Published : 03 Jan 2016 01:28 PM
Last Updated : 03 Jan 2016 01:28 PM
கார்த்திகைப் பாண்டியனின் ‘மரநிறப் பட்டாம் பூச்சிகள்’ சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் பனிரெண்டு சிறுகதைகளிலும் நிச்சயமற்று, தற்செயல்களின் தான்தோன்றியான வழிகளில் செல்லும் வாழ்க்கையே காணக் கிடைக்கிறது. சில கதைகள் அதிர்ச்சியூட்டுகின்றன. சில கதைகள் பயமுறுத்துகின்றன. சில கதைகள் அருவருப்பூட்டுகின்றன.
சில கதைகள் நம்மை யோசிக்கவைக்கின்றன. எந்தக் கதையிலும் அன்பெனும் ஈரப்பதமோ, (விதிவிலக்காக அந்தர மீன்) அறம் சார்ந்த மதிப்பீடுகளோ, சமூகப் பிரச்சினைகளோ, ஒழுக்கம் சார்ந்த வருத்தங்களோ முன்பின் தொடர்ச்சியோ, ஆசிரியரின் கூற்றுகளோ, தீர்ப்புகளோ இல்லை. ஆனால் கார்த்திகைப் பாண்டியன் இவையெல்லாவற்றைப் பற்றியும் சொல்கிறார். ‘மரநிறப் பட்டாம் பூச்சிகள்’ தொகுப்பு நம்மைப் பதைபதைக்கவும் வதைக்கவும் செய்யும்.
முதல் கதையிலேயே கார்த்திகைப் பாண்டியன் என்ன மாதிரியான கதாலோகத்துக்குள் நுழையப்போகிறோம் என்பதற்கேற்றவாறு நம்மைத் தயார்படுத்திவிடுகிறார். பிளவுபட்ட மனப்பிறழ்வு நோய் பீடித்த ‘அந்தர மீ’னில் வரும் பெண் வேறு வேறு மனநிலைக்கு மாறிக்கொண்டேயிருக்கிறாள். நட்சத்திரமாக, குளமாக, தங்கமீனாக, வர்ண மேகமாக அன்பை யாசித்திருக்கும் அந்தப் பெண்ணை யாரும் புரிந்துகொள்ளவில்லை. கௌதமின் திருமணச் செய்தி அவளை உடைந்து சிதறச்செய்கிறது. பிறழ்வின் மனநிலைக்கு மிக நெருக்கமான சித்தரிப்பில் வெற்றிபெறுகிறார் கார்த்திகைப் பாண்டியன். தப்பித்தல்கள் இல்லாத வாழ்க்கையின் பிரதிநிதி அவள்.
வாழ்க்கையின் கொடூரத்தை நம் முன்னால் அப்படியே கொண்டுவருகிற ‘பெருத்த மார்புகளுடைய’ ஆணின் கதையில் வருகிற திருக்குமரனும், தன் வாழ்வின் விதிக்கு, பெருத்த தன் மார்புகளே காரணம் என்று நினைக்கிறான். அதற்குப் பழிவாங்க ஒரு பெண்ணின் மார்பை அறுத்தெறிகிறான். குழந்தையை இழந்த பாலியல் தொழில் செய்யும் லதாரஞ்சனி அவனைக் குழந் தையாகவே நினைக்கிறாள். அவனால் அந்த அவமதிப் பைத் தாள முடியவில்லை. வாசிக்கும்போது பயமாகத் தானிருக்கிறது. ஆனால் திருக்குமரன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அபத்தங்களின் தரிசனங்களாக ‘மரநிறப் பட்டாம் பூச்சிகள்’ கதை திகழ்கிறது. தங்களின் நிறத்தால் பிறரைக் கவரும் வரம்பெற்ற பட்டாம் பூச்சிகளுக்கிடையே தன்னை மறைத்துக்கொள்ள நிறம் பெற்ற மரநிறப் பட்டாம் பூச்சிகளைப் போல நான்கு தனித்தனியாக நிகழ்வுகளின் முடிச்சை ஒன்றுசேர்க்கிறார். இந்த மாதிரியான கதை சொல்லலாக இந்தத் தொகுப்பில் நிழலாட்டம், மரநிறப் பட்டாம் பூச்சிகள், சிலுவையின் ஏழு வார்த்தைகள், ஆகிய கதைகளில் மிக இயல்பாகத் தன் பார்வையை எழுதிச் செல்கிறார்.
வாழ்க்கையை அபத்தங்களின் தரிசனமாக, தற்செயல்களின் தொகுப்பாக கார்த்திகைப் பாண்டியன் பார்க்கிறார். தொகுப்பின் கதைகளை வாசிக்கும் வாசகன் மெய் மறந்து போக முடியாது. அவனுடைய இருத்தலே முள்ளாய் உறுத்தும். தமிழ்ச் சிறுகதை உலகுக்கு நல்வரவு எதிர் வெளியீடு வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT