Published : 26 Oct 2014 02:15 PM
Last Updated : 26 Oct 2014 02:15 PM
அஞ்சலி | ராஜம் கிருஷ்ணன்
ராஜம் கிருஷ்ணனின் 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி' நூலை, நான் பணிபுரிந்த கல்லூரியில், எனது சக பேராசிரியை தமிழரசிதான் பரிந்துரைத்தார். தொடர்ந்து ராஜம் கிருஷ்ணனின் நாவல்களைத் தேடிப் படித்தேன். எழுத்தாளரை நேரில் சந்திக்கும் ஆர்வத்துடன் இருவரும் ஒரு நாள் கிழக்குத் தாம்பரம் போரூர் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம். அதன் பிறகு அந்த முகவரி எங்கள் வாழ்வின் ஓர் அங்கம் போல் ஆகிவிட்டது. சந்திப்புகள் தொடர்ந்தன. ஒவ்வொரு வருடமும் தீபாவளி நாளில் எங்கள் வருகைக்காக அவரும் அவர் கணவர் கிருஷ்ணனும் காத்திருப்பார்கள். எங்கள் வருகைதான் அவர்களுக்குத் தீபாவளி!
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
அவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் மிக முக்கியமானவை. டாக்டர் ரங்காச்சாரி, பாரதியார் ஆகியோரைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டதால் பல அரிய தகவல்கள் நிறைந்தவை. குறிப்பாக 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி' என்ற நூல் பாரதியின் வாழ்க்கையை பெண்நிலை நோக்கில் ஆராய்ந்து எழுதப்பட்டது.
பெண் விடுதலைக்கு முழக்கமிட்ட பாரதிக்கு இரண்டு மகள்கள். வயதுக்கு வரும் முன்பே திருமணம் முடிப்பது அக்கால நியதி. இதைக் கடுமையாக எதிர்த்தவர் பாரதி. தன் மகள்களின் திருமண விஷயத்தில் ஒரு தகப்பனாக அவர் எதிர்கொண்ட சமூக நிர்ப்பந்தத்தின் வலியை அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். பாரதியின் மரணத்துக்குப் பின் செல்லம்மா பாரதி விதவைக் கோலம் மேற்கொள்ள நேர்ந்தது ஏன் என்ற கேள்விக்கும் விடை தேடியிருக்கிறார். கடைசி அத்தியாயத்தைப் படிக்கும் எவருக்கும் கண்களை நீர் நிறைக்கும்.
கள ஆய்வு முன்னோடி
1990-ல் மணலூர் மணியம்மா குறித்த ஆய்வை அவர் மேற்கொண்டபோதுதான் எனக்கு அவருடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. தனது 'சேற்றில் மனிதர்கள்' நாவலுக்காகத் தஞ்சை பகுதியில் கள ஆய்வு செய்யும்போதே மணலூர் மணியம்மாளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார் ராஜம் கிருஷ்ணன்.
விவசாயத் தொழிலாளர் மத்தியில் உரிமை உணர்வு ஊட்டிய அந்த வீரப் பெண்மணி 1950-களில் இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் பிரபலமாக இருந்தார். மணியம்மா, ஆண்களைப் போல் வேட்டியும் மேல்சட்டையும் அணிந்திருப்பார், முடியை வெட்டி கிராப் வைத்திருப்பார், சைக்கிளில் பயணிப்பார், சிலம்பம் பயின்றவர் போன்ற தகவல்கள் பெண்நிலைவாதியான ராஜம் கிருஷ்ணனின் ஆர்வத்தைத் தூண்டின.
1953-ல் மணியம்மா இறந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான விவசாயிகள் உணர்ச்சிப் பெருக்குடன் கலந்துகொண்டனர். அவரது இறப்பிலும் மர்மம் நீடித்தது. அவரது சாவு தற்செயலாக நிகழ்ந்ததா, திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கேள்விகளுக்கு விடை காணும் ஆர்வம் ராஜம் கிருஷ்ணனைப் பற்றிக்கொண்டது.
மரணத்தின் மர்மத்தைத் தேடி
திருவாரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கிக்கொண்டோம். தினமும் டவுன் பஸ் பிடித்து கிராமங்களுக்குப் போவோம். எங்களுக்கு வழிகாட்டி உதவ அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர் கோபால் உடன் வந்தார். கிராமத்துப் பாதைகளில் கால்நடைப் பயணம்தான். வெயில் உக்கிரமாக இருந்த கோடைக்காலம் அது. ராஜம்கிருஷ்ணனுக்கு வெயிலோ, தனது 65 வயதோ ஒரு பொருட்டாகவே இல்லை. மணலூர் அக்ரஹாரத்தில் மணியம்மாளின் உறவினர்களில் தொடங்கிப் பலரைப் பேட்டி எடுத்தார் ராஜம் கிருஷ்ணன். துருவித் துருவி அவர் கேட்பதை, டேப்ரிக்கார்டரில் பதிவு செய்வது என் வேலை.
ஒரு வாரம் பல்வேறு தகவல்களைத் திரட்டிய பின்பு மணியம்மாளின் சாவு நடந்த கிராமத்துக்குப் போனோம். பண்ணை வீட்டுக்குப் பேச்சுவார்த்தைக்கு வந்த மணியம்மா பேருந்தைப் பிடிக்க நடந்து போனபோது மான் முட்டி, கீழே விழுந்தார். மான் கொம்பு விலாவுக்குக் கீழே குத்திக் குடல் சரிந்ததால் இறந்துபோனார் என்ற தகவலை அங்கிருந்த கிராமவாசிகள் விதவிதமாகத் தங்கள் கற்பனைக்குத் தகுந்தபடி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அது திட்டமிடட்ட சதியா என்பது துலங்கவில்லை. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு நிகழ்வைத் தங்கள் நினைவு அடுக்குகளிலிருந்து மீட்டுச் சொல்வது இவர்களுக்குச் சாத்தியமில்லை என்று எனக்குத் தோன்றியது.
ஆய்வில் ஏற்பட்ட சலிப்பு
"உருப்படியாக யாராவது பேசினால் மட்டும் பதிவு செய்ய வருகிறேன்" என்று அவரிடம் சொல்லிவிட்டு மர நிழல் தேடி வேர் திரட்டின் மீது உட்கார்ந்தேன். முதியவர் ஒருவர் என்னை நெருங்கி வந்து, "இதையெல்லாம் விசாரிக்கிறீங்களே நீங்க என்ன போலீசா?" என்று கேட்டார். சிரிப்பை அடக்கிக்கொண்டு, "அவர் கதை எழுதுபவர், மணியம்மாவின் கதையை எழுதத் தகவல் திரட்டுகிறார்" என்றேன். "அந்தம்மாவை மான் முட்டிச்சே அப்ப நான் அங்கேதான் இருந்தேன். நேரில் பார்த்தேன்" என்றார் அவர்.
நான் ராஜம் கிருஷ்ணனை அழைத்து அவரை அறிமுகம் செய்தேன். உற்சாகமாகப் பேட்டியைத் தொடங்கினார். நான் டேப்ரிக்கார்டரை இயக்கினேன். "என் பேரு நாகப்பன். ஊரு பிணைவாசல். சம்பவம் நடந்தபோது நான் வண்டியிலிருந்து நெல் மூட்டைகளை இறக்கிக்கொண்டிருந்தேன். பண்ணை யாரு ஒரு கலைமான் வளர்த்துக்கிட்டிருந்தாரு. அது இங்கே, அங்கே திரியும். அதைப் பராமரிக்க ஒரு பையன் இருந்தான். அவன் மானின் மூக்கில் ஒரு குச்சியை நுழைத்து, அதுக்கு வெறி ஏத்தி அம்மா நடந்துவந்த பக்கமா ஏவிவிட்டதை நான் கண்ணால பார்த்தேன். அம்மா வெள்ளைத் துணிதான் எப்பவும் போட்டிருப் பாங்க. வெள்ளையக் கண்டா மானுக்கு ஆவாது. அது கொம்பால முட்டி குடலை உருவிடுச்சு."
கண்ட உண்மை
நான் திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். நாகப்பனின் முக பாவமும், பேச்சின் தொனியும் உண்மைதான் என்று நம்பும் வகையில் இருந்தது. அதுவே போதுமானதாக எனக்குத் தோன்றியது. ராஜம் கிருஷ்ணனுக்கு அது போதவில்லை. திரும்பத் திரும்ப நாகப்பனை விசாரித்தார். தன் வயதை உத்தேசமாகத்தான் நாகப்பனால் சொல்ல முடிந்தது. மணியம்மாள் இறந்த ஆண்டுடன் அதனைக் கணக்கிட்டு எதிரிலிருக்கும் சாட்சியம் சத்தியமானதுதான் என்று தெளிந்தார். அநேகமாகத் தனது ஒவ்வொரு நாவலையுமே கள ஆய்வு செய்து தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் அவர் எழுதியிருந்தார்.
ராஜம் கிருஷ்ணனின் எழுத்து நடை அழகியல் சார்ந்ததல்ல. பெரும்பாலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை முன்னிறுத்திய படைப்புகள் அவருடையது. அதனாலேயே கோடை மழைக்கு முன்பு உணரும் வெக்கையை ஒத்த ஒரு உணர்வை ஏற்படுத்தக்கூடியது. தகவல் திரட்டி எழுதிய பாங்கில் அவர் சில பிரச்சினைகளின் வேர்களைத் தவற விட்டிருக்கலாம். சில பரிமாணங்களை கவனிக்காமல் விட்டிருக்கலாம். அவரது அரசியல் கண்ணோட்டத்தில் சார்புத் தன்மை இருந்திருக்கலாம். ஆனாலும் அவரது தேடலில் நேர்மை இருந்தது. அவரது உழைப்பும், இடையறாத படைப்பாக்கமும் பிரமிக்கத்தக்கவை.
நண்பர்கள் மற்றும் ஆதரவு
கணவர் கிருஷ்ணனின் மறைவுக்குப் பிறகு உறவினர் ஒருவரை நம்பிக் கையிருப்பைத் தொலைத் தார் ராஜம் கிருஷ்ணன். அவர் நிராதரவாக இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. ஆனாலும் அவரது இறுதிக் கால அனுபவங்கள் ஒருபோதும் மோசமானதாக இல்லை. அவர் விருப்பத்தின்படி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அவரைத் தொடர்ந்து பராமரித்தது. சுமார் ஐந்தாண்டுகள் எந்த எதிர்பார்ப்புமின்றி மனித நேயத்துடன் அவருக்குச் சேவை செய்த மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருத்துவப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் வெங்கடாசலத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரது எழுத்துக்களை நாட்டுடைமை செய்து ஒரு பெரும் தொகையை தானே நேரில் சென்று வழங்கினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. எழுத்தாளர்களும், இடதுசாரித் தலைவர்களும் அவ்வப்போது சென்று பார்த்தனர்.
வாரம் தவறாமல் அவரை நலன் விசாரித்த நண்பர்கள் சிலர் அவருக்கு வாய்த்திருந்தார்கள். சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு நன்றாகப் பேசும் நிலையில் இருந்த அவர் 'பாதையில் பதிந்த அடிகள்' என்ற தனது நூல் செம்பதிப்பாக வெளிவர வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார். கோபுலுவின் சித்திரங்களுடன் காலச்சுவடு பதிப்பகம் அதனை வெளியிட்டது. புத்தகம் வெளிவந்தபோது படிக்க முடியாவிட்டாலும் சித்திரங்களைப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டார் ராஜம் கிருஷ்ணன். எத்தனையோ சோதனைகளுக்கு நடுவில் தனக்கான கவுரவத்தை இறுதிவரை தக்க வைத்துக்கொண்ட ஒரு சாதனை மனுஷியாகத்தான் அவர் வாழ்ந்திருக்கிறார்.
- கே.பாரதி, எழுத்தாளர். தொடர்புக்கு: bharathisakthi1460@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT