Published : 09 May 2017 10:52 AM
Last Updated : 09 May 2017 10:52 AM
மூன்று தலைகள், ஆறு கைகள் என பல் வேறு வகை கடவுள் இருக்கிறார்கள். ‘‘மூன்று கால் உள்ள கடவுள் யாராவது இந்தியாவில் இருக்கிறார்களா?’’ என நண்பர் ஒரு வரிடம் கேட்டேன். ‘‘இல்லை…’’ என்றதோடு ‘‘எப்படி இதுபோல யோசிக்கிறீர்கள்?’’ எனக் கேட்டார்
‘‘இது ஒரு எளிய சந்தேகம்தான். திடீரென தோன் றியது. விடை தேடிப் பார்த்தேன். கண்டறிய முடிய வில்லை. அதுதான் உங்களிடம் கேட்டேன்!’’ என்றேன்.
சிரித்தபடியே நண்பர் கேட்டார்: ‘‘எல்லோரும் ஏற்றுக்கொள்கிற விஷயத்தை, ஏன் எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்? ஒவ்வொன்றையும் ஏன் ஆராய்கிறீர்கள்? அப்படி என்ன கிடைத்துவிடப்போகிறது?’’
உண்மை! எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனை யாளர்கள் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை தன். சுயசிந்தனையைச் சார்ந்தே முடிவுகள் எடுக்கிறார்கள். பொதுப் புத்தி சொல்வதை அப்படியே அவர்கள் நம்புவ தில்லை. ஆராய்ந்து பார்க்கிறார்கள். விசாரணை செய்கிறார்கள். ஆகவே, அவர்களால் தனித்துவமான பார்வையுடன் ஒன்றைப் பார்க்கவும், புரிந்துகொள்ளவும், வெளிப்படுத்தவும் முடிகிறது.
சுயசிந்தனையும் நுண்ணுணர்வும் கொண்டிருப்பதால்தான் படைப்பாளிகள் கொண்டாடப்படுகிறார்கள். அதனாலேதான் அவர்கள் வாழ்க்கை நரகமாகிப் போகிறது. நுண்ணுணர்வு கொண்ட ஒருவனை சமூகம் வாழ அனுமதிப்பதில்லை. சகல நெருக்கடிகளையும் அவன் மீது திணிக்கிறது. பொதுப் புத்தியே போதும் என அறிவுறுத்துகிறது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் நுகர்வு கலாச்சாரத்தினுள் முழ்கி கிடக்கவேண்டும் என்பதே உலகின் பொதுவிதி. அதை மீறுகிறவர்களை ஒதுக்கியும், பரிகசித்தும், விலக்கிவைத்தும் சமூகம் துண்டாடுகிறது.
படிப்பின் பயன் என்பது வேலை தேடுவது, சம்பாதிப்பது மட்டுமில்லை; சுயசிந்தனையுடன் தேடலுடன் உலகை புரிந்துகொள்வதாகும். சாக்ரடீஸ் எழுப்பிய கேள்விகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நம்மிடையே எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அது சிந்தனை யின் வலிமையைக் காட்டுகிறது. எது குறித்தும் கேள்வி கேட்டு, அதன் அடிப்படைகளைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீஸின் பாணி.
ஏதென்ஸ் மக்கள் சாக்ரடீஸிடம் பேசினால் தங்களுக்குத் தெளிவு கிடைக்கும் என்று நம்பினார்கள். சாக்ரடீஸ் பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகளைச் சொல்வது இல்லை. மாறாக, பிரச்சினைகளின் காரணத்தை கேள்வியின் மூலம் உணரச்செய்கிறார். அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பகுத்தறிவுகொண்டு சிந்திக்க வைக்கிறார்.
இதனால் பொது மக்கள் பிரச்சினைகள் எதனால் உருவா கிறது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். அதைப் போக்குவதற்குக் குரலும் கொடுத்தார்கள். சாக்ரடீஸ் தனது காலத்திய சமூக பழக்க வழக்கங்களை ஆராய்ந்து கேள்விகள் எழுப்பியதுடன் அரசாங்கத்தை, அதிகாரத்தைக் கடுமையாக விமர்சனமும் செய்தார். அந்தத் துணிச்சல், நேர்மை, மன உறுதியே இன்றளவும் சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டுகிறது.
விஷம் குடித்து சாக வேண்டும் என சாக்ரடீஸ் தண்டிக்கப்பட்டார். அப்போதும் அவர் விஷத்தைக் கண்டு பயப்படவில்லை. கையில் வாங்கி விரும்பிக் குடித்தார். தான் தீர்க்க வேண்டிய கடன் பாக்கியை நினைவுபடுத்திவிட்டே அவர் மரணத்தை சந்தித்தார். சாக்ரடீஸின் மரணத்தைப் பற்றி குறிப்பிடும்போது ‘சாக்ரடீஸ் சிந்திப்பதை நிறுத்தி விட்டார்’ என்றே சீடர்கள் அறிவித்தார்கள். சிந்திப்பதே மனிதனின் சிறப்பியல்பு. ‘மனிதன் என்பவன் மதிப்பீடு களை உருவாக்கிக்கொண்டு வாழும் ஒரு விலங்கு’ என்பார்கள்.
ராபர்ட் ஓவன் என்ற எழுத்தாளர் ‘எ நியூ வியூ ஆஃப் சொசைட்டி’ என்ற நூலில், மக்கள் அனைவருக்கும் முறையாக கல்வி, பயிற்சி மற்றும் வேலையும் அளிக்கப்பட்டால் சமூகம் எவ்வாறு வளர்ச்சியடையும் என்பதை விளக்கி எழுதியிருக்கிறார்.
அதில் ‘தொழிற்புரட்சியினால் ஒரு சிலருக்கே லாபம் கிடைத்தது. அவர்கள் சந்தையைப் பயன்படுத்தி பெரும் செல்வந்தர்கள் ஆனார்கள். ஆனால், பல்லாயிரம் உழைப் பாளர்கள் கஷ்ட நிலையில்தான் வாழவேண்டிய துரதிருஷ்டம் ஏற்பட்டது. இந்நிலை மாற்றப்படவேண்டும்’ என்கிறார்.
சமூகம் குறித்து நாம் சிந்திக்கவும், ஆராயவும், தேடவும் விடா மல் நுகர்வு கலாச்சாரம் நம்மை விழுங்கிக்கொண்டிருக்கிறது. அதில் இருந்து விடுபடவே கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் களச் செயற்பாட்டாளர்கள் முயற்சித்து வருகிறார்கள். அவர்களைப் புரிந்துகொள்வதோடு தேவையான ஒத்துழைப்பும் உறுதுணையும் தரவேண்டியது சமூகத்தின் கடமையாகும்.
வில்லியம் ஸ்டான்லி மெர்வின் எனப்படும் டபிள்யூ.எஸ்.மெர்வின் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர். இவரது ‘மணல்’ என்ற சிறுகதை இரண்டே பக்கங்கள் கொண்டது. அபாரமான இச்சிறுகதை உலகச் சிறுகதைகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
மணல் கடிகாரம் ஒன்றினுள் நிரப்பப்பட்ட மணலிலுள் எப்படியோ ஓர் எறும்பு பிறந்து விடுகிறது. அதற்கு வெளியுலகம் என்ற ஒன்றே தெரியாது. மணல் துகள்களைத் தனது சகோதரர்களாக நினைக்கிறது. மேலிருந்துக் கீழாக, பின்பு கீழிருந்து மேலாக எதற்காக இப்படி தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கிறோம் எனக் குழம்பியது. தன்னை எதற்காக மணல் துகள்கள் இப்படி இடித்துத் தள்ளுகின்றன. தன்னைப் போல அவை சுதந்திரமாக நகர ஏன் முயற்சிப்பதில்லை என யோசிக்கிறது. கண்ணாடி குடுவைக்கு வெளியே உலகம் இயங்கிக்கொண்டிருப்பதோ, அங்கே எறும்புகளால் சர்வ சுதந்திரமாக உலவ முடியும் என்றோ அதற்குத் தெரியவில்லை.
முடிவில்லாமல் அது மணல் துகள்களுடன் இழுபட்டபடியே இருந்தது. தன்னைச் சுற்றிய மணல் துகள்களைக் கணக்கிட முயன்று தோற்றுப்போனது. தான் தனியாக இருக்கிறோம் என்பதைக் கூட அந்த எறும்பு உணரவில்லை என்பதுடன் அக்கதை முடிகிறது.
இக்கதையை வாசித்த கணத்தில் அதிர்ந்துபோனேன். இது எறும்பின் கதையில்லை. நம் கதை. நவீன மனிதனின் கதை. மணல் துகள்களுக்குள் கலந்துபோய்விட்ட, ஆனால் விழிப்புணர்வுகொண்ட எறும்புபோலத்தானே எழுத்தாளனும் இருக்கிறான். ‘தான் வேறு’ என உணரத் தொடங்குகிற ஒருவனின் தத்தளிப்பை, இவ்வளவு அழுத்தமாக இரண்டே பக்கங்களில் சொல்லமுடிவது மெர்வினின் எழுத்தாற்றலே.
மணல் துகள்களோடு வாழும் எறும்பு ‘தான் உயிருள்ள ஓர் உயிரி’ என உணரத் தொடங்கியது தவறா? அப்படி உணர்ந்துகொண்டாலும் மணல் துகள்களுடன்தான் இழுபட வேண்டுமா? அன்றாட வாழ்க்கை என்பது அலைக்கழிக்கப்படுவது மட்டும்தானா?
தன்னையும் மணல் துகள் என எறும்பு நினைத்துக் கொள்வதுதான் கதையின் உச்சம். ஆனால், தன்னைப் போல ஏன் மணல் துகள்கள் சுயவிருப்பத்தின்படி நடப்பதில்லை என எறும்புக்குப் புரிவதில்லை. தப்பிக்க முடியாத நெருக்கடி என்பார்களே அதற்கு இந்த எறும்பே சரியான உதாரணம்.
கிணற்றுத் தவளைகள் இப்போது வெளியேறியிருக்கின்றன. ஆனால், அதன் கிணற்றுத் தவளை மனோபாவம் மாறவேயில்லை. அவை எங்கே போனாலும் தனக்கென ஒரு கிணற்றை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றன. தன்னைப் போன்ற மனநிலை கொண்டவர்களிடம் மட்டுமே பழகுகின்றன. கிணறுகள் மறைந்துபோனாலும் கிணற்றுத் தவளைகள் மறைவதில்லை!
- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com
இணைய வாசல்: >நவீன ஈசாப் கதைகளை வாசிக்க
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT