Published : 31 Jan 2014 12:38 PM
Last Updated : 31 Jan 2014 12:38 PM
இன்றைக்கு எப்படியாவது அவன் கணக்கை முடிச்சுடணும் என்ற எண்ணம் வந்தபோது முத்து வேலுக்கு ஒரு ஆவேசமே வந்தது. வாங்கிய கடனுக்காக பார்க்கிற இடத்திலெல்லாம் சொல்லி சொல்லி அசிங்கப்படுத்தியதை மறக்க முடியவில்லை.
நேற்று அப்படித்தான் பக்கத்தில் ஜானகியோடு பேசிக்கொண்டு இருந்தபோது நாலைந்து நண்பர்க ளுடன் சினிமா வில்லன் மாதிரி வந்த நாகராஜ், ‘என்ன முத்துவேல், ஜாலியா பேசிகிட்டு இருக்க எங்கிட்ட கடன் வாங்கியதை எப்ப தர்றதா உத்தேசம்' என்று நக்கலாக கேட்டது மட்டுமில்லாமல் ஜானகிகிட்ட ‘பாத்து பழகும்மா அப்புறம் உங்கிட்டயும் கடன் வாங்கிருவான்' என்று சொல்லி விட்டு ஏதோ பெரிய ஜோக் சொன்ன மாதிரி சிரித்துக்கொண்டே போனான்.
திரும்ப திரும்ப அவன்கிட்ட அசிங்கப்பட முடியாது. இன்னை யோட அவன் சகவாசத்தை ஒழிச்சு கட்டிற வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவன் யாரும் கவனிக்காத வேளையில் ‘அதை’ கையில் எடுத்து பார்த்தான். சற்று கனமாகவே இருந்தது. ஒரு நிமிடம் அவனுக்கு அழுகையே வந்து விட்டது. இந்த நாகராஜ் பயல் நாம செய்யக்கூடாதுன்னு நினைச்சிருந்ததையெல்லாம் செய்ய வைச்சுட்டானே என்று ஒரு நிமிடம் ஆதங்கப்பட்டவன் மனசு மாறிவிடக்கூடாது என்று துணிவை வரவழைத்துக் கொண்டு கிளம்பினான்.
மாலை நேரம் என்பதால் நாகராஜ் ஊரின் ஒதுக்குப்புறம்தான் இருப்பான் என்று தெரிந்து அங்கு சென்றது சரியாக இருந்தது. அவனு டன் அவனது இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். யாருக்கும் தெரி யாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தது இப்போ முடி யாதே என்று நினைத்தாலும் எடுத்த காரியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவன் முன்னால் போய் நின்றான். என்ன என்பதைப் போல பார்த்த நாகராஜ், பாக்கெட்டிலிருந்து முத்துவேல் அதை எடுத்ததைப் பார்த்ததும் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டான். ‘என்ன காரியம் செய்ற முத்துவேல்’ என்றான்.
“பின்ன... நான் உங்கிட்ட கடன் வாங்கியதை நீ பாக்குற போதெல்லாம் சுட்டிக் காட்டுவ... நான் மட்டும் பொறுத்து பொறுத்து போகணுமா? அதான் ஒரு முடிவோட வந்திருக்கேன்.”
“இல்ல முத்துவேல் நா உன்னய தப்பா பேசல. ஜாலியாத்தான் கேட் டேன். தப்பா நினைக்காத இனிமே நா அதப் பத்தி பேச மாட்டேன்.”
“இல்ல நாகராஜ் நா எடுத்த முடிவில் மாற மாட்டேன்” என்று கூறிவிட்டு தன் கையிலிருந்த உண்டி யலை அவன் அருகிலேயே உடைத் தான். “இதில நான் உங்கிட்ட வாங்கின 50 ரூபாய்க்கு மேல இருக்கும். அத நீ வட்டியா வைச்சுக்கோ. நா ஆசையா சேர்த்து வைச்ச பணம் எந்த காரணத் தினாலும் இதை எடுக்கக்கூடாதுங் கிற முடிவைக்கூட உன்னால நா மாத்திகிட்டேன். என்னோட சேமிப்பு போறதை விட உன் னோட டார்ச்சர் இன்னையோட முடியுதுங்கிற சந்தோஷத்தில நா போறேன். இனிமே ஸ்கூல்ல ஜானகி முன்னாடியோ இல்ல யார் முன்னாடியோ நீ என்னோட கடனை பத்தி பேச முடியாது. ஓரே வகுப்பில நாம இருந்தாலும் இனி உனக்கும் எனக்கும் எந்த நட்பும் இல்ல.
இன்னையோட உன் கணக்கு முடிஞ்சிடுச்சுடுச்சு' என்று கூறிவிட்டு நடந்தான் 6ம் வகுப்பில் படிக்கும் முத்துவேல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment