Published : 22 Feb 2014 06:46 PM
Last Updated : 22 Feb 2014 06:46 PM
படைப்பிலக்கியத்திற்கு வரலாற்றுத் தரவுகள் வெறும் பருப்பொருள்கள்தான். தகுந்த புனைவுமொழிக்குள் அவை இணைவதைப் பொருத்துத்தான் அவற்றின் முக்கியத்துவம் வலுப்பெறுகிறது.
போரும் வாழ்வும் நாவலின் பின்பகுதியில், நெப்போலியன் வகுத்த வியூகங்களையெல்லாம் கூறி அவனது தோல்விக்கான காரணங்களைப் பேசும் ஆராய்ச்சியாளர்களின் வாதங்களையெல்லாம் முற்றாக மறுத்துவிடும் டால்ஸ்டாய். போர்க் கள நிகழ்வுகளைத் தாண்டி உலக வாழ்க்கை குறித்த மாபெரும் வியாசத்தை வழங்குகிறார்.
அதன் மூலம் நேர் எதிராக உள்ள வரலாற்றைச் சூழ்ந்து நிற்கும் யதார்த்த உலகின் பிரதியட்ச கணங்களைக் கண் முன் நிறுத்துகிறார்.
வேட்டைத் தொகுப்பிலும் போர் என்பது பருப்பொருளாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வேட்டைத் தோப்பு கதையில் இயக்கச்சி எனும் தன் பூர்வீக கிராமத்திற்குச் செல்கிறார் ஆசிரியர்.
ஹாலந்து நாட்டிலிருந்து இவரது மாணவர் அந்த ஊரைச் சுற்றியிருந்த கோட்டைகளைத் தாக்கியதும் அந்தக் கோட்டைகளில் 17ஆம் நூற்றாண்டில் தங்கி இருந்த ஹாலந்து கேப்டன்கள் பனங்கள் போதை மயக்கத்தில் திளைத்த நாட்களும் நாடகமாக விரிகின்றன.
பாசி படர்ந்த சிகப்புக் கட்டிடப் பள்ளிக்கூடத்தையும் முருகைக் கல்லில் கட்டப்பட்ட அம்மன் கோவிலையும் பனையும் தென்னையும் காய்த்துக் குலுங்கும் கிராமம் அழகாகத் தீட்டப்பட்டுள்ளது. அங்குள்ள முதியவரை விசாரிக்கிறார். அவர், ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த மோதலில் கோட்டைகள் தகர்க்கப்பட்டன என்கிறார்.
அந்தப் பெரியவர் ஒரு இளைஞனையும் அறிமுகப்படுத்துகிறார். ஹாலந்துக்கார்களின் 27ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர் இவர் என்கிறார். இவரது தம்பி புலிகள் சார்பில் சண்டையிட்டு மரணம் அடைந்தவர் என்கிறார். இக்கதையின் வழியே புதிய வரலாறு தலையெடுக்கிறது.
மனித சேதாரங்கள்
வீடு அழிந்துவிட்டது. ஊர் களவு போயிற்று. பிள்ளைகளைத் தெருக்கள் தின்றுவிட்டன என்றெல்லாம் வலியின் மனவோட்டமாகவே நகரும் கதையும், குடும்பத்தினரை குழந்தைகளைப் பிரிந்த பெரியவர் போக இடம் எதுவுமற்றுத் திரியும் கதையும், இயக்கத்திலிருந்து வந்து குடும்பத்தைத் தேட எல்லாரும் அகதி முகாம்களில் இருப்பதைக் கண்டு அந்த நிலையில் அவர்களைப் பார்க்கப் பிடிக்காமல் வேண்டாம் என வெளியே வந்து கதறும் இளைஞனின் கதையுமாகப் பல கதைகள் ராணுவத் தாக்குதலின் மனித சேதாரங்களைப் பற்றி பூடகமாகவும் வெளிப்படையாகவும் நுட்பமாகப் படைப்பாக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், இயக்கங்கள் உருவான கதையும், அந்த இயக்கங்கள் போராடிய கதையும், விடுதலைப் புலிகளால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுப் பல நூறு இளைஞர்களின் வாழ்க்கை பாழான கதைகளையும் இயக்கச் செயல்பாடுகளின் நுட்பமான விவாதங்களையும் இவர் பேசிச் செல்கிறார்.
இளமையும் வாழ்வும் தொலைந்த பாதிப்பில் இக்கதைகளில் இவரது குரல் முறிந்து கரகரப்பதை உணர முடிகிறது. ‘தமிழீழம் அந்தரத்தின் மிதக்கும் கனவு' என்று உயிர் இழப்புகளின் வலியில் கதறுகிறது அவரது ஒரு பாத்திரம்.
பாரீஸில் அகதி கார்டு கிடைக்காமல் அலையும்போது, ஐரோப்பியர் ஒருவர் அவர் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று இளைஞனை ஆற்றுப்படுத்தவதை ஒரு கதையில் பேசியுள்ளார். அந்த இளைஞனோ எல்லா ஐரோப்பியர்களுமே பிற நாட்டு மக்களை அடிமைப்படுத்தியதை நினைவுபடுத்தி நீங்களும் குற்றவாளிகளே என்கிறான். ஆற்றுப்படுத்த விழைந்தவர் மௌனமாகிவிடுகிறார்.
இந்தியா உட்பட போரில் ஈடுபட்ட ஆறேழு நாடுகள் குறித்துக் குற்றஞ்சாட்டும் அகதி வாழ்க்கைப் போராட்டத்தைப் பேசவந்த இன்னொரு கதையின் வழியாக அந்த ஆற்றாமை காட்டாற்று வெள்ளமாகப் பாய்கிறது.
போர் என்னும் சாபம்
மனிதர்களோடு எலிகளுக்கும் இடமிருந்தது குறித்துப் பேசும் ஒரு சிறுகதை மிகவும் அழகானது. பெட்டிப் புடவைகளைக் கிளறும் எலிகள், காய்கறி அலமாரிகளில் ஓடும் எலிகள், புத்தகக் கட்டுக்களுக்கு இடையிலான எலிகள், பூனைகளுக்கும் எலிகளுக்கும் இடையிலான சண்டைகள், சாமி படத்தில் பிள்ளையார் அருகே பவ்யமாக கொழுக்கட்டையுடன் இருக்கும் எலி, பொறியில் சாகும் எலிகள் என்று பல்வேறு ஆய்வுகள் சுவாரஸ்யம் தருகின்றன.
போரினால் வெளியேற வேண்டிய நிலைமை. கோவில் வராந்தாவில் மூட்டை முடிச்சுகளோடு செல்ல வேண்டிய நிலை. எடுத்துச் சென்ற புத்தகங்களைப் படிக்கும் ஆர்வத்தோடு கட்டுகளைப் பிரித்துப் பார்க்கும்போது ‘எலிகள் எகிறிக் குதித்து ஓடுகின்றன, முக்கியமான சரித்திரப் புத்தகங்களையெல்லாம் பற்களால் கத்தரித்துவிட்டு’ என்று முடிக்கிறார். அதற்குமேல் இன்னொரு வாக்கியம், 'எல்லாச் சரித்திர நிகழ்வுகளிலும் எலிகள் சேர்ந்துதான் விடுகின்றன’.
கீற்றுத் தடுக்குகளில், வெவ்வேறு வடிவங்களின் வழியே பாய்ந்து வரும் சூரிய ஒளி தரையில் விழும்போது வட்டமாக மட்டுமே தோன்றுவதைப் போல, வெவ்வேறு வடிவங்களில் உள்ள இக்கதைகள் யாவும் பேரவலமிக்க போர் பாதிப்புகளை நோக்கியே வாசகனை அழைத்துச் செல்கின்றன.
இரண்டு கேள்விகள்: புத்தகம் 2013இல் வெளிவருகிறது. 2008 வரை களத்திலேயே வாழ்ந்து எழுதப்பட்ட கதைகள் இவை. 2009இல் இறுதிப் போர் என அறிவிக்கப்பட்டு நிகழ்ந்த அப்பாவி மக்களின் மரணங்களும், முகாம்களில் முடக்கப்பட்ட, ஊர்கள் பெயர் மாற்றப்பட்ட, நிலங்கள் பறிக்கப்பட்ட அவலங்களும் தொடர்ந்ததைக் குறித்த பதிவுகள் இல்லையே? வருடங்கள் பல கடந்து புத்தகம் வரும் இத்தருணத்தில் மேலும் சில கதைகள் எழுதிச் சேர்க்க முடியாமல் போனதற்குக் காரணம் சூழல் மேலும் இறுகிவிட்டதுதானோ என்று கேட்கத் தோன்றுகிறது.
வேட்டைத் தோப்பு, ஆசிரியர் கருணாகரன்
ஈழச் சிறுகதைகள், வெளியீடு கயல் கவின் புக்ஸ்,
28 (பழைய எண் 20), டாக்டர் அம்பேத்கர் சாலை
கோடம்பாக்கம், சென்னை – 28 | பக். 198 விலை ரூ. 170
தொலைபேசி: 044-24810209
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT