Last Updated : 28 Sep, 2013 01:15 PM

1  

Published : 28 Sep 2013 01:15 PM
Last Updated : 28 Sep 2013 01:15 PM

சகலமும் கவித்துவமாகவே இருக்கின்றன: யூமா வாசுகி

லட்சியவாதத்துக்கும், மேன்மையான குணங்களுக்கும் இனி இடமில்லை என்று கருதப்படும் காலத்தில், மேன்மையான வாழ்க்கைக்கான அழைப்பையும் எத்தனங்களையும் கொண்டவை யூமா.வாசுகியின் கவிதைகள். இவர் கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் பயின்றவர். இவர் எழுதிய ‘ரத்த உறவு’ நாவல் தமிழக அரசின் பரிசு பெற்றது. மலையாளம் வாயிலாக குழந்தைகள் இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து வருகிறார். தற்போது ‘சுதந்திர ஓவியனின் தனியறைக் குறிப்புகள்’ என்ற நாவலை எழுதிவருகிறார். முகப்பேரில் அவரது வீட்டில் சந்தித்து உரையாடியபோது...

நீங்கள் ஓவியராகவும், எழுத்தாளராகவும் ஆனதற்கான பின்னணி பற்றி கூறுங்கள்?

என்னுடைய அம்மாவின் அண்ணன் நாடகக் கலைஞர். அவர் சாஸ்திரிய சங்கீத வித்வானும் கூட. பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்தார். அவர் பள்ளிக் குழந்தைகளுக்காகவும் நாடகங்கள் போடுவார். அதில் ஒரு நாடகத்தின் பெயர் பாலைவனத்து ஒளிவிளக்கு. அந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற புரட்சிகரத் தன்மையுடன் அந்த நாடகங்கள் இருக்கும். ஓவியம், நாடகம், இசை மூன்றும் சேர்ந்த ஆளுமையாக அவர் இருந்தார். அந்த தாக்கம் எனக்கு இருந்திருக்க வேண்டும். சிறுவயதிலேயே கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்த ஆரம்பித்துவிட்டோம். வீட்டில் வாசிப்புச் சூழல் இருந்தது. அம்மாவுக்கு பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் இருந்தது. அண்ணன் தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்களைப் படிப்பார். நானும் தேடிப்பிடித்து படிக்கத் தொடங்கினேன். தமிழ்வாணன், சுஜாதா, சாண்டில்யன் வரிசையில் சிறிதுசிறிதாகப் பயணப்பட்டுத்தான், ஜெயகாந்தனின் கதை அறிமுகமானது. துணைப்பாட நூலில் இருந்த நந்தவனத்தில் ஒரு ஆண்டி கதை ஒரு பெரிய வழித் திறப்பாக இருந்தது.

உங்களுடைய கவிதைகளில் தேர்ந்த, கூர்மையான, அன்றாட மொழிக்கு அப்பாற்பட்ட சமத்கார மொழியைப் பயன்படுத்துகிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

அடிப்படையில் உள்ள தமிழார்வம்தான் காரணம் என்று நினைக்கிறேன். ஒரு விஷயத்தை யோசிக்கும்போது, அதை வெளிப்படுத்த பிரயாசைப்படும்போது சிறந்த வகையில் வெளியிடுவதற்கு தகிப்பு உண்டாகிறது. ஒரு பெரும் சூறாவளியில் சிக்கித் தவிக்கிற, அல்லாடும் மரம் போலத் தேடுதல் நடக்கிறது. இப்படித்தான் எனது மொழியைக் கண்டுபிடிக்கிறேன். அல்லாட்டமும் பித்தமும் கிறக்கமுமான நிலையில் சில வரிகள் ஓடி வரும். சொல்ல வேண்டிய பரிதவிப்பில் இருந்து அப்படி உருவாகிறது.

உதாரணமாக, குழந்தை தொடர்பாக நான் எழுதிய ஒரு கவிதையில் ‘இதயத்திலிருந்து ரத்தத்தை மசியாக விட்டுக்கொடுக்கிறது பேனா முனை’ என்று ஒரு வரி வரும். இதுபோன்ற பல வரிகளுக்கான திறப்பு உன்மத்தமும், பதற்றமும், ஆவேசமும், குழப்பமும் இயலாமையும், சோர்வும் கொண்ட மனநிலையிலிருந்துதான் வருகிறது.

அது கவித்துவம் கொண்ட வரிகளாக இருக்கலாம், அன்றாடப் புழகத்தின் மொழியில் இருக்கலாம். இரண்டுமே விரவித்தான் வரும். அதை அந்தக் கணத்தில் முறைப்படுத்தவும் முடியாது. யூகிக்கவும் முடியாது. அது கவிதையின் ஆன்மிகம் தொடர்பானது.

உங்களின் கவிதை மொழிக்கான ஆதாரத்தைக் கேட்கிறேன்.

எனக்குப் புரிகிறது. அதை அடையாளம் காண முடியவில்லை. அனுபவமா, மொழியறிவா, உணர்ச்சியா என்று அதைத் துல்லியமாக வரையறுக்க முடியவில்லை.

ஒரு மனிதக்குரங்கின் சித்திரம் கவிதையை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு குழந்தைக்கு மனிதக்குரங்கின் படத்தை நான் வரைந்து காட்ட வேண்டிய சூழலின் பின்னணியில்தான் அக்கவிதை எழுதப்பட்டது. சரியாக வரைந்து குழந்தையிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்பதே மனதை ஆக்கிரமித்திருந்தது. அந்தக் குழந்தை நான் வரைந்ததைக் குரங்கு இல்லை எனச் சொல்லிவிடக் கூடாது. குழந்தை என்னை நிராகரித்துவிடக் கூடாது என்ற பதற்றம் இருந்தது. நான் வரைந்த மனிதக்குரங்கு அந்தக் குழந்தைக்குப் பிடித்துவிட்டது. சில நாட்கள் கழித்து, என்னை அறியாமலேயே அந்த மனிதக்குரங்கின் படம் மனதில் மேலெழுந்து வருகிறது. அதன் விழிகள் என்னைப் பார்க்கிறது. அதன் அங்கபாவனைகள் மனதில் உருவாகிறது. அதைத் தொடர்ந்து வரிகள் உருவாகுது.

இதில் எங்கேயிருந்து கவிதை உருவானது என்று என்னால் சொல்ல முடியவில்லை. அந்தக் கவிதைக்கு குழந்தைதான் ஆதாரமா? என்னுடைய ஓவியம் ஒரு ஆதார மண்டலமா? என்னுடைய உணர்ச்சியா? தெரியவில்லை.

மொழியின் உச்ச வடிவமாகக் கவிதை கொண்டாடப்படுகிறது. ஆனால் இன்னமும் எல்லாச் சமூகங்களிலும் கவிதையைச் சிறுபான்மையினரே வாசிக்கும் சூழல் உள்ளது..கவிதை என்ற வடிவத்தை தற்காலப் பின்னணியில் என்னவாக வரையறுக்கிறீர்கள்?

கவிதை என்பது கவித்துவம். அது எழுதப்படுவது மட்டுமே அல்ல. வரிவடிவங்கள், வார்த்தைகளால் வரையப்படுவது மட்டுமே அல்ல. இறைத்துவத்தை நாம் கவிதைபூர்வமாகவே பார்க்கிறோம். கவிதையின் கூறுகள் பலவிதமாக இப்படித்தான் இந்த உலகில் சிதறிக் கிடக்கின்றன. இயற்கை கவிதைமயம். உறவுகள் கவிதைமயம். இந்தக் கவிதைமயத்தை ஸ்வீகரிப்பவர்கள் களிப்பூட்டக்கூடிய கவிதை அனுபவத்தை அடைகிறார்கள். எல்லா அனுபவங்களும் கவித்துவத்தில்தான் சங்கமிக்கின்றன. இயற்கை, காதல், நேசம், நட்பு எல்லாவற்றிலும் கவிதை இருக்கிறது.

கவித்துவம் என்று நீங்கள் சொல்வது ஒரு அழகையா அல்லது ஒரு ஒழுங்கையா?

அழகு என்று அதைக் குறுக்க முடியாது. ஒழுங்கு என்றும் திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது. அது பெரும் தரிசனம். மனிதனிடம் இருக்கும் ஆற்றலெல்லாம் சென்றடைந்து, ஓய்வுற்று ஆனந்திக்கிற எல்லையாகக் கவிதை நிலை உள்ளது. அது அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. அதை இனம்கண்டு உணர்வதில்தான் நமக்குப் பிரச்சினை உள்ளது. அதை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ளும் கணத்தில், இந்த உலகில் உள்ள அனைத்தும் அவருடையதாக மாறிவிடுகிறது. கவித்துவம்தான் ஒரு நல்ல ஓவியத்தைத் தீர்மானிக்கிறது. ஒரு நல்ல சிறுகதையையும், நாவலையும் அதன் கவித்துவம்தான் தீர்மானிக்கிறது. ஒரு நல்ல மனிதனின் நடத்தையை அவனது கவித்துவம்தான் தீர்மானிக்கிறது. அந்த வகையில் சகலமும் கவித்துவமாகவே இருக்கிறது.

உங்களது ரத்த உறவு நாவல் யதார்த்த வகை இலக்கிய எழுத்தின் சிறந்த வடிவாகவும், மிகையான சென்டிமெண்டுகள் கொண்ட படைப்பாகவும் விமர்சிக்கப்பட்டது...

இதில் என்னுடைய நிலைப்பாடு என்பது இல்லை. ரத்த உறவு நாவலை எழுதுபவனின் சுய அனுபவமாகப் பார்த்தவர்களும் உண்டு. எது புனைவு, எது சுய அனுபவம் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது.

இந்தியா முழுவதுமே நாவல் என்கிற வடிவம் ஒரு தனிநபர், குடும்பம் அல்லது சமூகத்தின் வலியை ஆற்றிக்கொள்வதாகவும், வெளியேற்றுவதாகவுமே உள்ளது. ரத்த உறவை அப்படிச் சொல்ல முடியுமா?

வெளியேற்றுவதால் வலி தீர்ந்துவிடுமா? அப்படி எழுதவில்லை. ரத்த உறவு தற்செயலான விஷயம். ரத்த உறவில் உள்ளதை, சில சிறுகதைகளாக எழுதிவிடலாம் என்பதே என் நம்பிக்கையாக இருந்தது. பதிப்பாளர் அண்ணாச்சி வசந்தகுமார்தான் என்னை சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு கடத்தி, இதை நாவலாக எழுதவைத்தார்.

ஆனால் ரத்த உறவு நாவலை எழுதும்போது, எனது அனுபவத்தின் அடித்தளத்துக்குச் செல்லும்போது, தேடுதலும், பரவசமும், துயரமும் ஏற்படுகிறது. எதிர்பாராத விளைவுகளாக சில நிகழ்ச்சிகள் இழுத்துப் போகின்றன.

எது ஒரு மனிதனது மனத்தை ஆழமாகத் தைக்கிறதோ, எது நிலையாக அவனை வருத்துகிறதோ அதன் பாதையில்தான் நாவல் உருவாகிறது.

கதை எழுத்தில் அனுபவத்தை விஸ்தாரமாக சொல்லமுடிகிறது. கவிதை என்ற வடிவு, அத்தனை இடம் அளிக்கிறதா?

சந்தேகமே இல்லை. என்னுடைய அனுபவத்தில் உரைநடையை விடவும் மிகவும் உறுதிப்பாடாக அனுபவத்தைக் கடத்தும் வடிவம் கவிதையே என்று நம்புகிறேன். ‘அவனை யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்’ என்ற தேவதேவனின் கவிதையை உதாரணமாகச் சொல்கிறேன். அந்த வரி என் மனதில் வரும்போதே எனக்கு கண்ணீர் கசிந்துவிடும். சாலையில் அலைந்துகொண்டிருப்பவனை, பூட்டிய கடையின் முன்பு நள்ளிரவில் படுத்து உறங்குபவனை, குழந்தையைத் தோளில் சுமந்துகொண்டு அழுதபடி ஓடும் பெண்ணை யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன் என்று போகும் கவிதை அது. இந்த நான்கு வரியில் எவ்வளவு துயரம் நம்மேல் கவிந்துவிடுகிறது. இந்த நான்கு வரி கொடுக்கும் அனுபவத்தை ஆயிரம் பக்க நாவலும் கொடுக்கும். ஆனால் கவிதை வலிமையாகவும் கூர்மையாகவும் கடத்தும் அனுபவம் தனியானது.

நீங்கள் மார்க்சிய இயக்கத்துடன் இணைந்து பணியாற்றுபவர். ஒரு அமைப்பு சார்ந்து இயங்குவதை எப்படி கருதுகிறீர்கள்..

நான் இலக்கியத்தின் வழியாகவே கம்யூனிசத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டேன். சித்தாந்தங்கள் பின்னால் அறிமுகமாயின. மார்க்சிய சித்தாந்தத்துக்கு இணையான எந்த சித்தாந்தமும் வரவில்லை என்பது எனது அபிப்ராயம். அதை நடைமுறைப்படுத்துவதில் கோளாறுகள் இருக்கலாம். மிக எளிமையாகச் சொல்லப்போனால், சக மனிதர்களுக்கு அடிப்படையான வசதிகளும் ஜீவாதாரமும் கிடைப்பதற்கு நான் என்னை இழப்பதற்குத் தயாராக இருக்கிறேன். எல்லா மனிதர்களுக்கும் அடிப்படையான எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை.

உங்கள் படைப்பின் நம்பிக்கையும் அதுதானா?

இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x