Published : 10 Jan 2017 11:22 AM
Last Updated : 10 Jan 2017 11:22 AM
தமிழின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான இரா.ஜவஹர் பொதுவுடைமைச் சித்தாந்தத்தை எளிய முறையில் அறிமுகப்படுத்தி 'கம்யூனிசம்: நேற்று-இன்று-நாளை'என்ற நூலை எழுதியவர். தொடர்ந்து வரலாற்று நூல்களை எழுதி வருபவர். அவருடன் ஒரு மின்னல் வேகப் பேட்டி.
பொதுவுடைமைத் தத்துவத்தை நோக்கி நீங்கள் முழுமையாக ஈர்க்கப்படுவதற்கு எந்தப் புத்தகம் காரணம்?
ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய 'பொதுவுடைமைதான் என்ன?' என்ற எளிய புத்தகம். எனது பதினாறு வயதில் தமிழாசிரியர் த.ச. இராசாமணி அதை எனக்குக் கொடுத்தார். மேலும் பல புத்தகங்களும் என் ஆசிரியருடனான விவாதமும், எனது வறுமையான சூழலும் சேர்ந்து என்னை கம்யூனிஸ்ட் ஆக்கின.
இந்தியாவின் இடதுசாரி எழுத்தாளர்களில் உங்களை மிகவும் பாதித்தவர்கள் யார்?
அரசியல் - சமூக எழுத்தாளர்களில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஏ.ஜி. நூரானி, அ. மார்க்ஸ். பொருளாதார எழுத்தாளர் களில் சி.பி. சந்திரசேகர், ஜயதி கோஷ். இலக்கியவாதிகளில் கே.ஏ. அப்பாஸ், ஜெயகாந்தன், இளவேனில்.
உங்கள் கருத்தியலைத் தாண்டியும் நீங்கள் வாசிக்கும், உங்களைக் கவர்ந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் யார்?
சிந்தனையாளர்கள்: காந்தி, பெரியார், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். எழுத்தாளர்கள்: கி.வீரமணி, அருந்ததி ராய், இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன்.
இன்றைய இளைஞர்கள் பொதுவுடைமைச் சிந்தாந்தத்தை ஏன் படிக்க வேண்டும்?
வறுமை, வேலையின்மை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை ஒழித்து, அனைவருக்கும் வள வாழ்வை அளிக்க வேண்டும். இதைப் பல நூறு ஆண்டுகளாக முதலாளித்துவத்தால் செய்ய முடியவில்லை; முடியவும் முடியாது. பிறகு, இதைச் செய்வதற்குப் பொதுவுடைமை யைவிட மேலான வேறு சித்தாந்தம் இல்லையே. இளைஞர்கள் பொது வுடைமைச் சித்தாந்தத்தைப் பயில்வதன் மூலம் இந்தச் சித்தாந்தத்தின் நடைமுறைப் பிரச்சினைகள் களையப்பட்டு, மேலும் செம்மைப்படும்; சமூகக் கொடுமைகள் ஒழிக்கப்படும்.
நீங்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எது? எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் எது?
படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் பா.வெங்கடேசன் எழுதிய 'பாகீரதியின் மதியம்' என்ற நாவல். எழுதத் திட்டமிட்டிருப்பது 'என்னைக் கவர்ந்த 10 புத்தகங்கள்' என்ற தலைப்பிலான புத்தகம். அதாவது, வகைக்கு ஒன்றாக 'டாப் டென்' புத்தகங்கள். கால் மார்க்ஸின் 'மூலதனம்' தொடங்கி, 'அசென்ட் ஆஃப் மேன்' என்ற அறிவியல் வரலாற்றுப் புத்தகம் வரையிலான மிக முக்கியமான 10 புத்தகங்களைப் பற்றிய புத்தகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT