Last Updated : 11 Feb, 2017 10:13 AM

 

Published : 11 Feb 2017 10:13 AM
Last Updated : 11 Feb 2017 10:13 AM

பெரியாரைப் பெரியாராகப் படிக்க ஒரு பெருமுயற்சி: பசு. கவுதமன் பேட்டி

பெரியாரியச் செயல்பாடுகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் பசு. கவுதமன் (வயது 61). ‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான்’ (தொகுப்பு), ‘ஏ.ஜி. கஸ்தூரி ரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ போன்ற நூல்களின் ஆசிரியர். தற்போது பெரியாரின் அனைத்து எழுத்துக்களையும் உரைகளையும் தொகுக்கும் மாபெரும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். இந்த தொகுப்பு ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?’ என்ற தலைப்பில் என்.சி.பி.எச். வெளியீடாக மார்ச் மாதம் வரவிருக்கிறது.பசு. கவுதமனுடன் பேசியதிலிருந்து…

பெரியார் முதன்முதலில் உங்களுக்குள் எப்படி விதைக்கப்பட்டார்?

நான் சுயமரியாதைக் குடும்பத்துப் பெற்றோருக்குப் பிறந்து ஆளானவன். எனவே, பெரியார் என்னுள் விதைக்கப்படவில்லை. அவர் என்னுள் இயல்பிலேயே இருந்தார் என்பதுதான் உண்மை. அவரது சிந்தனைகளை நான் என்னுள் வளர்த்தெடுத்துக்கொண்டேன்.

ஏற்கெனவே உள்ள தொகுப்புகள் முழுமையானவை இல்லையா?

1934-லிருந்தே பெரியாரின் பதிவுகள் தொகுப்புகளாக வரத் தொடங்கிவிட்டன. ஆனால், அவை பெரும்பாலும் ‘தேர்ந்தெடுக் கப்பட்ட பகுதி’களின் தொகுப்புகளாகவே இருந்தன, இருக்கின்றன. இவை எல்லாமும் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு உட்பட்ட தொகுப்புகள்தான். அந்த வகையில் முழுமை யானவை. ஆனால், பெரியார் இன்னும் இருக்கிறார்; இன்னும் தேவைப்படுகிறார். எனவே, முழுமையான தொகுப்புகள் தேவைப்படுகின்றன.

இந்தப் பெரும் தொகுப்பின் முக்கியமான அம்சங்கள் என்ன?

1925-லிருந்து 1973 வரை மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, தத்துவம் குறித்தும் தந்தை பெரியார் எழுதியவையும் பேசியவையும், சித்திரபுத்திரன் என்ற பெயரில் எழுதியவையும் ஐந்து தொகுதிகளாகக் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் குறித்த பெரியாரின் பதிவுகள் ‘மொழி’ என்ற பெயரில் முதல் தொகுதியாகவும், மநுதர்மம், கீதை, இராமாயணம், தமிழ் இலக்கியங்கள் போன்றவை பற்றிய பெரியாரின் விமர்சனப் பதிவுகள் ‘இலக்கியம்’ என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இசை, நாடகம், சினிமா, இதழியல் ஆகியவற்றில் தந்தை பெரியாரின் பதிவுகளோடு பிறரின் நூல்களுக்கு அவர் வழங்கிய மதிப்புரைகள், அறிமுக உரைகள் போன்றவை ஏராளமானவை. அவற்றோடு, தமிழர் திராவிடர் பழக்கவழக்க, பண்பாட்டுக் கூறுகள், அவை பார்ப்பனியத்தால் எவ்வாறு தன்வயப்படுத்தப்பட்டன என்பது பற்றிய பதிவுகளும் ‘கலையும் பண்பாடும்’ என்ற தலைப்பில் மூன்றாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

தத்துவத்துக்கு மத வர்ணம் பூசப்பட்டது எப்படி என்பது குறித்து பெரியார் பல்வேறு சமயங்களில் எழுதியும் பேசியுமிருந்திருக் கிறார். அத்துடன் அவர் எழுதிய இரங்கல் செய்திகள், பெட்டிச் செய்திகள், துணுக்குகள், சொற்சித்திரங்களாக ‘தத்துவம்- சொற்சித்திரம்’ என்ற தலைப்பில் நான்காவது தொகுப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் எழுதிய எழுத்துக்கள் மிகவும் வீரியமுள்ளவை. அன்றைய அரசியலையும் சமூகச் சூழலையும் பல்வேறு பாத்திரங்கள் வழியே நக்கலும் நையாண்டியுமாக அவர் பதிவு செய்திருக்கும் விதம் அலாதியானது. அவை முழுவதுமாக ‘சித்திரபுத்திரன் பதிவுகள்’ என்ற தலைப்பில் ஐந்தாவது தொகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மாபெரும் பணியின் பின்னுள்ள உழைப்பு குறித்துச் சொல்லுங்களேன்?

மூலப் பிரதிகளைப் படித்து, அவற்றிலிருந்து சற்றேறக்குறைய ஏ-4 அளவில் டி.டி.பி. செய்யப்பட்ட 9,018 பக்கங்களை மீண்டும் மீண்டும் வாசித்தேன். அவற்றைக் கால வரிசைப்படி, அந்தந்தத் தலைப்புக்குள் ஒழுங்கமைத்து 6,000 பக்கங்களாகக் குறைத்து, இறுதியாக 4,000 பக்கங்களாக்கித் தொகுத்திருக்கிறேன். ஐந்தாண்டு கால உழைப்பு இது! தொடர்ச்சியான பணியால் எனது வலது கண் பார்வை பாதிக்கப்பட்டு ஆறு மாத காலம் இடைவெளி ஏற்பட்டது. இப்போது நினைத்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், பெரியாரைப் பெரியா ராக, பதவுரை, பொழிப்புரை ஏதுமின்றிப் படிக்க வேண்டும், படிப்பிக்க வேண்டும் என்ற என்னுடைய தேடலின் வெளிப்பாடு இது.

தரவுகளைப் பொறுத்தவரை என்னுடைய தந்தையார் தஞ்சை ந. பசுபதி, எனது மாமனார் மண்ணச்சநல்லூர் ச.க. அரங்கராசன் ஆகியோரின் நூல் சேகரிப்பும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியின் ‘குடிஅரசு’ சேகரிப்பும் பெரிதும் துணைநின்றன. அதுபோலவே விடுதலை இதழ்களை ஒருசேரப் படித்துவிட்டுக் குறிப்புகள் எடுக்க அனுமதி கேட்டபோது, எனக்கு அனுமதி வழங்கிய ‘விடுதலை’ ஆசிரியரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆரம்ப காலப் பெரியாருக்கும் இறுதிக் காலப் பெரியாருக்கும் இடையிலுள்ள வித்தியாசங்கள் என்னென்ன?

முதலில் காங்கிரஸ் ராமசாமி; அடுத்து நீதிக்கட்சி ராமசாமி; பின்பு சுயமரியாதை இயக்க ராமசாமி. இப்படி வேண்டுமானால் வித்தியாசப்படுத்தலாம். ஆனால், அவர் எல்லாத் தளங்களிலும் பெரியார் ஈ.வெ. ராமசாமியாகத்தான் இருந்தார்.

“ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன்” என்ற வரையறையில் தொடங்கி “உங்களையெல்லாம் சூத்திரனாகத்தானே விட்டுவிட்டுச் சாகிறேன்” என்ற ஆதங்கமுமாக இறுதிவரை அவரது களமும் தளமும் சாதி ஒழிந்த, சுயமரியாதை மிக்க, சமதர்ம சமூகம்தான்.

அடுத்தடுத்த திட்டங்கள்?

பெரியார், அடையாளப்படுத்தப்பட்டுள் ளதைக் காட்டிலும் இன்னும் அறியப்பட வேண்டியவராக இருக்கிறார். பெரியார், இன்றும் என்றும் தேவை என்பதை இந்தச் சமூகம் உணர்கிறது, உணர்த்திக்கொண்டிருக்கிறது. எனவே, பெரியாரைப் பெரியாராகப் படிக்க, படிப்பிக்க என் தேடல் இன்னும் தொடர்கிறது.

-ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x