Published : 27 Aug 2016 10:36 AM
Last Updated : 27 Aug 2016 10:36 AM

நான் என்ன படிக்கிறேன்?- வீ. நந்தகுமார், ஐ.ஆர்.எஸ்., இணை ஆணையாளர், வருமான வரித்துறை

என் பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்புக்குப் பிறகு தொடர முடியாமல் போனது. நான் குழந்தைத் தொழி லாளியாக வேலை செய்தபோதும், புத்தகங்களைப் படிக்கிற ஆர்வம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. லாட்டரி சீட்டு விற்றபோது ‘கம்யூனிகேஷன் ஸ்கில்’ குறித்த கள அனுபவமும், மெக்கானிக்கல் ஷாப்பில் வேலை செய்தபோது ‘டெக்னிக்கல்’ பற்றி படிப்பதாகவும் நான் உணர்ந்தேன். குழந்தைத் தொழிலாளராக இருப்பது மிகவும் கொடுமையானது என்றாலும் மற்றவர்கள் ஏட்டுக்கல்வியில் படித்துக்கொண்டிருப்பதை, நான் அனுபவபூர்வமாகப் படித்துக்கொண்டிருந்ததாக இப்போது நினைத்துத் தேற்றிக்கொள்கிறேன்.

நேரடித் தேர்வுகள் மூலமாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளை முடித்துவிட்டு வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தேன். கல்லூரி நூலகத்திலிருந்து பாடப் புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். மற்ற இலக்கிய நூல்கள், வரலாறு, சமூகம் தொடர்பான நூல்களை தேவநேயப் பாவாணர் நூலகம், அமெரிக்கன் லைப்ரரி, பிரிட்டிஷ் லைப்ரரி போன்றவற்றிலிருந்து தேடியெடுத்துப் படிப்பேன்.

எனக்கு ‘டிஸ்லெக்ஸியா’ எனும் கற்றல் குறைபாடு இருந்தது தெரியவந்தது. இந்தக் குறைபாடு இருப்பவர்கள் புத்தகத்தில் இருக்கும் ஒரு வார்த்தையைப் படித்தால்,அதைப் புரிந்துகொள்வதற்கே மிகவும் சிரமமாக இருக்கும். சில நேரங்களில் அந்த வார்த்தையேகூட சட்டென மறந்து போகும். எனக்கும் ஆரம்பத்தில் அப்படியான பிரச்சினைகள் இருந்தன. 400 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தைப் படிக்க, எனக்கு 400 நாட்கள்கூட ஆகியிருக்கின்றன. ஆனாலும், நான் சோர்ந்துவிடாமல் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருந்தேன்.

எப்போது நினைத்தாலும் உடனே புத்தகங்கள் படிக்கிற பழக்கம் உடையவன் நான். புத்தகங்களை வெறும் வார்த்தையாகப் படிக்காமல், அவற்றின் உணர்வு களை உள்வாங்கிக்கொள்ளும் உத்வேகத்துடன் படிக்கத் தொடங்கினேன். இப்போது என்னால் 400 பக்கங்கள் கொண்ட நூலை 4 மணி நேரத்திற்குள் படிக்க முடிகிறது. மேலும், ஆங்கில நூல்களைக் கண்டு தயங்கி நிற்க மாட்டேன். படித்தால் புரியும் என்கிற நம்பிக்கையோடு எடுத்துப் படிப்பேன்.

கதை, கட்டுரை நூல்களைவிடவும் கவிதை நூல் களை நான் விரும்பிப் படிப்பேன். சுஜாதாவின் கதைகள், நாவல்களையும் படித்திருக்கிறேன். பாரதியார், பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரின் பாடல்களை கல்லூரி விழாக்களில் பாடிப் பரிசுகள் வென்றிருக் கிறேன். வைரமுத்துவின் திரைப்படப் பாடல் வரிகளுக் குள் பொதிந்திருக்கும் கவிதை வரிகளை ரசித்துக் கேட்பேன். நா. முத்துக்குமாரின் கவிதை நூல்கள் உள் ளிட்ட பலரின் கவிதை நூல்களை வாசித்திருக்கிறேன்.

சமீபத்தில் படித்தது ரோண்டா பர்ன் எழுதிய ‘த சீக்ரெட்’ எனும் நூல் என்னை மிகவும் ஈர்த்தது. ஆஸ்தி ரேலியாவின் தொலைக்காட்சித் தொடர் இயக்குந ரான ரோண்டா பர்ன், இந்த புத்தகத்தை வெறும் வார்த்தை களால் அல்லாமல், உணர்வு கலந்து எழுதியிருப்பார். எது ரகசியம் என்பது பற்றி நாம் இதுவரை கொண்டிருக்கும் மதிப்பீடுகளை இந்நூல் புரட்டிப் போட்டுவிடும். நாம் எதுவாக மாற வேண்டுமென்பதை முதலில் நாம்தான் வாழ்ந்து காட்ட வேண்டுமென்பதை வலியுறுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.

புத்தகங்கள் ஏதோ பொழுதுபோக்குக்காகப் படிப்பவையல்ல; நம் வாழ்வை மேம்படுத்திக்கொள் வதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை எவையென்பதை அறிந்துகொள்ளவும் நாம் புத்தகங்கள் படிக்க வேண்டும்.

- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x