Published : 14 Nov 2013 10:32 PM
Last Updated : 14 Nov 2013 10:32 PM
கோடார்டின் 'பியராட் லே ஃபெள' படத்தில் வரும் வசனம்: "இதுதான் என்னை மிகவும் சோகமாக்குகிறது... வாழ்க்கை என்பது, புத்தகங்களில் வருவதைப்போல் இல்லை."
புத்தகம் வாழ்க்கையாகும் சாத்தியங்கள் உண்டோ இல்லையோ, வாழ்க்கை புத்தகம் ஆகும் சாத்தியங்கள் உண்டு.
இங்கிலாந்தைச் சேர்ந்த பெஞ்சமின் மீ-யின் வாழ்க்கை புத்தகமாகியிருக்கிறது. காரணம் அவர் தன் வாழ்க்கையில் எடுத்த ஒரு முடிவு. அந்த முடிவை எடுக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள்.
காதல் மனைவி இறந்து விட்டாள். மகன் டைலனும் மகள் ரோசியும் இந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். அதனால், தான் இப்போது குடியிருக்கிற வீட்டை அவசரமாக மாற்றியாக வேண்டிய நிலைமை மீக்கு. இடத்தை மாற்றினால் எல்லாம் சரியாகி விடுமென டேவான் பகுதியில் ஒரு வீடு பார்க்க, குழந்தைகளுக்கும் அது பிடித்து விடுகிறது.
இந்த இடத்தில் ஒரு சிக்கல்... அந்த வீட்டை தனியாக வாங்க முடியாது. அதன் பின்பகுதியில் இருநூறு வகை மிருகங்கள், பத்து பணியாட்கள் கொண்ட ஒரு மிருகக்காட்சி சாலையையும் அதனுடன் சேர்த்தே வாங்கியாக வேண்டும். 20 நொடிகள் யோசித்தபின் மீ அந்த வீட்டை வாங்கி விடுகிறார்.
மிருகக் காட்சிசாலையை சீரமைத்து பொதுமக்கள் பார்வைக்கு அதை திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் மீக்கு. வாழ்க்கை இப்போது போர்க்களம் ஆகிறது. கையிலிருக்கிற கடைசிப் பைசாவும் கரைந்து போகிறது. சான்றிதழ் தர வேண்டிய அதிகாரிகளோ மிருகக்காட்சி சாலையில் அங்கே குறை இங்கே குறை என்று ஒரு பெரிய பட்டியலை நீட்டுகிறார்கள்.
இச்சமயம் மீக்கு மனைவியின் வங்கிச் சேமிப்பான பெரிய தொகை கைக்கு வந்து சேர்கிறது. "அந்த பணத்தை வைத்து புத்திசாலித்தனமாக பிழைத்துக் கொள். மிருகக்காட்சிசாலை தொடங்கும் எண்ணத்தைத் தூக்கி ஏறி" என்கின்றனர் நண்பர்கள். ஆனால் மீ அதை பொருட்படுத்தவில்லை. அத்தனை பணத்தையும், நிறைய உழைப்பையும் கொட்டி கடைசியில் மிருகக்காட்சிசாலையை திறந்தே விடுகிறார்.
மீ தன் மனைவியை முதன்முதலில் சந்தித்தது ஒரு ஹோட்டலில். அவளைப் பார்த்ததுமே பிடித்துவிடுகிறது. உடனே அவளிடம் தன் காதலைச் சொல்ல மீக்கு வேண்டி இருந்தது அந்த இருபது நொடிகளே.
நம் வாழ்க்கையை மாற்றவும் புத்தகமாக்கவும் அந்த 20 நொடி தைரியம் போதும்தான். அதுவும் பிரியமானவளிடம் நம் காதலைச் சொல்ல பத்து நொடிகளே கூட போதும். ஆனால் வீட்டுடன் மிருகக்காட்சிசாலையை வாங்கிய மீயின் அந்த தைரியம் நமக்கு வருமா? சந்தேகம்தான். ஏனென்றால் நாம் புத்திசாலிகள்... நமக்கெல்லாம் புத்தகம் வாசித்தால் மட்டும் போதும்.
பெஞ்சமின் மீ என்கிற எழுத்தாளரின் வாழ்க்கை 'WE BOUGHT A ZOO' என்ற நாவலாகியது. 2008ல் கெமரூன் கிராவ் என்கிற அமெரிக்க இயக்குனர் இதை சினிமாவாகவும் எடுத்திருக்கிறார். புத்தகம் படித்த கையோடு நாம் அந்தப் படத்தை பார்க்கவும் செய்யலாம்.
இந்த கட்டுரையை / அந்தப் புத்தகத்தை படித்துவிட்டு அப்படியே விட்டுவிடாமல், நம் வாழ்க்கையில் '20 நொடி' அஸ்திரத்தை பிரயோகித்துப் பார்த்தால், நம் வாழ்க்கையும் நாளை புத்தகமாகலாம்! முயல்வோமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT