Published : 18 Feb 2017 10:10 AM
Last Updated : 18 Feb 2017 10:10 AM
நாம் எத்தனையோ பேரை தினமும் சந்தித்தாலும் ஒருசிலர் மட்டுமே நமக்கு நண்பர்களாக இருப்பார்கள். திரைப்படங்களுக்குப் போவது, டீ குடிக்கப் போவது, உணவகங்களுக்குப் போவது எல்லாமே அவர்களுடன்தான். உயிரினங்களும், தங்களுக்கு உகந்த பிற உயிரினங்களுடன் உகந்த இயற்கைச் சூழலில்தான் இருக்கும். சொற்களும் அதுபோல்தான். குறிப்பிட்ட சொல் குறிப்பிட்ட சில சொற்களுடன் சேர்த்துதான் வழக்கமாகப் பயன்படுத்தப்படும். ஒன்றுக்கொன்று ஒட்டாத சொற்களை வலுகட்டாயமாக அருகருகே பயன்படுத்தினால் மொழிநடை மிகவும் நிரடலாக ஆகிவிடும். இடது பக்க மாட்டை வலது பக்கத்திலும் வலது பக்க மாட்டை இடது பக்கத்திலும் பூட்டி மாட்டு வண்டியை ஓட்டுவதுபோல.
ஆங்கிலத்தில் ஏராளமான சொற்சேர்க்கை அகராதிகள் உண்டு. ‘பிபிஐ காம்பினேட்டரி டிக்ஷ்னரி’, ‘ஆக்ஸ்ஃபோர்டு கலகேஷன் டிக்ஷ்னரி’ போன்றவை முக்கியமானவை. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் கிட்டத்தட்ட எதுவுமே இல்லாதிருந்த சூழலில் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது மொழி நிறுவனத்தின் ‘தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி’ (தமிழ்-ஆங்கிலம்).
‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ (1992 பதிப்பு), ‘மொழியின் மரபுத்தொடர் அகராதி’ போன்ற அகராதிகளின் ஆசிரியரான பா.ரா. சுப்பிரமணியனின் ஆசிரியத்துவத்தில் அறிஞர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் அடங்கிய குழு ஒன்று இந்த அகராதியை உருவாக்கியிருக்கிறது. முன்னும் பின்னும் பிற சொற்கள் இணைவதற்கு அனுமதிக்கும் மூவாயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட பெயர்ச்சொல்கள் மட்டும் இந்த அகராதியில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பொது எழுத்துத் தமிழ் என்பது இந்த அகராதியின் எல்லை.
‘வெற்றி அடைந்தான்’, ‘தோல்வி அடைந்தான்’ என்று சொல்கிறோம். ஆக, ‘வெற்றி’ என்ற சொல் வரும் இடங்களிலெல்லாம் ‘தோல்வி’ என்ற சொல்லைப் பதிலீடு செய்துகொள்ளலாம் என்று நினைப்போம். அப்படி முடியாது! ‘வெற்றி பெற்றான்’ என்ற சொற்றொடரை ‘தோல்வி பெற்றான்’ என்று சொல்லும் மரபு இல்லை அல்லவா!
‘கருத்து’ என்ற சொல்லுக்குப் பின்னால் இணையக்கூடிய சொற்களின் பட்டியலைப் பாருங்கள்: ‘கவர்’, ‘உருவாகு’, ‘வலுப்பெறு’, ‘உருவாக்கு’, ‘கூறு’, ‘சொல்’, ‘தெரிவி’, ‘வெளியீடு’, ‘பரிமாறு’, ‘பரப்பு’, ‘கேள்’, ‘அறி’, ‘ஆதரி’, ‘ஆமோதி’, ‘வலியுறுத்து’, ‘நிறுவு’, ‘பதிவுசெய்’, ‘மதிப்பளி’, புறக்கணி’, ‘செலுத்து’, ‘திணி’, ‘முன்வை’. இப்படி, முன்னும் பின்னும் வரக்கூடிய சொற்களைக் கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல் எடுத்துக்காட்டு வாக்கியங்களையும் கொடுத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
தனிநபரோ ஒரு குழுவோ உட்கார்ந்து யோசித்து யோசித்துச் சொற்களைச் சேர்த்துத் தொகுத்து இதுபோன்ற அகராதிகளை உருவாக்குவதில்லை. இதுபோன்ற பணிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இலக்கண, இலக்கிய, மொழியியல் அறிவும் தொழில்நுட்ப அறிவும் பற்றி நாம் அறிய மாட்டோம். சொற்களின் பெரும் உண்டியல் போன்ற ‘சொல்வங்கி’ என்ற சொல்தொகுப்பில் பல்வேறு புத்தகங்களும் உள்ளிடப்பட்டிருக்கும்.
கணினியைப் பயன்படுத்தி ‘செயல்’ என்ற சொல் இடம்பெற்றிருக்கும் வாக்கியங்களையும் சொற்றொடர்களையும் தேடினால் அந்தச் சொல் இடம்பெற்றிருக்கும் பல்லாயிரக் கணக்கான வாக்கியங்கள், வெவ்வேறு நூல்களிலிருந்து கணினி மென்பொருளால் உருவப்பட்டும் வரிசையாக நம் முன்னால் வைக்கப்படும். அந்த வாக்கியங்களைப் பார்க்கும்போது ‘செயல்’ என்ற சொல்லின் முன்னும் பின்னும் எந்த மாதிரியான சொற்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன என்பது தெளிவாகிவிடும்.
இந்தத் தரவுகளை மொழியியல்-அகராதியியல் கட்டமைப்புடன் இணைத்து உருவாக்குவதுதான் சொற்சேர்க்கை அகராதிகள் உள்ளிட்ட அகராதிகளை உருவாக்குவதற்கான அறிவியல் முறை. இந்த அறிவியல் முறையைப் பின்பற்றி உருவாகியிருக்கும் இந்தச் சொற்சேர்க்கை அகராதி தமிழ் மொழி சார்ந்த பணிகளில் குறிப்பிடத் தகுந்த ஒரு முயற்சி!
சொற்சேர்க்கைகள் இடம்பெறும் தமிழ்ச் சொற்றொடர்கள் மட்டுமல்லாமல் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது, ஆங்கிலம் கற்றுக்கொள்பவர்களுக்குப் பயனளிக்கக் கூடியது என்றாலும் சொற்சேர்க்கை அகராதியில் இன்னொரு மொழி இடம்பெற்றிருப்பது அகராதியியல் முறைப்படி சரியா என்ற கேள்வியும் எழுகிறது. இருமொழி அகராதிகள் உண்டு, ஆனால், இருமொழி சொற்சேர்க்கை அகராதிகள் உண்டா?
இந்த அகராதியைத் தொடர்ந்து வினைச்சொற்கள் உள்ளிட்ட பிற இலக்கண வகைச் சொற்களுக்கும் அகராதிகள் வருமென்றால் மிகுந்த பயன் ஏற்படும். அப்படி வரப்போகும் அகராதிகளுக்கெல்லாம் நல்லதொரு தொடக்கமாக இந்த அகராதி அமைந்திருக்கிறது.
கட்டுரையாளர் தொடர்புக்கு
asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT