Last Updated : 21 Aug, 2016 12:16 PM

 

Published : 21 Aug 2016 12:16 PM
Last Updated : 21 Aug 2016 12:16 PM

எம்.ஜி.ஆரின் வீடியோவும் அரசியல் புயலும்

எம்.ஜி.ஆரின் நண்பரும் லா ராயல் மெரிடியன் ஹோட்டலின் நிறுவனருமான டாக்டர் பழனி ஜி. பெரியசாமியின் சுயசரிதை ‘இதய ஒலி’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து பெரிய தொழிலதிபராக அவர் வளர்ந்தது, எம்.ஜி.ஆருடனான நட்பு என்று பல சம்பவங்களை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. அதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவமும் இடம் பெற்றிருக்கிறது.

1984-ல் சிகிச்சைக்காக அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்குத் துணையாக உதவியவர் பழனி ஜி. பெரியசாமி. அந்தச் சமயத்தில் இந்தியாவில் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது; கூடவே, தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருந்தது. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். இறந்துவிட்டதாகப் புரளிகளை எதிர்க் கட்சிகள் பரப்பிவிட்டுக்கொண்டிருந்தன. இதனால் அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு வெகுவாகக் குறைவதற்கு வாய்ப்பு இருந்தது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். உயிருடன், இயல்பாக இருப்பதுபோன்ற வீடியோ எடுத்துத் தமிழ்நாட்டுக்கு அனுப்பலாம் என்று பழனி ஜி. பெரியசாமி யோசனையை முன்வைத்திருக்கிறார். அதன் பேரில், மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். இயல்பாகச் செயல்படுவதுபோல் வீடியோ எடுத்து பழனி ஜி. பெரியசாமி தமிழ்நாட்டுக்கு அனுப்பியிருக்கிறார். பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களுக்குப் பிறகு வெற்றிகரமாகத் தமிழ்நாட்டில் அந்த வீடியோவைப் பரவலாக மக்களிடம் போட்டுக்காட்டினார்கள். மக்களும் எம்.ஜி.ஆர். உயிருடன் இருப்பதை உணர்ந்து அ.தி.மு.க.-வைப் பெருவெற்றி அடையச் செய்தார்கள். எம்.ஜி.ஆர். படுத்துக்கொண்டே ஜெயித்த கதை இப்படித்தான் வரலாறாக ஆனது. அந்த வரலாற்றின் ஒரு சுவடு ‘இதய ஒலி’யில் பதிவாகியிருக்கிறது.

இதய ஒலி- என் வாழ்க்கை அனுபவங்கள்

பழனி ஜி. பெரியசாமி

விலை: ரூ. 350

வெளியீடு: வானதி பதிப்பகம், சென்னை-17.

தொடர்புக்கு: 044-24342810.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x