Published : 11 Jun 2017 12:23 PM
Last Updated : 11 Jun 2017 12:23 PM
கடந்த மாதத்தில் ஒரு நாள் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்துக்குச் சென்றேன். ரயிலில் இறங்கி ஏற அல்லாமல் வேறு ஒரு நோக்கத்தோடு இப்படி ரயில் நிலையம் செல்லும் தருணங்கள் அரிதாகத்தான் நிகழ்கின்றன. சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்துக்குப் பெரிய பெருமை ஒன்று உள்ளது. இந்துஸ்தானி இசையின் மிகப் பெரிய ஆளுமையான அப்துல் கரீம் கான் (11.11.1872 27.10.1937) இறுதி மூச்சு விட்ட நிலையம் அது.
இந்துஸ்தானி இசையின் மயக்கும் காந்தங்களில் ஒருவர் அப்துல் கரீம் கான். அந்த அளவுக்குப் பெண்மை ததும்பும் ஆண்குரல்கள் மிகவும் குறைவு. அவருடைய சங்கீதம், குரல் இனிமை இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. இந்துஸ்தானி இசை ரசனையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களையும் ஈர்க்கும் ஆளுமை அவர். இந்தியாவில் இசைத்தட்டில் முதன்முதலில் ஒலிக்க ஆரம்பித்த இசை ஆளுமைகளில் இவரும் ஒருவர் என்றே அறிகிறேன். அப்துல் கரீம் கான் நம்மூர் பாலசரஸ்வதியின் நண்பரும் கூட. கர்னாடக சங்கீதத்தையும் கற்றிருக்கிறார் என்பதை வைத்துப் பார்க்கும்போது இசை குறித்து திறந்த மனதை அவர் கொண்டிருந்தார் என்பது தெரியவருகிறது. அவர் விட்டுச்சென்ற இசைச் சொத்துக்களில் அவருடைய மகள் ஹீராபாய் படோடேகரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தந்தையைப் போலவே அந்தக் குரலில் அவ்வளவு கனிவு, அவ்வளவு தேன்!
மெட்ராஸுக்கு வந்திருந்த அப்துல் கரீம் கான் புதுச்சேரி செல்வதற்காக ரயில் ஏறியிருக்கிறார். சிங்கபெருமாள் கோவில் நிறுத்தம் வந்தபோது அவர் அசௌகரியமாக உணர்ந்திருக்கிறார். ஆகவே, ரயிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார். மருத்துவரீதியான உதவி கிடைக்கும் முன் அவருடைய இறுதி மூச்சு காற்றில் கலந்துவிட்டிருந்தது. விக்கிபீடியாவில்கூட இந்தத் தகவல் இல்லை. இந்திய சாஸ்திரிய இசை வரலாற்றாசிரியர் வி. ராம் ஒரு கட்டுரையில் அப்துல் கரீம் கான் மரணத்தைக் குறித்துச் சொல்லும்போது மேற்கண்ட தகவலைத் தருகிறார்.
சிங்கபெருமாள் கோவிலுக்குப் போகிறேன் என்று சொன்னதும் நண்பர் ஒருவர், “ஸ்டேஷனில் இரு பக்கமும் நடந்து பாருங்கள். அப்துல் கரீம் கான் பற்றிய ஏதாவது நினைவுச் சின்னம், குறிப்பு தென்படுகிறதா என்று தேடிப்பாருங்கள்” என்றார். சிங்கபெருமாள் கோவில் நிலையத்துக்கு வந்தவுடன், நண்பர் சொன்னதுபோல் எனது தேடலை ஆரம்பித்தேன். இரண்டு பக்கமும் மெதுவாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். பிலாவல், மார்வா ராகங்களில் அமைந்த அவரது நான்கு, ஐந்து நிமிட நேர அற்புதத் துணுக்குகளைக் காதில் ஒலிக்க விட்டுக்கொண்டே இந்தத் தேடலை நிகழ்த்தினேன்.
அவரது மரணம் தொடர்பான தகவல்கள், நினைவுச்சின்னங்கள் ஏதும் அங்கே கிடைக்கும் என்ற எண்ணம் துளிகூட தொடக்கத்திலிருந்தே இல்லை. ஆயினும் இந்த நிலையத்துக்கு வந்து சேர்ந்ததிலிருந்து இசைவயமான ஒரு ஏகாந்தம் மனதில் உருவானது. அப்துல் கரீம் கானின் குரலும் ரயில் நிலையத்தின் அப்பட்டமான வெயிலும் அருகிலிருந்த ஒரு மரத்திலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த குயிலின் கூவலும் இந்த ஏகாந்த நிலையை மனதுக்குள் உருவாக்கின.
எண்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் இங்கே உயிர் விட்டிருக்கிறார். ஆனால், எண்பது ஆண்டு காலப் பழமை வாய்ந்த ஏதும் அங்கு தென்படவில்லை. என்ன மரம் என்று கண்டுபிடிக்க முடியாத மரமொன்று வர்தா புயலில் வீழ்ந்துபோய், இலைகளும் இல்லாமல், வேர்களின் அந்தரங்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரம் அங்கு இருந்ததா என்பது தெரியவில்லை. எனினும், எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய தரையில்தான் இந்த மரம் வளர்ந்து இன்று சாய்ந்தும் போயிருக்கிறது. இந்தத் தரையின் மேற்பரப்பில், பல கோடி அணுக்களைக் கொண்ட அவரது இறுதி மூச்சுக் காற்றின் ஏதாவது ஒரு அணுத்துகளாவது இன்னும் தங்கியிருக்கும் என்ற உணர்வு என்னுள் உறுதியாக இருந்தது.
ரயில் நிலையம் முழுவதுமே சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டோ, அல்லது அதற்கு முந்தைய சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பழமை கொண்டதாகவோதான் காட்சியளித்ததே தவிர வேறு சில ரயில் நிலையங்களைப் போல நூற்றாண்டு பழமையைச் சுமந்துகொண்டிருக்க வில்லை. மேற்குப் பக்கத்தில், தாம்பரத்தை நோக்கியிருந்த, நிலையப் பெயர்ப் பலகை மட்டும் பழசு போல் தெரிந்தது.
ரயில் நிலையங்கள் அவற்றின் வரலாறு குறித்த ஆவணங்களை வைத்திருக்குமா என்று தெரியவில்லை. இந்த ரயில் வந்தது, அந்த ரயில் போனது, இன்னொரு ரயில் விபத்துக்குள்ளானது என்பதைத் தாண்டியும் ரயில் நிலையத்துக்கு வரலாறு இருக்கிறது என்பதை அப்துல் கரீம் கான் நமக்கு உணர்த்துகிறார். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஏகாந்தத்தையே சுமந்துகொண்டிருக்கும் ரயில் நிலையம், தன் இசையால் ஒவ்வொருவரிடமும் ஏகாந்தத்தை உருவாக்கிய அப்துல் கரீம் கான் என்று இரண்டு ஏகாந்தங்கள் ஒன்றையொன்று குறுக்கிட்டுக்கொண்ட, யாருமறியாத வரலாறு இது.
எண்பது ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பெரிய இசை ஆளுமை இங்கே உயிர்விட்டிருக்கிறார். அது குறித்த ஒரு நினைவுகூட இங்கே எஞ்சியிருக்கவில்லை. மேலைநாடுகளில் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேதை இப்படி உயிர்விட்டிருந்தால் அந்த இடமே நினைவுச்சின்னமாக ஆகியிருந்திருக்கும். ஒருவேளை, இந்தியக் கலையும் இந்திய மனமும் அடையாளமற்றுப் போவதுதானோ என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.
அப்துல் கரீம் கானின் நினைவு ஏதும் இங்கு தவழ்ந்துகொண்டிருக்குமா என்று தேடிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த மரத்திலிருந்து குயிலொன்று கூவிக்கொண்டி ருந்தது. அந்த மரத்துக்குக் கீழே போய் நின்று குயிலைத் தேடிப் பார்த்தேன். சற்று நேரம் கண் ஒடுக்கிப் பார்த்த பிறகு குயில் புலப்பட்டது. குயிலைத் தேட ஆரம்பித்தபோதே அது தன் பாடலை நிறுத்திவிட்டது. குயிலும் அப்துல் கரீம் கானும் ஒன்றல்ல, அவரின் ஆன்மா இதுவல்ல என்றாலும் ஒரே பிரபஞ்ச சங்கீதத்தை அள்ளிக் குடித்த உயிர்கள் என்ற வகையில் அந்தக் குயிலில், அதன் குரலில் அப்துல் கரீம் கானை தரிசித்ததாக உணர்ந்தேன். அதை நான் கண்டுவிட்ட பிறகு அது மறுபடியும் கூவவே இல்லை. அதன்பின், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுவிட்டேன்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT