Last Updated : 04 Jan, 2014 12:00 AM

 

Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 04 Jan 2014 12:00 AM

நிழல் உருவங்களாகும் கதாபாத்திரங்கள்

மெக்ஸிகோவைச் சேர்ந்த யுவான் ரூல்ஃபோ (1918 - 1986) கிறிஸ்டரோக்களின் கலகத்தில் தந்தையை இழந்தவர்; ஆறு ஆண்டு கழித்து தாயையும் இழந்தவர். அனாதை விடுதிகளில் நான்கு ஆண்டுகள் கழித்து சின்ன சின்ன வேலைகளில் இருந்தபடியே கல்வி பயின்றார். அகதிகளுக்கான அரசுத்துறையில் 10 ஆண்டுகள் பணி. திரைப்படம், தொலைக்காட்சிப் படங்களின் தயாரிப்பில் ஈடுபாடு. அமெரிந்திய ஆய்வுப்பணி. பல இளம் எழுத்தாளர்களின் உருவாக்கத்திற்கு ஆதர்ஸம். La Cordillera என்னும் இரண்டாவது நாவல் வெளிவர இருப் பதாக அறிவிக்கப்பட்டிருந்தும் வெளியாக வில்லை; ஆசிரியரே அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

நிலம், பாறைகள், தூசு, காற்று, நிலா, பருந்துகள் மற்றும் ஓநாய்கள் போன்ற அவருடைய படிமங்கள் நாட்டுப்புறத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன என்கிறார் முன்னுரையாளர் ஜார்ஜ் டி. ஷேட்.

ரூல்ஃபோவின் எழுத்தை வாசகன் அடையாளம் காண மொழிபெயர்ப்பாளர் S.பாலச்சந்திரன் ஓர் வழிமுறையைத் தருகிறார். “அசோகமித்திரனின் வடிவ நேர்த்தியும் பூமணியின் படைப்புலகமும், ஜி.எஸ். நாகராஜனின் பன்முகத்தன்மையான கதை சொல்லலும் இணைந்தவை” என்கிறார்

யுவான் ரூல்ஃபோ எழுத்து, தாஸ்தயேவ்ஸ்கி, காஃ ப்கா போன்றவர்களுடைய எழுத்துகளைப் போல், அசாதாரணமான சூழலில் அசாதாரண மான பாத்திரங்களைக் கொண்டு புகை மூட்ட மாகச் சொல்லப்படுகிறது. நினைவுலகத்தில் ஒரு பாதியும் நடப்பில் மறுபாதியும், நிஜ நிரூபணங்களாக ஒருபாதியும் நிழலுருவங்களாக நடமாடும் கதைகள் இவருடையவை. இரத்தமும் சதையுமான மனிதர்களும் ஆவிரூபங்களும் அவர் எழுத்துப்பரப்பை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. நினைவும் நிஜமும் குழம்பிக் கிடக்கின்றன.

“பெட்ரோபராமோ” என்னும் நாவலில், தாய் இறந்த பிறகு அவளுக்கு வாக்களித்திருந்த படி தந்தையைத் தேடி கோமாலா என்னும் பாழ்நிலப்பகுதிக்குச் செல்கின்றான் மகன் யுவான். அவன் தேடிச் செல்லும் தந்தை மட்டுமல்லாமல் கோமாலாவிலிருந்த அனைவருமே இறந்து போயிருக்கிறார்கள். இந்நிலையில் அவன் யாரைத் தேட முடியும்?

கோமாலாவாவையும் கணவனையும் விட்டு நீண்ட காலத்திற்கு முன்பே வெளியேறி வந்திருந்த யுவானின் தாய்க்கு அடுக்கடுக்கான நினைவுத்தளங்கள் உண்டு. தன் கண்களின் வழியே கோமாலாவாவையும் அந்நகர் சார்ந்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் நோக்குவதற்குப் பக்குவப்பட்டவனாக யுவானை அவனது தாய் தயார்ப்படுத்தியிருக்கிறார்.

நாவலில் விவாதிக்கப்படும் பகுதி நடக்கின்ற நிகழ்வா, நிகழ்வின் நினைவுகூரலா என்ற குழப்பம், ஆணும் - பெண்ணும் பேசிக் கொள் கிறார்கள், சந்திக்கின்றனர் என்றால் அவர்கள் கணவன் -மனைவியா அல்லது தந்தை - மகளா அல்லது அண்ணன் - தங்கையா என்ற குழப்பம், பராமோவின் மகன் மிகுவெல் இறந்து போனான் என்றால் எதிரிகளால் கொல்லப்பட்டானா அல்லது அவனது குதிரையே அவனை இடறிவிழச்செய்து கொன்றதா என்ற குழப்பத்தின் மூடுதிரைக்குப் பின்னே தான் அனைத்தும் நிகழ்கின்றன.

மிகுவெல் பராமோ இறந்த பின் அவனது குதிரை அலைந்து திரிவதை ரூல்ஃபோ இப்படி விவாதிக்கிறார். “அவனுடைய குதிரை மட்டும் தான் வந்து போய் கொண்டிருக்கிறது. குதிரையும் அவனும் ஒருபோதும் பிரிந்து இருந்ததேயில்லை. அவனைத் தேடி வயல்வெளிகளில் அலைந்து

திரிந்து, எப்போதுமே இந்த நேரத்தில்தான் திரும்பி வருகிறது. குற்ற உணர்வில் சீரழிகிறது. அந்தப் பாவப்பட்ட ஜீவன். மோசமான செயலைச் செய்து விட்டால் விலங்குகளும்கூட அதை நினைத்து வருந்துகின்றன. இல்லையா?”(பக். 30).

பிரச்சினைகளிலிருந்து நெருக்கடிகளிலிருந்து வேதனைகளிலிருந்து தப்பிக்க, ஆறுதல் அளிக்க கோமாலாவின் மக்களுக்கு என்ன இருந்தது? திருச்சபை பாதிரியார்கள்கூட அதிகாரவர்க்கத்தினருக்கு ஊழியம் செய்தே நாட்களைக் கழித்திருந்ததால் அவர்தம் வேதனை கொண்ட ஆன்மாக்களைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை.

“எல்லாப் பக்கங்களிலிருந்தும் இந்த உலகம் நம்மை அழுத்துகிறது. நம்மை நொறுக்கிப் பொடிப் பொடியாக்கி கையளவு நமது புழுதியை எடுத்து நிலத்தின் மீது வீசுகிறது. நிலத்திற்கு நம் இரத்தத்தால் நீர்பாய்ச்சுவதைப் போல நம்மைத் துண்டு துண்டாகப் பிய்த்து விடுகிறது. நாம் என்ன செய்தோம்? நம் ஆன்மாக்கள் ஏன் அழுகிப் போய்விட்டன? நம்மிடம் எதுவுமே இல்லையென்றாலும் கடவுளின் கருணையாவது நமக்கு உண்டு என்று உன்னுடைய அம்மா எப்போதுமே சொன்னாள். அதையும் நீ மறுத்து விட்டாய் ..” (பக். 99).

இக்கையறு நிலையில் மனிதர்கள் தங்க ளுக்குத் தாங்களே பேசிக் கொள்கின்றனர். பைத்தியமாகித் திரிகின்றனர். ஆவிகளாகி நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றனர். நிழல் களுக்குக் கூட பேசும் வல்லமை வந்து விட்டது போல் தோன்றுகிறது. நடக்கின்ற எதிர்ப் புரட்சி, அரை குறையாய் எஞ்சியிருக்கும் உயிர்ப் பையும் சர்வநாசம் செய்துவிடும் எத்தனிப்பில் இருக்கிறது.

‘எரியும் சமவெளி’யிலுள்ள சிறுகதைகள் சிக்கலான ஆளுமை வாய்ந்த பாத்திரங்களைக் காட்டுவதாகவோ முற்றிலும் சோகமும் வேதனையும் கவிந்த நிலவியல் பகுதிகளை முன்வைப்பதாகவோ உள்ளன. ஒன்றிரண்டு கதைகளில்தான், பாத்திரங்களுக்கு இடையிலான மோதல், முரண் நிலைகள் அல்லது நாடக பூர்வமான சம்பவத்திருப்பங்களுடன் ஒரு கதை நிகழ்வு விவாதிக்கப்படுவதாக இருக்கின்றன.

ஆசீர்வாதம் கோரும் ஒரு நபருக்கு மறுதலிக்கும் நிலையிலேயே பாதிரியார் இருக்கிறார் என்றால், அந்நபர் எவ்வளவு எதிர்மறை குணங்கள் கொண்டவனாக, சிக்கல் மிக்கவனாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து கொள்ளலாம். அந்நபரைப் பற்றித் தொடர்ந்து இப்படி விவாதிக்கிறார் ரூல்ஃபோ.

“சாலையில் வைத்து அவர்கள் கைது செய்தார்கள். நொண்டிக்கொண்டே நடந்து சென்ற அவன் ஓய்வெடுப்பதற்காகக் கீழே உட் கார்ந்தபொழுது அவனைப் பிடித்தார்கள். அவன் சிறிதும் எதிர்ப்புக் காட்டவில்லை. அவனை அவர்கள் தூக்கிலிடுவதற்கு அவனே தன் விருப்பப்படி மரத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும், தானே கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.” (பக்.126)

ஒரு நிலவியல் பின்புலத்தை மிகையதார்த்த மாக, புனைவியல் தன்மையதாக விவரித்து, அடுத்துச் சொல்லப்போகும் கதைப் போக்கைக் கோடி காட்டிவிடுவதில் ரூல்ஃபோ மிகவும் தேர்ந்தவர்.

மற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர்களைப் போல் அதிகளவில் தெரியப்படாமலும், பேசப்படா மலும் புதிர் என விளங்கும் ரூல்ஃபோ வந்த பின்புலம் என்ன? ரூல்ஃபா என்னும் ஆளுமை எத்தகையது?

ஆதாரங்கள் :-

1. எரியும் சமவெளி, யுவான் ரூல்ஃபோ,

2. பெட்ரோபராமோ, யுவான் ரூல்ஃபோ, தமிழில் எஸ். பாலச்சந்திரன், விடியல் பதிப்பக வெளியீடு, கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x