Published : 01 Feb 2014 01:48 PM
Last Updated : 01 Feb 2014 01:48 PM
பாரதி ஆய்வாளர் ரா. அ. பத்மநாபன் (1917-2014) என்கிற ராங்கிபுரம் புளிச்சேரி அனந்த பத்மநாபன் சென்ற திங்கள் கிழமை நம்மை விட்டு விடைபெற்றார். தமிழ் மனத்தில் நிலவும் பாரதி பற்றிய பிம்பத்தை உருவாக்கியவர் வ.ரா. என்றால் அந்தப் பிம்பத்திற்கு ஆதார வலு சேர்த்தவர் பத்மநாபன். வ.ரா.வோ பாரதியுடன் பழகியவர். ஆனால் ரா.அ.ப. அவரைப் பார்த்ததுகூட இல்லை. பாரதி மறைந்தபோது நான்கு வயது அவருக்கு.
பத்மநாபன் பத்திரிகைத் துறையில் 1933இல் தன் 16ஆம் வயதிலேயே நுழைந்து விட்டார். ஆனந்த விகடன், ஜெயபாரதி, ஹனுமான், ஹிந்துஸ்தான், தினமணி கதிர் ஆகிய இதழ்களில் கடமையாற்றினார். திருச்சி அகில இந்திய வானொலியில் சேர்ந்து பின்னர் தில்லி வானொலியின் அயல்நாட்டுச் சேவைப் பிரிவில் வேலை செய்தார். ஒரு காலத்தில் வருமான வரி செலுத்தக்கூடிய அளவில் ஓய்வூதியம் பெற்றவர் அவர். நிறைவாழ்வு வாழ்ந்த மனிதர்.
பத்மநாபன் பத்திரிகையாளராகப் பல்லாண்டுகள் செயல்பட்டிருந்தாலும் பாரதி ஆய்வாளராகவே வரலாறு அவரைப் பதிவு செய்துகொள்ளும். பாரதி பற்றிய தேடலை ரா.அ.ப. தன் இருபதாவது வயதில் 1937இல் தொடங்கினார். ஏறக்குறைய 1990கள்வரை அப்பணியிலும் அப்பணி பற்றிய விவாதத்திலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
பாரதி தேடலில் ரா. அ. பத்மநாபன் தான் கண்டவற்றைத் தொடர்ந்து நூல்களாக வெளியிட்டு வந்தார். சித்திர பாரதி (1957), பாரதி புதையல் தொகுதிகள் (1957, 1958, 1976) பாரதி புதையல் பெருந்திரட்டு (1982), பாரதியின் கடிதங்கள் (1982), பாரதி பற்றி நண்பர்கள் (1982), பாரதி கவி நலம் (1982), பாரதியார் மொழிபெயர்த்த தாகூர் கதைகள் (1958) ஆகியவை அவரது பாரதி நூல்கள் என்றால் அதில் 'சித்திர பாரதி', ஆ.இரா. வேங்கடாசலபதியின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘சுடர் விடும் மகுடம்.'
1957இல் வெளிவந்த சித்திர பாரதி, 220 ஆதாரபூர்வமான அரிய படங்களுடன் அமைந்த பாரதியின் வாழ்க்கை வரலாறு, பாரதி நூற்றாண்டில் இரண்டாம் பதிப்பும் 2006இல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்தன. முதல் பதிப்பு லெட்டர் பிரஸ் என்ற முறையில் அச்செழுத்துகளும், ஸ்கிரீன் பிளாக்குகளுமாக எடுத்துப் பக்கங்கள் சாதா வெள்ளைத் தாளிலும், படப் பக்கங்கள் உயர்ந்த ஆர்ட் தாளிலும் அச்சிடப் பெற்றன. இரண்டாம் பதிப்பில் ஆப்செட் அச்சு முறை கையாளப்பட்டது. இதில் பிளாக்குகள் கிடையாது. படங்களும் எழுத்துக்களும் ஒரே நெகடிவாக எடுத்து அச்சிடப்பட்டன. மூன்றாம் பதிப்பு வரலாற்றோடு தமிழ்நாட்டு அச்சுத் தொழில் வளர்ச்சியையும் பதிவுசெய்வதை நாம் கவனிக்கலாம். தான் இயங்கும் துறையில் நேர்ந்துள்ள மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கும் அவரது நுண்ணறிவு இதில் வெளிப்படுகிறது.
ரா.அ. பத்மநாபன், சித்திர பாரதி (1957) நூலுக்குப் பயன்படுத்திய அவ்வளவு படங்களையும் வெளியிட 2006 வரை 50 ஆண்டுகள் காத்துவந்ததை எப்படிப் புரிந்துகொள்வது? தேடத் தொடங்கிய காலத்திலிருந்து கணக்கிட்டால் 70 ஆண்டுகள். அவர் சேதாரம் இல்லாமல் அவற்றைப் பாதுகாத்துவந்தார். பாரதி தொடர்பான ஆவணங்கள், பொருட்களை வைத்து பாரதி கண்காட்சியையும் அமைத்தார். சில அரிய ஆவணங்களைப் புதுவை பாரதியார் நினைவில்லத்திற்கும் அளித்தார்.
ஒவ்வொரு வரலாற்றாய்வாளரும் தரவுகளைச் சேகரிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும் என்பார் பத்மநாபன். சரியான வரலாற்று எழுத்தியலுக்கு அடிப்படையான தரவுகளின் தேவையை வலியுறுத்தும் ரா.அ.ப., ஒவ்வொரு ஆய்வாளரும் ஒரு நாளிதழைப் பாதுகாத்து வைத்தால்கூடப் போதும் என்பார். நவீன தமிழ்நாட்டு வரலாற்றைச் சரியாக எழுதிவிட முடியும் என்பார். யாரால் சேகரிக்கவும் பாதுகாக்கவும் இயல்கிறது? அவரால் முடிந்தது. ரா.அ.ப.வின் அரை நூற்றாண்டுச் சேகரிப்புகள் சமீபத்தில்தான் ஒரு வரலாற்று ஆய்வாளரின் மேற்பார்வையில் பரிசீலனை செய்யப் பெற்று அமைதி பெற்றன.
பாரதியைப் பற்றி நண்பர்கள் (1982) என்ற நூற்பொருள் அபூர்வமானது. எஸ்.ஜி. இராமானுஜலு நாயுடு, வ.உ.சி., குவளை கிருஷ்ணமாச்சாரி, வயி.சு. சண்முகன், எஸ். வையாபுரிப் பிள்ளை உள்ளிட்ட 35 அரிய ஆளுமைகள் இளமை முதல் இறுதி நாள் வரையிலான காலத்தில் தாங்கள் பழகிய பாரதியை அதில் பதிவுசெய்திருந்தனர். காலத்தில் செய்த தேடல் அது. பாரதியார் மொழிபெயர்த்த தாகூரின் கதைகள் (1958), பாரதியின் கடிதங்கள் (1982) ஆகிய பல முன்னோடி நூல்களும் ரா.அ.ப.வின் கொடைகள். அவரது முயற்சியால் கால வெள்ளத்தில் கரைந்து போகவிருந்த பல பாரதி எழுத்துக்கள் பல கரை சேர்ந்தன.
பாரதி ஆய்வுக்கான அடிப்படைகளை உருவாக்கிய பெ. தூரன் உள்ளிட்ட பலருள் முதல் வரிசையைச் சேர்ந்தவர் என்பதாக ரா.அ. பத்மநாபனை விவரித்துச் சொல்லாம். ஆய்வாளராகவும் வரலாற்றாளராகவும் தன் வாழ்வைப் பாரதிக்கு ஒப்புக் கொடுத்தார் ரா.அ. பத்மநாபன். நன்றி மிக்க தமிழ்ச் சமூகம் 2003ஆம் ஆண்டு தமிழக அரசின் பாரதி விருதை அவருக்கு அளித்தது. காலச்சுவடு இதழ், குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட அதன் ஒரு விழாவில் அவரைக் கௌரவித்தது.
பாரதி தேடல்கள் போக, எழுத்தாளர் ரா.அ. பத்மநாபனின் விருப்பங்கள் பாரதி காலத்தின் தேசியவாதிகள் பற்றியனவாக இருந்தன. குறிப்பாக 1905இல் நடந்த வங்கப் பிரிவினையால் உருவான சுதேசி இயக்க விளைவுகளில் மையம் கொண்டன எனலாம். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்றோரின் வாழ்க்கைகளை எழுதியுள்ளார் எனினும் புரட்சி வீரர் நீலகண்ட பிரம்மசாரி (1978), வ.வே.ஸு. ஐயர் (1982) ஆகியன முக்கியமானவை.
தில்லியில் வாழ்ந்த காலத்தில் (1940களின் இறுதியில்) தில்லி தமிழ்ச் சங்கம் நடத்திய ‘சுடர்' கையெழுத்துப் பத்திரிகையில் இடம்பெற்ற ரா.அ. பத்மநாபனின் முத்து முத்தான கையெழுத்தைப் பல காலத்துக்குப் பிறகும் க.கி. கமலையா நினைவு கூர்ந்துள்ளார் (நமது பண்பாடு, 1972). கையெழுத்தைப் போலவே அவரது நடையும் தெளிவானது.
முதன்மை ஆதாரங்களாக அமைந்த தகவல்களைத் தேடித் தொகுத்துக்கொண்டு, தமக்கான பார்வையை வரித்துக்கொண்டு கதைபோல வரலாற்றைச் சொல்லும் முறையை ரா.அ. பத்மநாபன் கையாண்டார். ஆதார வலுக் கொண்டு எழுதும் இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் தமிழில் குறைந்துகொண்டே போகிறார்கள். ‘அதைப் பெருக்குங்கள்' என்பதுதான் ரா.அ. பத்மநாபன் போன்ற அடக்கமாக வாழ்ந்து சென்ற ஆளுமைகள் நமக்கு விட்டுச் செல்லும் செய்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT