Published : 12 Oct 2014 12:53 PM
Last Updated : 12 Oct 2014 12:53 PM
நெஞ்சின் நடுவே’, ‘கறிச்சோறு’ என்ற இரு நாவல்கள் தமிழ் இலக்கியத்தில் எண்பதுகளில் தமிழின் முக்கிய நாவல்களாகப் பேசப்பட்டவை. இன்றளவும் தனது பங்களிப்பை தமிழ் நாவல் உலகுக்குத் தந்துகொண்டிருக்கும் சி.எம்.முத்து தமிழ் இலக்கியத்தில் ஆறியப்படாத ஆளுமையாகவே இருந்துவருகிறார். 1950-ம் வருஷம் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி இடையிருப்பு என்ற தஞ்சாவூர் மாவட்டத்துக் கிராமம் ஓன்றில் சந்திரஹாசன், கமலாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
காவிரி டெல்டா மாவட்டத்து விவசாய வாழ்வு, மண்குடுவை, வில்வண்டி என்ற அக்காலத்திய மனிதர்களையும், அவர்களின் வாழ்வையும், வெளியையும், தமிழில் தனது 300 சிறுகதைகளின் மூலமாகவும், ‘நெஞ்சின் நடுவே’ முதல் தற்போது அவர் எழுதிக்கொண்டிருக்கும் ‘மிராசு’ நாவல் வரை ஏறத்தாழ தனது 10 நாவல்களின் மூலமாகவும் பதிவுசெய்து வரும் ஆளுமை இவர்.
தி.ஜானகிராமனால் புகழப்பட்டவர்
தஞ்சாவூர் மாவட்டத்தை நான் எழுதியதைக் காட்டிலும் சி.எம்.முத்து நிறையவே எழுதிவிட்டார் என்று தி.ஜானகிராமனால் புகழப்பட்டவர். ந.பிச்சமூர்த்தி, தி.ஜ.ரா., எம்.வி.வி., கரிச்சான்குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ் போன்றவர்களின் நட்பைப் பெற்றவர்.
வெறும் 100 பக்கங்களை எழுதிவிட்டுத் தன்னை முன்வைக்கத் துடிக்கும் இன்றைய இலக்கியச் சூழலில் சி.எம்.முத்து என்ற நதி சுமார் பத்தாயிரம் பக்கங்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது மவுனமாக. மனிதர்களின் மனச் சித்திரங்களைத் தனது புறவயமான எழுத்தின் மூலமாகப் பதிவு செய்த படைப்பாளிகள் முக்கியமானவர்கள். ஓரு காலகட்டத்திய மனிதர்களை, அவர்களின் வாழ்வை, புழங்கு தளத்தை வெளிப்படுத்தியவர்கள். அந்த வகையில் 50 ஆண்டுகாலத் தஞ்சாவூர் மாவட்டத்து வாழ்வைப் பதிவு செய்த படைப்பாளி சி.ஏம்.முத்து.
நாடோடி எழுத்து வகை
நாடோடித் தன்மையான எழுத்து வகைக்கென்று ஓரு தனி ருசி உண்டு. அந்த எழுத்து முறை இவரது எழுத்து பாணி. அந்த வகையில் எழுத்தில் சூதுக்கும், உற்பத்திக்கும் வேலையே இல்லை. இந்த விஷயத்தை எழுத்தாளர் வல்லிக்கண்ணன் வார்த்தையில் சொன்னால், “தஞ்சை கிராமங்களில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்க்கையை சி.எம்.முத்துவின் எழுத்து சுவாரசியமாக விவரிக்கின்றது. தஞ்சை மாவட்டத்தின் சிற்றூர் ஓன்றைச் சேர்ந்த இக்கலைஞர் கிராம மக்களோடு கலந்து வாழ்ந்து அனுபவம் பெறுகிறார். தனித்துவமான எழுத்து நடுகை இவருடையது”.
‘கறிச்சோறு’ நாவல் சாதியைப் பேசுகிறது என்ற விமர்சனங்களை இப்படைப்பாளி சந்திக்க நேர்ந்த காலகட்டத்தில்,
“சாதி எங்கே ஒழிந்திருக்கிறது. நாளுக்கு நாள் அதன் வேரின் நீட்சி வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனது காலகட்டத்திய எழுத்து சாதியைப் பற்றியல்ல, சாதிக்குள் இருக்கிற சாதியைப் பற்றியது” என்று துணிச்சலாகக் குரல் கொடுத்த படைப்பாளி சி.எம். முத்து.
இனிமையான பேச்சுமொழி
தீர்மானகரமான முடிவுகளை வலிந்து திணிக்காமல், தனது வாழ்க்கையில் வெவ்வேறு சாயல்களுடன் யதார்த்தமாகக் கண்டதைப், படைப்பாகப் பதிவு செய்துள்ளார். அதுவே வாழ்க்கைக்கு அர்த்தமும் புதிய பரிமாணமும் சேர்ப்பதாய் அமைந்துவிட்டிருக்கிறது. சி.எம்.முத்துவின் படைப்புகள் பாசாங்கற்ற பாணியில் நேர்த்தியான எழுத்து நடையில் இனிமை தரும் பேச்சு மொழியில் அமைந்தது. தஞ்சை வட்டாரத் தமிழில் தனிச்சிறந்த படைப்பாளுமையோடு சித்திரமாகியுள்ளது என்று எழுத்தாளர் சா.கந்தசாமி குறிப்பிட்டுள்ளார்.
விவசாயி எங்கே?
தஞ்சை மாவட்டத்துக் காவிரி விவசாயி இன்றைக்கு எங்கிருக்கிறான்? வைக்கோலிலிருந்து மஞ்சள் பூ பூத்துக் கிடந்த அவனது ‘போரடி’ எங்கே? நெல் குதிர்கள் எங்கே? விதை நெல்களை பாதுகாக்கும் ‘கோட்டை’கள் எங்கே? காவிரி டெல்டா மாவட்டத்து விவசாயியின் தற்கொலை வாழ்வையும் எலிக்கறி தின்ற அவனது அவல வாழ்வையும், விவசாயப் பின்னடைவையும் ‘மிராசு’ நாவலில் பதிவுசெய்து கொண்டிருக்கிறார்.
சடங்கார்ந்த வாழ்வையும், நெற்குதிர்கள், மரக் கலப்பைகள், காளை மாடுகள், கூண்டு வண்டிகள், மண்பாண்டங்கள் என்ற புராதனச் சாயைகளைச் சொல் நடவாக அல்லாமல், கதை நடவாக கிராமத்துப் பிரபஞ்சத்தை நித்யமாய் ஸ்தாபித்துப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
கட்டுரையாளர், கவிஞர்,
தொடர்புக்கு: ananya.arul@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT