின் நாடகம் தொடங்கும். இவர்களின் நட்சத்திர நடிகர் ஏ.எஸ். அப்துல் காதர். இவர் அர்ஜுனனாகவும் கோவலன னாகவும் மிக நன்றாக நடித்திருப்பார். நாடகத்தையே மிக நன்றாக மூன்று மூன்று நிமிடங்களாகப் பிரித்திருப்பார் கள். கூடிய வரையில் ஒவ்வொரு இசைத்தட்டின் தொடக்கமும் ஒரு பாட்டாக இருக்கும்.
கோவலன் நாடகத் தில் ஒரு பகுதியில் அப்துல் காதர் இரண் டரை நிமிடங்கள் ‘தாசிகள் நேசம் மோசமே, சகோதரரே’ என்று பாடுவார். “பத்து லட்சம் பொன்னும் கேட்டாள், சத்தியமும் வாங்கிப் போட்டாள், சித்தம் கலங்கப் பேசிட்டாள், தெருவில் விட்டாள், தாசி மாதவி மோசமே!” மேலை நாடு களில் ஸால்வேஷன் ஆர்மி என்றொரு கிறித்துவ அமைப்பு குடி, பெண் பித்து போன்ற குணங்களுக்கு எதிராகத் தெரு முனைகளில் உரை, இசை கலந்து நற்போதனை செய்வார்கள். இவர்கள் ‘ஆர்மி’ என்று பெயர் வைத்துக் கொண் டிருந்ததால் இவர்களுக்கு சார்ஜெண்ட், கேப்டன், மேஜர் என்றெல்லாம் பதவிகள் உண்டு. பெர்னார்ட்ஷா ஒரு பெண் ஸால்வேஷன் தொண்டர் பற்றி நாடகம் எழுதியிருக்கிறார். மேஜர் பார்பரா. பார்பரா, கணவனின் நடத்தை சகிக்காமல் அவனிடம் இருந்து பிரிந்து வாழ்கிறாள். கணவன் யுத்த தளவாட உற்பத்தியில் நிறையச் சம்பாதிக்கிறான். ஸால்வேஷன் படைக்கு உதவ முன் வருகிறான். அவனிடம் இருந்து நிதி பெற பார்பரா மறுக்கிறாள். அவன் கூறுகிறான், “ஏழ்மையை விட ஆயுதங்கள் கொடியவை அல்ல.”
பிராட்காஸ்ட் என்றொரு இசைத் தட்டு கம்பெனி இருந்தது. அவர்கள் ‘சீதா கல்யாணம்’ செட் தயாரித்தார்கள். சீதையின் திருமணத்தின்போது ‘இயம் சீதா மம சுதா’ என்று ஜனகர் மந்திரம் கூறுவார். ‘சீதா கல்யாணம்’ செட்டில் இந்தப் பகுதியை செம்பை வைத்தியநாத பாகவதர் பாடியிருப் பார். இன்றைய கல்யாணங்களிலும் வேதிகர் இருந்தால் ‘இயம் சீதா’ இருக்கும்.
ஏனோ என் அப்பாவுக்குத் தியாக ராஜ பாகவதரைப் பிடிக்கவில்லை. ‘சிந்தாமணி’ என்ற படத்தில் அஸ்வத் தம்மா பாடியிருந்த ‘ஈன ஜன்மம் எடுத்தேன் ஐயனே, என்னை நீ ஏன் படைத்தாய் ஐயனே’ என்ற பாட்டு மட்டும் வாங்கினார். கேட்கிறவர்களுக்கும் அப்படி தோன்றும்.
எம்.எஸ். அவர்கள் ‘சாவித்திரி’ என்ற படத்தில் நடித்த பிறகு பல பாடகிகளின் இசைத்தட்டுகள் வெளிவந்தன. சுத்தானந்த பாரதியார் மவுனம் கலைத்து நிறையப் பாடல்கள் எழுதினார். அவரே பாடுவார். அவருடைய யோக சமாஜத் தில் பல மொழிகளில் அவருடைய ஏராளமான கையெழுத்துப் பிரதிகள். தமிழ்நாட்டின் மிகப் பெரிய இலக்கிய விருதாக நிறுவப்பட்ட ‘ராஜராஜன் விருது’ முதலில் அவருக்குத்தான் அளிக்கப்பட்டது.
- புன்னகை படரும்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT