Published : 06 Aug 2016 08:51 AM
Last Updated : 06 Aug 2016 08:51 AM
நகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஈரோடு புத்தகத் திருவிழா 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 75 அரங்குகள் இப்போது 230 அரங்குகளாக உயர்ந்திருக்கின்றன. அரங்குகள் மட்டுமல்ல, தரமும் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது.
‘மக்கள் சிந்தனைப் பேரவை’ சார்பில் சிறப்புக் குழு அமைத்து, எந்தெந்தப் புத்தக நிறுவனங்களை அழைத்தால் விழாவின் நோக்கம் நிறைவேறும் என்று தேர்ந்தெடுக்கிறோம். அத்தகைய தரமும் தகுதியும் மிக்க புத்தக நிறுவனங்களுக்கே வாய்ப்பு தரப்படுகிறது.
ஷார்ஜா, இலங்கை, டெல்லி போன்ற இடங்களில் நடைபெறுகிற உலக புத்தகச் சந்தைகளுக்குச் சென்று, ஒரு வாரம் தங்கி அங்கு பார்த்த வித்தியாசமான அம்சங்களை, நமது நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்ப, நடைமுறைப்படுத்தவும் முயன்றுவருகிறோம். இதுபோன்ற பல நுட்பமான சிறப்பு முயற்சிகளை தொடக்க ஆண்டிலிருந்தே, இடைவிடாது மேற்கொண்டதே ஈரோடு புத்தகத் திருவிழாவின் தரத்துக்குக் காரணம்.
தரம் என்ற கருத்தை முன்வைக்கும்போது, சாதாரண மக்களிடமிருந்து விலகி ஒருசிலருக்கான செயலாக இது மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆனால், ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ இதனை மக்கள் திருவிழாவாக மாற்றும் முயற்சியில் தொடக்க ஆண்டிலிருந்தே முனைப்பு காட்டிவருகிறது. பெரிய படிப்பாளர்கள், ஆய்வாளர்களுக்கான இடமாக மட்டுமின்றி, எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்த சாதாரண கிராமப்புற மக்களுக்கும், செய்தித்தாள்கள் மட்டுமே வாசிக்கத் தெரிந்த நகர்ப்புறப் பாட்டாளிகளுக்குமான திருவிழா என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பொதுமக்களிடம் சொல்லிச் சொல்லி, புத்தக வாசிப்பை மக்கள்மயப்படுத்தி வருகிறோம். அதன் விளைவுதான் இங்கே அதிகமாய்த் தென்படுகிற கிராமத்தவர்கள்.
பள்ளி, பள்ளியாகச் சென்று காலை வழிபாட்டுக் கூட்டங்களில் வாசிப்பின் முக்கியத்துவத்தையும், உலகை புரட்டிப் போட்ட புத்தகங்கள் பற்றியும், ஓயாமல் 12 ஆண்டுகளாகச் சொற்பொழிவுகளை நிகழ்த்திவருகிறோம். கல்லூரிகளில் உரை நிகழ்த்த வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், உரையின் இடையில் கொடுத்திருக்கும் தலைப்பை ஒட்டியே, புத்தகங்கள் குறித்தும், புத்தகத் திருவிழா பற்றியும் பேசுகிறோம்.
இதே கவனத்தைத் தொழிலாளர்களிடத்தும் காட்டுகிறோம். கல்வி நிலை யங்களில் பேசுவது போலவே, தொழிற் சாலையின் நுழைவாயில் கூட்டங்களிலும் பேசுவதோடு, புத்தகத் திருவிழா பற்றிய துண்டறிக்கைகளையும் வழங்குகிறோம். சில தொழிலாளர்கள் தங்களால் நேரடியாகப் புத்தகங்களைப் படிக்க முடியாவிட்டாலும், தங்கள் குழந்தைகளை அழைத்துவந்து புத்தகங்களை வாங்கிச் செல்வதைப் பார்க்கும்போது, ஏற்படுகிற உணர்வுகளை எப்படி விவரிப்பது?
தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பது போலவே, எங்கள் தன்னார்வலர்கள், இல்லந்தோறும் சென்று புத்தகத் திருவிழா துண்டறிக்கைகளைப் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். இந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் துண்டறிக்கைகளுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளன. படித்தவர்களும் செல்வந்தர்களும் குடியிருக்கும் பகுதிகளில் வழங்கப்படுவது போலவே, குடிசைப் பகுதிகளிலும் குக்கிராமங்களிலும் அதே மரியாதையுடன் துண்டறிக்கைகள் வழங்கப் படுகின்றன. இதுபோன்ற பகுதிகளுக்குத் தானே புத்தக வாசிப்பு அதிகம் தேவை?
புத்தகக் காட்சி, புத்தகக் கண்காட்சி, புத்தகச் சந்தை என்றெல்லாம் அழைக்கப்பட்டுவந்த நிகழ்வை புத்தகத் திருவிழா என்று பெயரிட்டு அழைத்த பெருமை ஈரோட்டுக்கே சேரும். சமயம் சார்ந்த திருவிழாக்கள், தமிழர் திருவிழா போன்று குடும்பத்தோடு குதூகலமாகப் புத்தகங்களைக் கொண்டாடக் கூடாதா? அறிவை, ஆளுமையை, அறிவியலை, பண்பை, தமிழை, வரலாற்றை, இலக்கியங்களைக் கொண்டாடக் கூடாதா? என்று கருதியே, ‘புத்தகத் திருவிழா’ என்று பெயர் வைத்தோம். இப்போது புதிதாக தொடங்கப்படும் புத்தகச் சந்தைகளுக்கும் திருவிழா என்று பெயரிடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சமூக முன்னேற்றம், சமூக மாற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, நடத்தப்படும் மக்கள் திருவிழாவான ஈரோடு புத்தகத் திருவிழா தொடர்ந்து தன் இலக்கை நோக்கி நடைபோடும்! அதற்கு வாசக நெஞ்சங்களின் பேராதரவு தேவை!
- த.ஸ்டாலின் குணசேகரன், தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT