Published : 17 Sep 2016 09:41 AM
Last Updated : 17 Sep 2016 09:41 AM
படைப்பாளிகளுக்கான விருது மடை மாற்றப்படுகிறதா?
சர்ச்சையைக் கிளப்பாத விருது எது? இது முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் பெயரில் உருவாக்கிய ‘கலைஞர் பொற்கிழி விருது’ உருவாக்கியிருக்கும் சர்ச்சை.
தமிழில் கட்டுரை, கவிதை, புனைகதை, நாடகம் ஆகிய துறையில் தொண்டாற்றிய அறிஞர்களுக்கும், இந்திய மொழி எழுத்தாளர் பிரிவில் ஒருவருக்கும், ஆங்கில மொழி எழுத்தாளர் ஒருவருக்கும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) மூலமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது இது. தமிழ் எழுத்து லகை ஊக்குவிப்பதற்காகத் தன் சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கியிருந்தார் கருணாநிதி. இந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுவந்தன. இந்நிலையில், எழுத் தாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகளை, தமிழ் வளர்ச்சிக்குத் தங்கள் வாழ்வை அர்ப் பணித்துக்கொண்ட, வயது முதிர்ந்த, நிதி உதவி தேவைப்படுகிற பெருமக்களுக்கு வழங்குவது என்று பதிப்பாளர் சங்கம் எடுத்த சமீபத்திய முடிவு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் சிலம்பொலி செல்லப்பன் (இலக்கியம்), கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் (உரைநடை), பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன் (கவிதை), கவிஞர் ஞா. மாணிக்கவாசகன் (நாடகம்), மெர்வின் (கட்டுரை), புலவர் வெற்றியழகன் (இலக்கணம்), பாபநாசம் குறள்பித்தன் (சிறுவர் இலக்கியம்) ஆகியோருக்கு வழங்கப் பட்டிருக்கும் நிலையில், தேர்வு முறையின் மாற்றம் குறித்து விமர்சித்திருக்கிறார் எழுத்தாளர் சா. கந்தசாமி.
“தமிழ் வளர்ச்சிக்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்கு விருது வழங்குவது என்பது வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால், அதற்கான நிதியை வேறு ஆதாரங்களின் மூலம் திரட்ட வேண்டும். கலைஞர் விருது முன்பு எந்தெந்தப் பிரிவுகளில் வழங்கப்பட்டனவோ அந்தந்தப் பிரிவுகளில் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். பிற மொழி எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட விருதைக்கூட நிறுத்தியிருப்பது ஏற்கத் தக்கதல்ல. ‘தமிழ் மொழி கொடுக்கும் பரிசாக நாம் பிற மொழி எழுத்தாளர்களுக்கு விருது வழங்க வேண்டும்’என்பது ஜெயகாந்தனின் விருப்பம். எனவே, கலைஞர் கொடுத்த நிதியை மடைமாற்றம் செய்யக் கூடாது” என்கிறார் சா.கந்தசாமி.
இது தொடர்பாக, பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசனிடம் விளக்கம் கேட்டோம். நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகச் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் இது என்கிறார் அவர். “பிற மொழி எழுத் தாளர்களுக்கு விருது வழங்கும்போது அவர் களில் பலர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வருவதில்லை. மேலும், ‘விருது அறிவிக்கப் பட்ட வேற்று மொழி எழுத்தாளரை விட, தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்களே. அவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை?’ என்றெல்லாம் விமர்சனங்கள் வருகின்றன. இன்னொரு முக்கிய விஷயம் இலக்கிய வகைமைகளை முடிவுசெய்வது. கவிதைக்கான பிரிவில் ஒரு விருது கொடுத்தோம் என்றால், ஏன் நவீனக் கவிதைக்குக் கொடுக்கவில்லை என்று கேள்வி வரும். இப்படி ஒவ்வொரு இலக்கிய வகைமைகளிலும் நிறைய உட்பிரிவுகள் இருப்பதால், பொதுவாக விருதுகள் கொடுக்கலாம் என்று முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. தேர்வுக் குழுவுக்கு நாங்கள் எந்த நிர்ப்பந்தமும் கொடுப்பதில்லை. கலைஞர் தரப்பில் இருந்தும் இதில் தலையிடுவதில்லை. முழுச் சுதந்திரத்துடன் செயல்படும் குழுவால் தேர்வுசெய்யப்படும் விருதுகள் இவை” என்கிறார் அவர்.
இந்த விஷயத்தில், நடைமுறைச் சிக்கல் களைத் தவிர்க்கும் வகையிலும், மனக் குறைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகை யிலும் ஒரு யோசனையை எழுத்தாளர் பிரபஞ்சன் முன்வைக்கிறார். “ஆங்கில எழுத்தாளர்களுக்கு வருமானத்துக்குக் குறை வில்லை. ஆனால், தமிழ்ச் சூழல் அப்படி யானது அல்ல. இந்திய மொழி எழுத்தாளர் களைப் பொறுத்தவரை, எந்த அயல் மாநில அமைப்பு, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிக் கலைஞர்களைக் கவுர விக்கிறதோ அந்த மொழிக் கலைஞர்களுக்கு மட்டுமே விருது களை வழங்கலாம் என்று நினைக்கிறேன். தமிழ்ப் படைப்பாளர் ஒருவருக்கும், அகவை முதிர்ந்து தேவை இருப்பவர்களுக்கு ஒன்றும், குழந்தை இலக்கியத்துக்கும், மொழிபெயர்ப்புக்கு ஒன்றும் என விருதுகள் இருக்கலாம்” என்று சொல்கிறார் பிரபஞ்சன்.
படைப்பாளிகளைப் பொறுத்தவரை அங்கீகாரம்தான் அவர்கள் தொடர்ந்து இயங் குவதற்கான ஆதாரம். துரதிர்ஷ்டவசமாக, தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களுக்கான கணிசமான பரிசுத் தொகையைக் கொண்ட விருதுகள் குறைவு. இப்படியான சூழலில் வழங்கப்படும் ‘கலைஞர் விருது’களுக்கான வரையறையை எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இரு தரப்பினரும் சர்ச்சைக்கு இடமின்றிக் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பம்!
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT