Published : 02 Jan 2016 10:55 AM
Last Updated : 02 Jan 2016 10:55 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பதிப்புத் துறையின் மீட்சிக்காக ‘தி இந்து’ அறைகூவல் விடுத்த ‘புத்தகங்களுடன் புத்தாண்டு இயக்கம்’ தமிழகம் முழுவதும் ஒரு புது அறிவியக்கமாக உருவெடுத்தது. வரலாற்றில் முதல்முறையாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவில் புத்தகக் கடைகள் திறக்கப்பட்டிருந்ததுடன், 10% - 40% சிறப்புத் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்பட்டன. பெருந் திரளான வாசகர்கள் புத்தகங்கள் வாங்கியதுடன் எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்திப்பு, உலகத் திரைப்படம் திரையிடல், புத்தக விவாதங்கள் எனப் பல்வேறு அறிவியக்கக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
சென்னையில்…
சென்னை ‘டிஸ்கவரி புத்தக நிலைய’த்தில் பதிப்பாளர் வேடியப்பன் ஒருங்கிணைத்த ‘புத்தக இரவு’க் கொண்டாட்டத்தில் திரளான வாசகங்கள் பங்கேற்றனர். தம்பதிகள், இளைஞர்கள், குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர் என்று கூட்டம் அள்ளியது. மூத்த பத்திரிகையாளரான ஞாநி, புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கமான ‘பபாசி’யின் நிர்வாகிகள் கே.எஸ். புகழேந்தி, ஒளிவண்ணன், எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, பாரதி கிருஷ்ணகுமார், ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் உள்ளிட்டோர் பேசினர்.
அற்புதமான முன்முயற்சி
“புத்தகங்களுக்காக இந்த நள்ளிரவில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடுகிறார்கள் என்பதே சந்தோஷம் கொள்ள வைக்கிறது. சமூக மறுமலர்ச்சிக்கான ஆயுதங்கள் புத்தகங்கள். ‘தி இந்து’ முன்னெடுத் திருக்கும் ‘புத்தகங்களுடன் புத்தாண்டு’ அற்புதமான ஒரு முன்முயற்சி” என்றார் மூத்த பத்திரிகையாளர் ஞாநி.
பொன்னெழுத்தில் பொறிக்கப்படும்
“புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு ‘தி இந்து’ தமிழில் தொடங்கப்பட்ட நாள் முதலே பெரும் உதவிகளைச் செய்துவருகிறது. புத்தாண்டு என்றால், மது அருந்துவதுதான் கொண்டாட்டம் என்றாகிவிட்ட சூழலில், இனி புத்தாண்டு என்றால், புத்தகங்கள் என்ற புதிய கலாச்சாரத்தைத் தொடங்கிவைத்திருக்கும் ‘தி இந்து’வின் முயற்சி பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டியது” என்றார் கே.எஸ். புகழேந்தி.
வரலாற்று நிகழ்வு
“வெள்ளத்தின் தொடர்ச்சியாக இப்படி ஒரு நிகழ்ச்சிக்குத் திட்டமிடப் பட்டாலும், இன்றைக்கு இந்தப் புத்தக இயக்கம் ஏற்படுத்தியிருக்கும் எழுச்சி காலத்துக்கும் இதைத் தொடர வழிவகுக்கும். அந்த வகையில் இது ஒரு வரலாற்று நிகழ்வு” என்றார் ஒளிவண்ணன்.
மழை தந்த கொடை
“வெள்ளம் எவ்வளவோ இன்னல்களைத் தந்துச் சென்றாலும் கூடவே சில நன்மைகளையும் தந்துச் சென்றிருக்கிறது. புத்தகங்களுடன் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வோம் இயக்கம் அவ்வகையில் நமக்கு வந்த கொடை” என்றார் பாஸ்கர் சக்தி.
வாய்ப்புகளை உருவாக்குங்கள்
“மிக அற்புதமான ஒரு சொல் சேர்க்கை இங்கே நடந்திருக்கிறது. புத்தகங்கள் + இரவு. புத்தாண்டு இரவில் மட்டும் அல்ல; எந்த இரவுகள் எல்லாம் விழித்திருக்கும் இரவுகளோ அந்த இரவுகள் எல்லாம் இனி ‘புத்தக இரவுகள்’ நடக்கட்டும். சிவராத்திரி, ஏகாதசி இரவுகளையும்கூட இனி நாம் விட்டுவைக்கக் கூடாது” என்றார் பாரதி கிருஷ்ணகுமார்.
வாசிப்புக்கு என்றும் ‘தி இந்து’ துணை நிற்கும்
“பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் பங்கேற்கும் நிகழ்வு சென்னைப் புத்தகக் காட்சி. ஆனால், நீண்ட காலம் ஒரு உள்ளூர் செய்தியாகவே அணுகப்பட்டது. தமிழகம் முழுக்க முழுப் பக்கத்தில் 10 நாட்களுக்குப் புத்தகக் காட்சி சிறப்பு மலரை வெளியிடும் கலாச்சாரத்தைத் தொடக்கிவைத்தது ‘தி இந்து’தான். சென்னையைத் தாண்டி சின்னச் சின்ன ஊர்களிலும் புத்தகக் காட்சிகள் பரவ வேண்டும் என்ற நோக்கிலேயே சிறுநகரங்களில் நடக்கும் புத்தகக் காட்சிகளுக்குக் கூட ‘தி இந்து’ பெரிய அளவில் கவனம் அளிக்கிறது. தமிழகத்தில் முழுமை யான மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், அறிவியக்கத்தால்தான் அதைச் சாதிக்க முடியும். புத்தகங்களாலும் வாசிப்பாலும்தான் அதைச் சாதிக்க முடியும். ஆகையால், புத்தக வாசிப்பை வளர்த்தெடுக்க என்றென்றும் ‘தி இந்து’ துணை நிற்கும்” என்றார் சமஸ்.
கலக்கல் எஸ்ரா
தொடர்ந்து, குழு விவாதங்கள், புத்தக அரட்டைக் கச்சேரி நடை பெற்றன. புத்தாண்டு நாளில் நடைபெற்ற புத்தக அறிமுகக் கூட்டத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். கசான்சாகிஸ் எழுதிய ‘ஜோபா தி கிரேக்’ நாவலை அறிமுகப்படுத்தி அவர் ஆற்றிய உரை பெரிய அளவிலான வாசகர்களை ஈர்த்தது.
எங்கும் கோலாகலம்
சென்னை, மதுரை, திருச்சி, சேலம் எனத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கிளைகளைக் கொண்ட ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’, ‘பாரதி புத்தகாலயம்’ இரு பதிப்பகக் கிளைகளிலும் உற்சாகமான கொண்டாட்டங்கள் நடந்தன.
“சென்னையில் உள்ள கடையில் மட்டும் ரூ.1.5 லட்சத்துக்குப் புத்தகங்கள் விற்றிருக்கின்றன. மாநிலம் எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். இதெல்லாம் பெரிய விஷயம்” என்றார் என்சிபிஹெச் பொதுமேலாளர் தி.ரத்தினசபாபதி.
“நம்ம பேப்பர்ல வந்த ‘புத்தகங்களைப் பரிசளிப்போம்’ அறிவிப்பைப் பார்த்துட்டு, சென்னை ஏஜிஎஸ் அலுவலகம், ஐசிஎஃப் அலுவலகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்னு பல்வேறு அமைப்புகள் அலுவலக நண்பர்களுக்குக் கொடுக்குறதுக்காக தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை வாங்கிக்கிட்டுப் போனாங்க. தவிர, பொதுமக்கள் கூட்டம் வந்துகிட்டே இருக்குது” என்றார் ‘பாரதி புத்தகாலயம்’ பதிப்பாளர் க.நாகராஜன்.
இப்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு புத்தக நிலையங்களிலும் விடிய விடியக் கொண்டாட்டங்கள் நடந்தன.
பள்ளி மாணவர்களின் பங்கேற்பு
திருச்சியில் எஸ்ஆர்வி பள்ளி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புத்தகங்களுடன் புத்தாண்டு வாழ்த்துக் கூறினர்.
அரசியல் கூட்டங்களிலும் புத்தகக் கொண்டாட்டம்
புத்தாண்டை ஒட்டித் திட்டமிடப்பட்டிருந்த அரசியல் நிகழ்வுகள் பலவற்றில் ‘புத்தகங்களுடன் புத்தாண்டு’ கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டது. திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில மாநாட்டில் கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, என்.சங்கரய்யா, பேராசிரியர் அருணன் ஆகியோர் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். சுமார் ரூ. 28 ஆயிரம் அளவுக்கான புத்தகங்கள் இங்கு விற்றன.
ஒளி பரவட்டும்
நல்லெண்ணத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் இந்த இயக்கம் இனி என்றென்றும் தொடரட்டும். நள்ளிரவில் தொடங்கிய இந்த இயக்கம் நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற நம் தேசம் எங்கும் அறிவொளியைப் பரப்பட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT