Last Updated : 10 Jun, 2017 09:44 AM

 

Published : 10 Jun 2017 09:44 AM
Last Updated : 10 Jun 2017 09:44 AM

வாட்ஸ்அப் விமர்சகர்!

முன்பெல்லாம் புத்தக விமர்சனம் என்பது சிறுபத்திரிகைகளுக்கு மட்டுமேயான விஷயமாக இருந்தது. இணையத்தின் வரவுக்குப் பிறகு வலைதளம், வலைப்பூ போன்றவற்றிலும் புத்தக விமர்சனங்களை எழுத ஆரம்பித்தனர். இணையத்தின் உலகளாவிய வீச்சின் காரணமாக இந்த விமர்சனங்கள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் படிக்கப்பட்டன. இதன் மூலம் புத்தக வாசிப்புக்கு விரிந்ததொரு தளம் கிடைத்தது. இதன் அடுத்தகட்ட பரிணாமம் ஃபேஸ்புக்கில் எழுதும் குறுவிமர்சனங்கள்! வெறுமனே ஒரு புத்தகத்தின் அட்டையைப் பதிவிட்டு, அந்தப் புத்தகத்தைப் பற்றி ஓரிரு வரிகள் எழுதினாலே அதற்கும் விமர்சன அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. இதைத் தாண்டிய பரிணாம வளர்ச்சிதான் வாட்ஸ்அப் வாசகர் குழுக்கள். வாட்ஸ்அப் வெளியைப் புத்தக வாசிப்புக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வாட்ஸ்அப் குழுக்கள் பல இயங்கிக்கொண்டிருக்கின்றன. தமிழ் வாசகசாலை, தஞ்சைக் கூடல் போன்றவற்றை அப்படிச் சொல்லலாம். இந்த வரிசையில் மிக முக்கியமானது ‘நூலிலிருந்து நெசவு’ வாட்ஸ்அப் குழு.

தொடர்ந்து 143 நாட்கள், ஒரு நாள்கூட விடாமல் வாட்ஸ்அப் குழுவில் புத்தக விமர்சனத்தைப் பதிவிட்டிருக்கிறார் நாகா. தினமும் ஆயிரம் பேர் என்ற விகிதத்தில் இந்த விமர்சனங்களைப் படித்திருக்கிறார்கள். இந்த வாட்ஸ்அப் விமர்சனங்களைத் தற்போது தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணத்திலும் நாகா இருக்கிறார். அப்படி வெளிவரும் பட்சத்தில் தமிழில் முதல் வாட்ஸ்அப் விமர்சன நூல் அதுவாக இருக்கும். இந்த எண்ணத்துக்கான வித்து எங்கிருந்து வந்தது என்று நாகாவிடம் கேட்டோம்.

“எனக்குச் சொந்த ஊர் மேட்டூர் அணை. டெக்ஸ்டைல் துறையில் படித்துவிட்டு பல்வேறு நூற்பாலைகளில் பணிபுரிந்துவிட்டுத் தற்போது சொந்தமாக ஒரு நூற்பாலை நடத்திவருகிறேன். கடந்த 24 ஆண்டுகளாகக் கோவை வாசம்! புத்தக வாசிப்புக்கான விதை, என் சிறுவயதிலேயே என் அம்மாவால் ஊன்றப்பட்டுவிட்டது. பதினைந்து வயதிலிருந்து புத்தகங்களை வாசித்துவருகிறேன். என்னோடு ஒன்றாகப் படித்த நண்பர்கள் பலரும் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்வு ஒன்று கடந்த ஆண்டு நடந்தது. கல்லூரிக் காலத்தில் நான் நடத்திய ‘வசந்தம்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையைப் பற்றி என் நண்பர்கள் சிலாகித்துப் பேசினார்கள். அப்போது தோன்றியதுதான் இந்த வாட்ஸ்அப் குழு பற்றிய யோசனை. கையெழுத்துப் பத்திரிகையின் நவீன வடிவமாக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்திக்கொண்டால் என்ன என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி உருவானதுதான் இந்த வாட்ஸ்அப் குழு. கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதியிலிருந்து நூலிலிருந்து நெசவு செய்ய ஆரம்பித்தேன். வெற்றிகரமாக ஒரு ஆண்டைத் தற்போது நிறைவுசெய்திருக்கிறேன். என் பதிவுகளைப் படித்துவிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள்தான் இந்த வெற்றிக்குப் பிரதானமான காரணம்” என்கிறார் நாகா.

கலீல் ஜிப்ரான், டொமினிக் லேப்பியர்-லேரி காலின்ஸ், ஸ்பென்ஸர் ஜான்சன் போன்ற உலக எழுத்தாளுமைகளின் நூல்கள்; காந்தி, பாரதியார், ராகுல் சாங்கிருத்யாயன், கண்ணதாசன், சுஜாதா, பாலகுமாரன், நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், நா. முத்துக்குமார் போன்ற இந்திய-தமிழ் ஆளுமைகளின் நூல்கள் என்று பல தரப்பு நூல்களிலிருந்தும் இந்த நெசவைச் செய்திருக்கிறார் நாகா.

“பல வருடங்களாக வாங்கிய புத்தகங்களை வைத்து என் வீட்டில் ஒரு ‘வீட்டு நூலகம்” வைத்துள்ளேன். அதில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. என் வீடு, தொழிற்சாலை போன்றவற்றை விட இந்தப் புத்தகங்களைத்தான் என் ‘மதிப்பு மிகுந்த சொத்தாக’ நான் மதிக்கிறேன். நிறைய புத்தகங்கள் படித்துக்கொண்டேவந்தாலும், இவற்றைச் சில நண்பர்களிடம் மட்டுமே ரசனையோடு நேரில் பகிர்ந்துகொள்ள முடிகிறது. நம் கருத்து, அனுபவம் இவற்றையும் புத்தகம் படிப்பதில் கிடைக்கும் அறிவையும் சேர்த்துக் கட்டுரைகளாக ஏன் எழுதக் கூடாது என்று யோசித்ததின் விளைவு இந்த நூலிலிருந்து நெசவு!” என்கிறார் நாகா. வாட்ஸ்அப் என்ற புதிய ஊடகத்தில் தொடர்ந்து எழுதுவதற்கு பொறுமையும் ஒழுங்குமுறையும் வேண்டும்; அதேபோல், இடும் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதற்கு வாசகர்களுக்கும் ஒரு ஒழுங்குமுறை வேண்டும். நாம் பாட்டுக்கு பதிவுகளைப் போட்டுக்கொண்டே போக, படிப்பதற்கு யாருமில்லையென்றால் வீண் முயற்சியாக ஆகிவிடுமல்லவா என்றெல்லாம் கேட்டதற்கு, “தினமும் இரவு படுக்கைக்குப் போகும் முன்பு நூல் வாசிக்கும் பழக்கம் உண்டு. அந்த நேரத்தை இப்படி எழுதவும் பயன்படுத்திக்கொள்கிறேன். சில நாட்களில் விடியற்காலை நேரத்தை இதற்காகப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. நிறைய வாசக நண்பர்கள் இவற்றைப் படித்து வாட்ஸ்அப்பில் பாராட்டியது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அது மட்டுமன்றி அவர்களின் நண்பர்கள் பலருடனும் என் விமர்சனப் பதிவுகளைப் பகிர்ந்துகொண்டது இயல்பாக நடந்ததை நான் கவனித்தேன். ஒரு நாள் சற்றுக் கால தாமதம் ஆனால் கூட, ஏன் இன்னும் மெசேஜ் அனுப்பவில்லை என்று கைபேசிக்கு அழைப்பு விடுத்துக் கேட்ட நண்பர்கள் பலர் உண்டு” என்கிறார்.

“எனது வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து கடந்த வாரத்துடன் ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது. அடுத்ததாக, பெண் எழுத்தாளர்களின் படைப்புகள், கிளாசிக் நாவல்கள், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை வாங்கிய நூல்களை வாசித்து அவற்றை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன். மேலும், வாட்ஸ்அப்பில் ஏன் ஒரு நாவல் எழுதக் கூடாது என்ற எண்ணம் வந்தது. அதற்கான கருப்பொருளை உருவாக்கிவைத்திருக்கிறேன். தலைப்பும் தேர்வு செய்துவிட்டேன்: ‘மாண்புமிகு...’. வாரம் ஒரு அத்தியாயம் என்று வாட்ஸ்அப்பில் எழுதப்போகிறேன்” என்றார் நாகா.

புத்தக வாசிப்பிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் ஊடகங்களாகக் கருதப்படும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றிலும் புத்தக வாசிப்பை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை நாகாவைப் போன்றவர்கள் அதிகப்படுத்துகிறார்கள். அவரைப் பின்பற்றி, ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள நண்பர்களின் குழுக்கள் தங்கள் அளவில் ஒரு வாட்ஸ்அப் குழுவை ஆரம்பித்து, தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி அதில் பகிர்ந்துகொள்ளலாமே!

தம்பி - (இந்த வாட்ஸ்அப் குழுவில் இணைந்துகொள்வதற்கு நாகாவைத் தொடர்புகொள்ள: 9842206002).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x