Published : 28 Jun 2016 10:37 AM
Last Updated : 28 Jun 2016 10:37 AM
உலகின் முதல்முதல் கதைசொல்லி கடவுள்தான் என்கிறார் கள் இன்கா பழங்குடி மக்கள். கடவுளின் நாக்குதான் முதல் கதையைச் சொல்லியது எனவும் அவர்கள் நம்புகிறார்கள். பூமியில் மனிதன் தோன்றிய நாட்களில் தன்னைச் சுற்றிய இயற்கையைக் கண்டு பயந்துபோனான். முதல் மனிதனால் எதையும் நினைவுவைத்துக்கொள்ள முடியவில்லை.
கடவுள் இந்த உலகைப் புரிந்துகொள்ளவும் நினைவு வைத்துக் கொள்ளவும் உலகை கதைகளாக உருமாற்றி சொல்லத் தொடங்கினார். அந்தக் கதைகளை கேட்டதன் காரணமாகவே மனிதனுக்கு நினைவாற்றல்உருவானது. அதன் பிறகு, கடவுள் சொல்லிய கதைகளை மறக்காமல் மனிதர்கள் சொல்லி வரத் தொடங்கினார்கள். அதனால்தான் தலைமுறை தலைமுறையாக இன்றும் கதை சொல்லப்படுகிறது என்றும் இன்கா பழங்குடிகள் கருதுகிறார்கள்.
கதைகள் உருவான விதம் பற்றி நிறையக் கதைகள் இருக்கின்றன. எது உலகின் முதல் கதை? எங்கே, எப்போது யார் சொல்லியிருப்பார்கள்... என யாராலும் கண்டறிய முடியவில்லை. குகை ஓவியங்களைப் போல கதைகளும் பெயரறியாத மனிதனின் சிருஷ்டியே!
இந்தியா கதைகளின் தாயகம். கடற்கரையில் உள்ள மணலின் எண்ணிக்கைளைவிட கதைகளின் எண்ணிக்கை அதிகமானது என்பார்கள். இந்திய மக்கள் தொகையைவிட இங்குள்ள கதைகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகமிருக் கும். இந்தியாவில் இருந்து கதைகள் வேறுவேறு தேசங் களுக்குச் சென்றிருக்கின்றன. நாடோடிகள், வணிகர்கள், கதைசொல்லிகள் மூலம் கதைகள் தேசம்விட்டு தேசம் போனதற்கு சாட்சியாக இந்திய கதை களைக் கிரேக்கத்திலும், ஆப்பிரிக்கா விலும், சீனாவிலும் காண முடிகிறது.
கதைகளுக்கு என்றும் வயதா வது இல்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தபின்பும் கதை புத்தம் புதியதாக இருக்கிறது. உலகை ரட்சிக்க வந்த தீர்க்கதரிசிகள் அத்தனை பேரும் கதையைத்தான் தனது வெளிப்பாட்டுமுறையாகக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கதையைச் சொல்வதன் வழியே நினைவுகள் மீள்உருவாக்கம் செய்யப்படுகின்றன. கடந்த காலம் மீண்டும் உயிர்ப் பெறுகிறது. உலகில் ஒரு பொருளை நிலைபெறச் செய்வதற்கு அதைக் கதையில் இடம்பெறச் செய்துவிட வேண்டும் என்பதே நியதி.
கதை என்பது நினைவும், கற்பனையும், உண்மையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு விசித்திர கம்பளம். அரேபிய இரவுகள் கதையில்வரும் ‘பறக்கும் கம்பளம்’ போல எல்லா கதைகளும் நம்மை இருப்பிடம்விட்டு பறக்க செய்யும் விந்தைகளே!
கதை என்பதை வெறும் கற்பனையில்லை; அது ஞாபகங் களின் சேமிப்புக்கூடம், பண்பாட்டு மரபின் தொடர்ச்சி! கதைகள் நம் சமூகத்தின் மனசாட்சி. கதைகள் கேட்பவரைக் களிப்பூட்டுவதுடன் படிப்பினை ஒன்றையும் கற்றுத் தருகின்றன.
முன்பெல்லாம் கோடை விடுமுறை என்றாலே தாத்தா வீட்டுக்குப் போவது வழக்கம். பகல் முழுவதும் விளையாட்டும் இரவெல்லாம் கதை கேட்பதும் எனப் பொழுது கழியும். இன்று கோடை விடுமுறையில் புதிதாக என்ன படிக்க வைக்கலாம் என பிள்ளைகளை சம்மர் கேம்பில் சேர்த்துவிட்டு விடுகிறார்கள். இன்னொரு பக்கம் தாத்தா- பாட்டிகள் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இன்றி பரிதவிக்கிறார்கள்.
குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும்போது அம்மா கதைகளையும் சேர்த்து ஊட்டுவார். குழந்தை இன்னொரு வாய் அதிகம் சாப்பிட வேண்டும் என்றால், அரக்கனின் உயிர் அடுத்த கடல் தாண்டிக் கிளியாகப் பறந்து போய்விடும். இன்றோ, சாப்பாட்டைத் தட்டில் போட்டு, குழந்தையை டி.வி முன்னால் உட்கார வைத்துவிடுகிறார்கள். தனது உணவோடு தொலைக்காட்சிப் பிம்பங்களையும் குழந்தைகள் அள்ளியள்ளி விழுங்குகின்றன.
ஆகவே, வன்முறைக் காட்சிகள் அதன் மனதில் ஆழமாக பதிந்துவிடுகின்றன. இதிலிருந்து விடுபடுவதற்கு குழந்தை களுக்கு நாம் கதைகள் சொல்லவும், அதற்காக நாம் கதை படிக்கவும் தொடங்க வேண்டும். கதை சொல்வதை கல்வி நிலையங்கள் பாடமாக வைக்க வேண்டும். மாணவர்கள் ஒன்றுகூடி கதைப் பேசுவதை வாரம் ஒருமுறை பள்ளியே நிகழ்த்தலாம்.
கதைகள் உருவானவிதம் பற்றி எத்தனையே அற்புதமான கதைகள் நம்மிடம் உள்ளன. அதில், கர்நாடகாவில் உள்ள கிராமப்புற கதை மறக்க முடியாதது. முன்னொரு காலத்தில் ஒரு பெண் மனதில் நிறைய கதைகளையும்,பாடல்களையும் வைத்திருந்தாள். ஆனால், அவள் யாருக்கும் ஒரு கதையைக் கூட சொன்னதே இல்லை. ஒரு பாடலை பாடியதும் இல்லை. இதனால் அவளது உடலில் இருந்த கதைகளும் பாடல்களும் எப்போது இன்னொருவரிடம் போய் சேருவோம் என வேதனைப்பட்டன.
ஒருநாள் அவள் உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கதையும், பாடலும் வாய்வழியாக வெளியேறிப் போய், வாசலில் செருப்பாகவும் குடையாகவும் உருமாறிக்கொண்டன. பெண்ணின் கணவன் வீடு திரும்பியபோது, வாசலில் கிடந்த செருப்பையும் குடையையும் கண்டு, ‘‘யார் வந்திருப்பது?’’ எனக் கேட்டான். அந்தப் பெண், யாரும் வரவில்லை என்றதும் அவள் நடத்தை மீது சந்தேகம்கொண்டு சண்டையிட்டான் கணவன். அன்றிரவு மனைவியிடம் கோபித்துக்கொண்டு கோயில் மடத்தில் போய் படுத்துக் கொண்டான்.
அந்த ஊரில் விளக்கின் தீபங்கள் இரவில் அணைக்கப்பட்ட வுடன், தீபச் சுடர்கள் எல்லாம் மடத்தில் ஒன்றுகூடிப் பேசுவது வழக்கம். அன்று ஒரேயொரு சுடர் மட்டும் தாமதமாக வந்து சேர்ந்தது. அதனிடம், ‘‘ஏன் நீ தாமதமாக வந்தாய்?’’ எனக் கேட்க, அந்தச் சுடர் மடத்தில் உறங்கிக்கொண்டிருந்தவனை காட்டி, ‘‘இவன் மனைவி நிறையக் கதைகளும் பாடலும் அறிந்தவள். ஆனால், யாரிடமும் சொல்ல மாட்டாள். இன்று பொறுக்க முடியாமல் அவள் வாயிலில் இருந்த கதையும் பாடலும் வெளியேறி செருப்பாகவும் குடையாகவும் உருமாறிவிட்டன. அதையறியாமல் அவளைச் சந்தேகப்பட்டு, அவளோடு சண்டைப் போட்டுவிட்டு இங்கு வந்து படுத்துக் கிடக்கிறான். பாவம் அந்தப் பெண்!’’ என்றது.
அதைக்கேட்ட பெண்ணின் கணவன் தன் மனைவி யைத் தவறாக புரிந்துகொண்டோமே என வருந்திய துடன், அவள் மனதில் உள்ள கதைகளையும் பாடல்களையும் எல்லோரிடமும் சொல்லும்படியாக செய்தான். அதன் பிறகு, அவள் சந்தோஷ மாக இருந்தாள் என கன்னட நாட்டுப்புறக் கதை ஒன்று கூறுகிறது. கதை அறிந்தவர்கள் அதை வெளியே சொல்லாவிட்டால் என்ன ஆவார்கள் என்பதை வேடிக்கையாக இக்கதை விவரிக்கிறது. அதே நேரம் மறைத்துவைக்கப்பட்ட கதை என்றைக்காவது ஒருநாள், எப்படியாவது வெளியாகியே தீரும். அப்போது அது உருமாறிவிடும் என்பதையும் நினைவுப்படுத்துகிறது.
இந்தக் கதையைச் சொன்னவன் ஒரு தேர்ந்த கலைஞன் என்பதற்கு சாட்சிதான், தீபத்தின் சுடர்கள் ஒன்றுகூடிப் பேசும் கற்பனை. விளக்கின் சுடர்கள் அணைக்கபட்டவுடன் இருளில் மறைந்துவிடு வதில்லை. அவை ஒரு இடத்தில் ஒன்றுகூடி மனிதர்களைப் பற்றி பேசுகின்றன என்பது எவ்வளவு மகத்தான கற்பனை!
‘மொகலே ஆஸம்’ திரைப்படத்தில் ‘‘இரவில் எரியும் விளக்குகளை பகலில் ஏன் அணைத்து விடுகிறார்கள், தெரி யுமா?’’ என மன்னர் சலீம் கேட்பார். அதற்கு அந்தப் பணிப் பெண் ‘‘தெரியாது?’’ என்பாள். ‘‘இரவில் தான் கண்ட உண்மை களை யாரிடமும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான்’’ என்பார் சலீம். எவ்வளவு அழகான கற்பனை!
இந்தக் கதையில் வரும் சுடர் உண்மையை எடுத்துச் சொல்லி கணவனுக்கு புரிய வைக்கிறது. எளிய கதைதான். ஆனால், அது முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை கற்றுத் தருகிறது. காரணம்இல்லாமல் உங்கள் மனைவியைச் சந்தேகித்து வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள்; அடக்கப்பட்ட ஆசைகளே உடல்உபாதையாக உருமாறுகின்றன என்றும் இக்கதை சுட்டிக் காட்டுகிறது.
விளாதிமிர் பிராப் (Vladimir Propp) என்ற ரஷ்ய நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் நாட்டுப்புற கதைகளை வகைப்படுத்தி விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். இவரது Morphology of the Folktale மிக முக்கிய நூலாகும். இந்த வகைப்பாட்டு முறையைக் கொண்டே இன்றும் கதைகளைப் பிரித்துஅடையாளப்படுத்துகிறார்கள்.
குழந்தைகளுக்காக நீங்கள் கதை சொல்லுங்கள். குழந்தைகளிடம் கதை கேளுங்கள். அதுதான் உலகை அறிந்துகொள்வதற்கான எளிய வழி.
இணையவாசல்: உலகெங்கும் உள்ள நாட்டுப்புறக் கதைகளைப் படிக்க விரும்புகிறவர்களுக்கான இணையதளம். >http://www.pitt.edu/~dash/folktexts.html>
- இன்னும் வரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT