Published : 30 Jul 2016 10:44 AM
Last Updated : 30 Jul 2016 10:44 AM
எங்கள் வீட்டில் தாத்தா, அப்பா, அம்மா என அனைவரும் வார இதழ்களில் வரும் தொடர்கதைகளின் தீவிர வாசகர்கள். சாண்டில்யனின் ‘கடல்புறா’ தொடங்கி, கல்கி,ரா.கி.ரங்கராஜனின் தொடர்களை விரும்பிப் படிப்பார்கள். என் தாத்தா உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தபோது, அவரருகே உட்கார்ந்து கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நான் வாசித்துக் காட்டியது இன்னமும் நினைவில் ஈரமாய் இருக்கிறது.
விருதுநகரில் என்னோடு விளையாடக் குழந்தைகள் யாருமில்லை. நூலகம்தான் என் வாசஸ்தலமானது. நூலகம் திறந்ததிலிருந்து மூடும்வரை புத்தகங்களை வாசிப்பேன். சுஜாதா, பாலகுமாரன், மணியன் ஆகியோரின் அனைத்து எழுத்துக்களையும் விடாது படித்தேன். இடையில், க்ரைம் நாவல்களின்மீது ஒரு ஈர்ப்பு வந்தது. இந்த வாசிப்பெல்லாம் பத்தாம் வகுப்புவரைதான்.
பாலகுமாரனின் ‘இரும்புக் குதிரைகள்’ நாவல் என்னை அப்படியே புரட்டிப்போட்டது. சினிமா மீதான காதலோடு சென்னைக்கு வந்த பிறகுதான், நவீன இலக்கியத்தின்மீது என் பார்வை திரும்பியது. ஜி.நாகராஜன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கோணங்கி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என்று என் வாசிப்பு தொடர்ந்தது.
நவீன எழுத்தாளர்களின் படைப்புகளோடு மட்டுமின்றி, அந்த எழுத்தாளர்களோடு நட்பு கொள்ளும் சூழலும் அமைந்தது. நான் வாசித்த நல்ல புத்தகத்தைப் படமாக எடுப்பதும், எழுத்தாளர்களுடனான உரையாடலிலிருந்து உந்துதல் பெறுவதுமாக என் திரைப்பட ஆக்கத்தில் இலக்கியமும் இணைந்தே பயணித்துவருகிறது.
அறமில்லாத மனிதர்கள் மலிந்துபோன நிலையில், நம்மை இன்னும் அற உணர்வோடு வாழ வைப்பவை இலக்கியங்களே என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
நாவல்களே என் வாசிப்பில் விருப்பமானவை என்றாலும், சமீபத்தில் வாசித்த இயக்குநர் என்.லிங்கு சாமியின் ‘செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்’ எனும் ஹைக்கூ கவிதை நூல் என்னைக் கவனிக்க வைத்தது. மிகுந்த மனநெருக்கடிகள் தருகிற திரைத்துறையில் இருந்துகொண்டு, கவிதை மனதோடு இயங்கிவருபவர் லிங்குசாமி. மிகக் குறைந்த வார்த்தைகளில் சின்னச் சின்னக் காட்சிகளை கவிதைக்குள் ஓவியமாய்ப் பதிந்து வைத்துள்ளார் லிங்குசாமி.
புத்தகத்தைக் கையிலெடுத்து வாசித்ததும் நம்மை வேறொரு மனநிலைக்குக் கொண்டுபோகும் கவிதைகளாக உள்ளன. ஒவ்வொன்றும் ஏதாவதொரு புதிய காட்சியை நமக்குக் காட்டுவதாக இருக் கின்றன.
‘ரோஜா விற்பவனின்/ குரலில் முள்.’
‘தற்கொலை செய்துகொள்ள மனமில்லை/கிணற்றில்/
நிலவைப் பார்த்த பிறகு.’
இப்படித் தொகுப்பு முழுவதுமுள்ள மாண்டேஜ் கவிதைகள் ஒவ்வொன்றையும் என்னால் ஒரு படமாக எடுக்க முடியும். பாடல் காட்சிகளில் நடனம் வைப்பதைவிடவும், இப்படியான மாண்டேஜ் காட்சிகள் வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்நூலும் எனக்குப் பிடித்துப்போய் விட்டது.
எனக்கு நல்ல நட்பாகவும், எனக்குள் ஒரு உத்வேகம் தரும் சக்தியாகவும் வாசிப்பே உள்ளது. வெயில், அங்காடித் தெரு என என் படங்களின் வரவுகூட வாசிப்பினால் நான் பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடுதான் என்பேன். இப்போது நான் இருக்கும் இந்த இடத்தைப் பெற்றுத்தந்திருப்பதும், என்னை உயிர்த்திருக்க வைத்திருப்பதும் புத்தகங்களே.
- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT