Published : 25 Oct 2014 03:12 PM
Last Updated : 25 Oct 2014 03:12 PM
ஒரு லட்சம் புத்தகங்கள் சூழ்ந்த ஒரு வீடு, அவற்றின் நடுவே ஒரு வாழ்க்கை... ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறார் பாலசுப்பிரமணியன்.
யார் அந்தக் காதலன் வேட்டை?
திருச்சியில் சமீபத்தில் புத்தகக் காட்சி நடை பெற்றது. இதை நடத்திய ரோட்டரி சங்கம் ஒரு சுவாரஸ்ய மான வேட்டையை அறிவித்தது. நகரிலேயே அதிக மான புத்தகங்கள் வைத்திருப்பவர்கள் யார் என்று ஒரு அறிவிப்பை வெளியிடுவது, அதற்கு முன் மொழிபவர்களின் வீடுகளுக்கு ஒரு குழுவாகச் சென்று அதிகமான புத்தகங்களை வைத்திருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் புத்தகக் காதலர் விருது வழங்குவதே இந்த வேட்டை.
இந்த வேட்டைக்குத் தயாராக இருந்த பலருடைய வீடுகளுக்கும் சென்ற குழுவினர் பாலசுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்றபோது மிரண்டு போயினர். வீடு முழுவதும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்...
வாசிப்பும் வாழ்க்கையும்
பொறியாளரும் நிர்வாகவியல் ஆலோசருமான பாலசுப்பிரமணியனிடம் பேசினால், பேசப் பேச ஆச்சர்யங்கள் கொட்டுகின்றன.
“எங்கப்பா கனகசபை, பொதுப்பணித் துறையில் பொறியாளராக இருந்தவர். பார்க்கும்போதெல்லாம் புத்தகத்தோடேயேதான் இருப்பார் அவர். ‘இதைத்தான் படிக்கணும்னு இல்லை. எதெல்லாம் பிடிக்குதோ அதையெல்லாம் படி’ம்பார். அப்பாக்கிட்ட இருந்து தான் தொத்திக்கிட்டு பழக்கம். பிள்ளைங்க விளை யாட்டு சாமான் வேணும்னு அடம் பிடிக்குற காலத் துலேயே அதெல்லாம் வேணாம்; புத்தகம் வாங்கிக் கொடுங்கன்னு கேக்க ஆரம்பிச்சுட்டேன்.
பரஸ்பர வளர்ச்சி
ஒரு நாளைக்கு 7 தினசரி பத்திரிகைகளை வாங்குறேன். தமிழ், ஆங்கிலம்னு மாசம் 80 வெளியீடு களைப் படிக்குறேன். வீட்டுல புத்தகங்களுக்கு மட்டும் 13 அறை கட்டிவெச்சிருக்கேன். புத்தகங்களை வாங்கிறதோட இல்லை; இங்கே உள்ள எந்தப் புத்த கத்தைக் கேட்டீங்கன்னாலும் படிச்சிருப்பேன்.
வாசிப்பு என்னோட அறிவையும் மனசையும் விசாலமாக்குறதோட மட்டும் இல்லை; தொழில், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிய அளவுல உதவி யிருக்கு. போகப் போக இதை அவங்க உணர்ந்தாங்க. இன்னைக்கு 35 கல்லூரிகள்ல நான் கவுரவ பேராசிரியரா இருக்கேன். 75 நிறுவனங்களுக்கு ஆலோசகரா இருக்கேன். ஒரு நாளைக்குக் குறைஞ்சது 10 மணி நேரம் வாசிப்புக்குச் செலவிடுறேன்.
வாசிக்கிறதோட இல்லை; எழுதவும் செய்றேன். இது வரைக்கும் நிர்வாகவியல் தொடர்பாக ஆங்கிலத்துல 27 புத்தகங்களையும் தமிழ்ல சுய முன்னேற்றம் தொடர்பாக 10 புத்தகங்களையும், சின்ன வெளியீடுகளா புத்தகங்கள் 12 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுருக்கேன்.
தொடரும் காதல்
வாசிக்கிறது ஒரு தியானம் மாதிரி. புத்தகங்கள் வெவ்வேற உலகங்களுக்கு நம்மை அழைச்சிக்கிட்டு போகுது. நம்ம ஊர்ல பலரும் பாடப் புத்தகங் கள் படிக்கிறதோட வாசிப்பைக் கைவிட்டுர்றாங்க. குடும்பத்தோட ஒரு சினிமாவுக்குப் போக, ஹோட்டல்ல போயி சாப்பிட ஐந்நூறு, ஆயிரம் செலவு செய்றவங்க புத்தகங்களுக்குச் செலவு செய்ய யோசிக்கிறாங்க.
புத்தகங்கள் வாங்குறது செலவு இல்லை; அது முதலீடு. ஒரு வகையில, பல தலைமுறைகளுக்கான முதலீடு அது. திருச்சி புத்தகக் காட்சியில வாங்குன புத்தகங்கள்ல பாதியைப் படிச்சு முடிச்சுட்டேன். சென்னைப் புத்தகக் காட்சி எப்போடா ஆரம்பிக்கும்னு ஆவலோடு காத்திருக்கேன்!”
நம்முடைய வாழ்க்கையையே புரட்டிப் போடும் ரகசியத்தை சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டு, ஓர் புத்தகத்தை எடுத்துப் பரிசளிக்கிறார் பாலசுப்பிர மணியன்!
- எஸ். கல்யாணசுந்தரம்,
தொடர்புக்கு: kalyanasundaram.s@thehindutamil.co.in
படம்: ஜி.ஞானவேல்முருகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT