Published : 24 Sep 2016 09:56 AM
Last Updated : 24 Sep 2016 09:56 AM

நானும் என் வீடும்: எனது நண்பர்கள்

ஒரு எழுத்தாளனாக எனது நட்பு வட்டம் மிகப் பெரியது. ரஜினிகாந்த் தொடங்கி பெட்டிக்கடை கிருஷ்ணன் வரை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிந்தது. எனது நட்பின் தொடக்கப் புள்ளி, பள்ளி நாட்களில் அறிமுகமான நண்பர்கள். சேது, விவேகானந்தன், ராதாகிருஷ்ணன், ஷண்முகவேல், கார்த்திகேயன், பாண்டி, சாமி. இந்த நட்பும் இன்று குடும்ப உறவுபோல தொடர்கிறது.

படிக்கிற நாட்களில் என் வீட்டை விடவும் அதிகம் இருந்தது விவே கானந்தன் மற்றும் ஷண்முகவேல் வீடுகளில்தான். அங்கேயே சாப்பிட்டு உறங்கி அவர்கள் வீட்டில் ஒருவ னாகவே இருந்தேன். இவர்களில் சேது பள்ளிபடிப்பை முடித்தவுடன் விருதுநகரில் புத்தகக் கடை தொடங்கி விட்டான். நண்பர்கள் சந்திப்பின் மையம் அது. இன்றும் ஊருக்குப் போனால் சேது புத்தகக் கடையில்தான் கிடப்பேன்.

படிப்பை முடித்து வெளியே முதலில் வேலைக்குப் போனவன் விவேக். முதல் சம்பளத்தைக் கையில் வாங்கியதும் நேரே வந்தவன். “உனக்கு என்ன வேண்டும் கேள், வாங்கித் தருகிறேன்” என்று கையோடு அழைத்துச் சென்றவன். இன்றைக்கும் விருதுநகரைக் கடந்து காரிலோ ரயிலிலோ, எப்படிப் போனாலும் அவனைத் தவிர்த்து நான் செல்ல முடியாது. எந்த நேரமாக இருந்தாலும் சாப்பிட அழைத்துச் செல்லக் காத்திருப்பான் அல்லது உணவுப் பொட்டலத்தோடு வந்து நிற்பான். “காசு எவ்வளவு வேணும்?” என்று கேட்டு, எதையாவது சட்டைப் பையில் திணித்துச் செல்வான்.

அப்போதெல்லாம் சனி ஞாயிறு என்றால், கோவில்பட்டிக்குப் போய்விடு வேன். அங்கே தேவதச்சன், கௌரிசங்கர், கோணங்கி, தமிழ்ச்செல்வன், ஜோதிவிநாயகம், ராஜு, அப்பாஸ், உமாபதி என நிறைய இலக்கிய நண்பர்கள். செண்பகவள்ளியம்மன் கோயில் மேட்டுக்கோ கதிரேசன் மலைக்கோ போய் உட்கார்ந்து உரையாடுவோம்.

என்னுடைய பதினெட்டாவது வயதில் கவிஞர் தேவதச்சனை முதன்முதலில் சந்தித்தேன். அவருடன் ஒரு மாதம் பழகினால் போதும் எவரும் எழுத்தாளராகவோ கவிஞராகவோ ஆகிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவ்வளவு உத்வேகம் தருவார். என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்று இலக்கியத்தைக் கற்றுத்தந்ததோடு, வாழ்க்கையின் சுகதுக்கங்களை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் புரியவைத்தவரும் அவரே. இன்றைக்கும் அன்றாடம் அரை மணி நேரமாவது அவருடன் போனில் பேசிவிடுவேன்.

கையில் காசில்லாமல் ஊர் சுற்ற முடியும் என வழிகாட்டியவர் நண்பர் கோணங்கி. நானும் அவரும் பதினைந்து ஆண்டுகள் ஒன்றாகச் சுற்றி அலைந்திருக்கிறோம். இருவரிட மும் காசிருக்காது. ஆனால், யாரா வது ஒரு எழுத்தாளரை, வாசகரை, பாடகரைச் சந்தித்துப் பேசி அவர்கள் தரும் ஐம்பது, நூறு ரூபாயைக் கொண்டு அடுத்த ஊருக்குக் கிளம்பி விடுவோம். இப்படி இந்தியா முழு வதும் போயிருக்கிறோம். கோணங்கி யின் நட்பு விசித்திரமானது. நெருங்கிப் பழகிக்கொண்டேயிருப்பார். சட்டென்று துண்டித்துக் கொண்டு போய்விடுவார். பல மாதங்களுக்குப் பின்பு எதுவும் நடக்காதது போல மீண்டும் வந்து நெருக்கமாகி விடுவார்.

பால.கைலாசத்தின் நட்புதான் இன்றைக்கு நான் சென்னையில் வசிக்கக் காரணம். இயக்குநர் பாலசந்தரின் புதல்வர். அவரது ‘மின் பிம்பங்கள்’ நிறுவனத்துக்கு நான் பங்களித்திருக்கிறேன். எனது திருமணத்தின்போது, ஊருக்குக் கிளம்பும் நாளில் என்னிடம் வெறும் மூவாயிரம் ரூபாய்தான் இருந்தது. திருமணச் செலவுகளுக்கு ஒரு பத்தாயிரமாவது இருந்தால் தேவலாம் என்றெண்ணி கைலாசத்திடம் கடன் கேட்கச் சென்றிருந்தேன். அவர் அறையில் பலர் உட்கார்ந்திருந்த நிலையில், எப்படிக் கடன் கேட்பது என்று தெரியவில்லை. அவர் ‘பெஸ்ட் ஆஃப் லக்’ சொல்லிவிட்டு வேலையில் மூழ்க, கடனைக் கேட்காமலேயே தவிப்புடனேயே மாடியை விட்டுக் கீழே இறங்கி வந்தேன். வாசலில் ஒருவர், “சார் குடுக்க சொன்னாங்க” என்று ஒரு உறையை நீட்டினார். பிரித்துப் பார்த்தேன். ஒரு லட்சம் ரூபாய். நெகிழ்ந்து போய் அவரைப் பார்க்க திரும்ப அறைக்குச் சென்றேன். வெளியே வந்து என் கைகளை பிடித்தபடியே, “உங்க கையில கொடுக்க கூச்சமா இருந்துச்சி. தப்பா எடுத்துக்காதீங்க. இது என்னோட வெட்டிங் கிப்ட்” என்றார். நட்பைப் போற்றுவதில் கைலாசத்துக்கு நிகரே கிடையாது. அவரது மறைவு பலருக்கும் பேரிழப்பு.

சென்னையில் அறை எடுத்துக் கொள்ள வசதியில்லாமல் சுற்றித்திரிந்த நாட்களில் தன் அறையை எனக்காகத் தந்தவன் ராஜகோபால். சென்னையில் எங்கே போக வேண்டும் என்றாலும் பைக்கில் ஏற்றிக்கொண்டு செல்வான். காத்திருந்து திரும்ப அழைத்து வருவான். இப்போது லண்டனில் வசிக்கிறான்.

திருநெல்வேலியில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் படித்துக் கொண்டிருந்த நாட்களில் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். ஒரு எழுத்தாளனாக எனது வளர்ச்சிக்கு மனுஷ்யபுத்திரனின் நட்பே பெருந் துணையாக அமைந்தது. அதன் சாட்சியே அவர் பதிப்பித்துள்ள எனது 80 புத்தகங்களும்.

நண்பர் பவா. செல்லதுரையுடன் ஏற்பட்ட நட்பு 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. பகலோ இரவோ எப்போதும் திருவண்ணாமலைக்கு போய்விடலாம். பவாவின் எளிமை யான குடிசை அன்புடன் வரவேற்று உபசரிக்கும். வாரக் கணக்கில் அங்கு தங்கியிருக்கிறேன்.

வாசகராக அறிமுகமாகிப் பின்பு நண்பராகி இப்போது என் குடும்ப உறுப்பினராகிவிட்டவர் ஆடிட்டர் சந்திரசேகர். எனக்கோ குடும்பத் துக்கோ எந்த உதவி தேவை என் றாலும் முதலில் வந்து நிற்பவர் இவரே. எனது புத்தகங்களை ஐம்பது, நூறாக வாங்கித் தனது நண்பர்கள் பலருக்கும் பரிசு தரக்கூடியவர். அன்றாடம் என் னைச் சந்தித்துப் பேசுகிற நண்பர் கள் மூவர் ஆர்தர் வில்சன். ராஜ்மோகன், அழகிய மணவாளன். இவர்களுடன் தான் வெளியில் செல்கிறேன். சினிமா பார்க்கிறேன். ஒன்றாகச் சாப்பிடுகிறேன். கதை கவிதைகளை விவாதிக்கிறேன்.

ராவணனுக்குப் பத்து தலை உண்டு என்பார்கள். எனக்கும்கூட ஆயிரம் தலைகள் உண்டு. அதில் ஒன்று என்னுடையது. மற்றவை என் நண்பர்களின் தலைகள். எனக்கு ஈராயிரம் கைகளும் உண்டு. அந்த வலிமையே என்னை எழுதச் செய்கிறது!

- எஸ்.ராமகிருஷ்ணன்
தொடர்புக்கு: writerramki@gmail.com
(அடுத்த வாரம் பேசுவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x