Published : 08 Jul 2016 10:46 AM
Last Updated : 08 Jul 2016 10:46 AM
பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். சிலரை அழைத்து ஒரு நூலை வெளியிடுவதற்குக் கூட தணிக்கை உள்ளது. போலீஸ் அனுமதி வாங்க வேண்டும். ஒருமுறை சென்னை டிஸ்கவரி புக் பேலஸ்ஸில் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘ஆதலினால்’ மற்றும் ‘இன்றில்லை எனினும்’ ஆகிய இரு நூல்களை நான் வெளியிடுவதாக இருந்தது. இரண்டும் கட்டுரைத் தொகுப்புகள். அது தேர்தல் நேரம். காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. இரண்டும் மிக நல்ல நூல்கள். எப்படியும் கவனம் பெற்றுவிடும்.
சல்மான் ருஷ்டியின் ஒரு நாவலை இந்திய அரசு தடை விதித்துவிட்டது. ‘டாக்டர் ஜிவாகோ’ என்ற நூல், மற்றும் அதையொட்டி எடுக்கப்பட்ட திரைப்படம் இரண்டுக்கும் அப்படி ஒரு தடை வந்துவிடுமோ என்ற சூழ்நிலை எழுந்தது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அதனை தடை செய்யவில்லை. உண்மையில் படத்துக்குத் தடை வேண்டும் என்று எண்ணியவர்கள் படத்தைப் பார்த்திருந்தால் அது அவர்களின் சித்தாந்த அக்கறைகளுக்கு அழுத்தம் தருவது என்பதை உணர்ந்திருப்பார்கள். அந்தப் பிரம்மாண்டமான படத்தின் சிறப்பான இசை தமிழ் இசைக் கலைஞர்களையும் கவர்ந்தது. வீணை சிட்டிபாபு அவருடைய கச்சேரிகளில் அந்தப் பின்னணி இசையைத் தவறாமல் வாசிப்பார்.
இந்த ஜூன் மாதமெல்லாம் பூமி சூரியனைச் சுற்றுவதே இதற்காகத்தான் என்பதுபோல ஒரு சினிமாப் படம் எல்லாரையும் கவனிக்கச் செய்தது. முத லில் 90 இடங்கள் நீக்கப்பட வேண்டும்; அது தேய்ந்து 13. அதுவும் குறைந்து ஒரே ஒரு இடம் காரணம் சிறுநீர் நாற்றம் கடைசியில் அந்த ஒரே ஒரு வெட்டுடன் ‘பஞ்சாப் எழுகிறது’ என்ற திரைப்படம் வெளியாகியிருக்கிறது. எனக்குத் தெரிந்து எல்லாத் தீய நடவடிக்கைகளைக் கண்டிப்பது போலத்தான் எல்லாத் திரைப் படங்களும் முடிகின்றன. ஆனால், மக்களிடையே பெரிய மாற்றம் தோற்றுவித்ததாகத் தெரியவில்லை. உடை, நடை, தலை வாருவது போன்ற மேலோட்டமான விஷயங்கள் சில காலம் வித்தியாசம் ஏற்படுத்துகின்றன. ஆனால் அடிப்படைத் தன்மைகள் அப்ப டியே இருந்து வருகின்றன. ஒருவன் ரயில்வே ஃபிளாட்பாரத்தில் ஓர் இளம் பெண்ணை அடித்துக் கொலைசெய் கிறான். இன்னொருவன் ஐந்து பெண் களை வெட்டிக் கொலை செய்கிறான். இந்தக் கொலைகாரர்கள் பார்க்காத திரைப்படமா, கேட்காத நற்போதனையா?
ஆரம்பத்தில் யாரும் திரைப்பட சாதனத்தைப் பெரிதாகப் பொருட்படுத்த வில்லை. அதன் புதுமை வெகு சீக்கிரம் அலுத்துவிடும் என்றுதான் நினத்தார்கள். ஆனால், இரண்டாம் உலக யுத்த காலத்தில்தான் அதன் பாதிப்பு எளிதில் அறியக்கூடியது அல்ல; எங்கு எப்படி பாதிப்பு ஏற்படும் என்றும் கூறமுடியாது என்று ஒருவாறு உணர முடிந்தது. ஐரோப் பாவில் 1945-ல் ஜெர்மனி மிக மோசமான நிலையில் இருந்தது. அப்போது கூட ஒரு யூத எதிர்ப்புப் படத்தை ஹிட்லர் குண்டடி படாமல் மிஞ்சி இருக்கும் திரையரங்கு களில் வெளியிட வைத்தான். சுமார் 100 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தில் யூதர்கள் திருடர்கள், யோக்கியமற்றவர்கள், பார்க் கும் பெண்களையெல்லாம் வற்புறுத் துவார்கள். இறுதியில் ஒரு ஜெர்மானியன் ஆவேசத்துடன் நீண்ட உரை நிகழ்த்துவான். அந்த உரையை ஹிட்லரின் பிரசார அமைச்சரான கோயபெல்ஸே பேசினான் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படம் வெளியிடப்பட்டபோதே ஆறு லட்சம் யூதர்களைக் கொன்று சாம்பலாக்கியாயிற்று. பல லட்சம் யூதக் கைதிகள் எழுந்து நிற்க இயலாத நிலையில் எலும்பும் தோலுமாகக் கிடந் தனர். கோயபெல்ஸே இன்னும் மூன்று மாதங்களில் தன் குடும்பத்தோடு தற் கொலை செய்துகொள்ளப் போகிறான், அப்போதும் யூதத் துவேஷம் குறைய வில்லை. மிகத் தீவிரமாக எடுக்கப்பட்ட அப்படத்தை இன்று பார்த்தால் ஏதோ கேலிச் சித்திரம் போல இருக்கும்
அமெரிக்காவில் தயாரிப்பாளர்களா கவே ஒரு தணிக்கை ஏற்பாடு செய்தார் கள். அதைத் தவிர கத்தோலிக்க இயக்கம் ஒரு சான்றிதழ் தரும். அந்த இரு தணிக்கைகளை மீறியும் படத்தை வெளியிடலாம். அப்படிச் செய்வது தயாரிப்பாளர் ஒற்றுமையைப் பாதிக்கும் என்று தணிக்கை விதிகளை மீறாதபடி படம் தயாரிப்பார்கள். துறையில் பெருத்த முதலீடு செய்திருக்கும் பெரிய தயாரிப்பாளர்கள் வம்பில் மாட்டிக் கொள்ளவே மாட்டார்கள். ஆங்கிலத்தில் thus far and no further என்ற சொற்றொடர் இருக்கிறது. அதற்கேற்ப அப்பெரு முதலாளிகள் நடந்துகொள்வார்கள்.
இந்தியாவில் பல தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் இந்தத் தணிக்கை வம்பில் சிக்கிக் கொள்ளவே மாட்டார்கள். பிமல் ராய், ரிஷிகேஷ் முகர்ஜி, சத்யஜித் ராய், மெஹ்பூப், சேதன் ஆனந்த் போன்றவர் கள் கோர்ட்களையும் வழக்கறிஞர்களை யும் அணுகத் தேவையில்லாமல் இயங்கி னார்கள் . அவர்கள் சமகாலத்தையும் பிரதி பலித்தார்கள், முந்தைய தலைமுறை களையும் பயன்படுத்தினார்கள்.
நான் சிறிது காலம் தணிக்கைக் குழுவின் கடைசிக் கட்டப் பகுதியில் இருந்தேன். இதுதான் எந்தப் படத்தையும் முதலில் பார்க்கும். ஐந்து நபர்கள் இருப்பார்கள். ஒரு அதிகாரி, ஒரு வேற்றுமொழி அங்கத்தினர், ஒரு பெண் அங்கத்தினர் இருந்தே ஆக வேண்டும். இவ்வளவு நிபந்தனைகள் யார் ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்கே. பெண் உறுப்பினர்கள் பொதுவாக யதார்த்த நிலை அறிந்தவர்களாக இருப்பார்கள். ஆதலால் அவர்கள் காரணமாக பெரிய பிரச்சினை எழாது. ஆனால், சினிமாவே பார்க்காத அங்கத்தினர்கள் நூறு குற்றங்கள் கண்டுபிடிப்பார்கள். ஐவரும் விவாதித்து ஒரு முடிவெடுத்து அதன் பின் தயாரிப்பாளரை அழைத்து வெட்டுகள் பற்றி அவர் சம்மதத்தைக் கேட்பார்கள். அனுபவமுள்ள தயாரிப் பாளர் உடனே சரி என்று கூறிவிடுவார். ஆனால், பாடலில் வெட்டு வந்தால் விவாதிப்பார்கள். அனுபவம் உள்ள தயாரிப்பாளர், பாடலாசிரியர் முதலி லேயே மறுப்பு வராதபடி பார்த்துக் கொள்வார்கள்.
தணிக்கைச் சர்ச்சை எழுப்பும் படங் கள் பெரும்பாலும் ஏதோ உன்னத நோக் குக்காக எடுக்கப்பட்டவையல்ல. ஒரு முறை ஒரு குட்டி ஜமீன்தார் அவர் படத் தைக் காண்பித்தார். அவர் விரசமாகக் காட்சிகள் சில வைத்திருந்தார். ‘வெட்டி விட்டேன்’ என்று மறுமுறை காட்டினார். ஒரு பகுதியும் எடுக்கவில்லை. உண்மைக் காரணம், படத்தை மீண்டும் எடிட்டிங் செய்ய அவரிடம் பணம் இல்லை. அவர் படத்தை வெளியிட்டாரா, இல்லையா என்று தெரியவில்லை. அவர் ஊரில் ரகசியமாக அவர் விருப்பத்துக்கு உரியவர்களுக்குக் காண்பித்திருப்பார்.
’பஞ்சாப் எழுகிறது’ வெளியாகி விட்டது. பெரிய கலவரம் ஏதும் விளை வித்ததாகத் தெரியவில்லை. பக்கம் பக்கமாகச் சினிமா பற்றி எழுதுபவர்களும், கருத்து சுதந்திரத்துக்காகப் போராடு பவர்களும் அதிகம் அபிப்பிராயங்கள் வெளியிட்டதாகத் தெரியவில்லை. இவ்வளவு போராடியதற்கு அதுவும் கிட்டத்தட்ட ஒரு ஆட்டம், பாட்டம் படம் என்பதால் இருக்கலாம்.
- புன்னகை படரும்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT