Published : 08 Feb 2014 12:53 PM
Last Updated : 08 Feb 2014 12:53 PM

நெரிசல் மிகுந்த சந்தைக்குள் நுழைவேன்

பண்டரியின் திருடனை நான் பிடித்தேன்,

அவனது கழுத்தில் கயிறு வீசிப் பிடித்தேன்.

எனது இதயத்தைச் சிறையாக்கி

அதில் அவனைப் பூட்டி வைத்தேன்.

சொல்லின் மூலம் அவனை இறுக்கினேன்.

அவனது புனிதப் பாதங்களின் மீது

விலங்கு பூட்டினேன்.

அவனை அடித்தேன்,

ஸோஹம் என்கிற வார்த்தை கொண்டு

சாட்டை வீசினேன்.

விட்டல் குறைபட்டுக்கொண்டான்.

மன்னியுங்கள் கடவுளே,

என்கிறாள் ஜானி.

எனது வாழ்வின் மீது சொல்கிறேன்

உங்களை விட முடியாது.

13ஆம் நூற்றாண்டில் மகராஷ்டிரத்தில் வாழ்ந்தவர் ஜனாபாய். பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஜனாபாய் வாழ்ந்த காலகட்டத்தின் சாதிக் கட்டமைப்பு இன்றிருப்பதை விட இறுக்கமானது. சிறிய வயதிலேயே நாம்தேவ் என்னும் புகழ்பெற்ற மராத்தியக் கவிஞரின் வீட்டில் பணிப்பெண்ணாகச் சேர்ந்தார் ஜனாபாய். அந்த வீட்டில் நிலவிய சூழல்தான் ஜனாபாயை பக்தி மார்க்கத்தில் செலுத்தியதாகக் குறிப்புகள் சொல்கின்றன. இறுதி வரை, நாம்தேவிற்கு தாசியாகவே வாழ்ந்ததாகவும் அவர்கள் இருவரும் ஒரே நாளில் இறந்ததாகவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது.

நாம்தேவின் வீட்டில் பணிப்பெண் என்றாலும் இறைவனைத் தனக்கான பணியாளாகக் கற்பனை செய்கிறது ஜனாபாயின் கவிதை ஒன்று.

ஜானி வீட்டைக் கூட்டுகிறாள்.

கடவுள் குப்பையை எடுக்கிறார்,

தலை மீது சுமந்து

அதை தூர எறிகிறார்.

ஜானியின் பக்தியைப் பார்த்து

கடவுள் செய்கிறார்,

மிகக் கீழான வேலைகளை.

ஜானி விதோபாவிடம் சொல்கிறாள்: உனக்கு எப்படி நன்றி செலுத்துவேன்?

பெரும்பாலான பக்தி மார்க்கப் பெண் கவிஞர்கள் போல இறைவனது காதலும் அதற்கான தீராத விழைவுமே ஜனாபாயின் கவிதைகளில் மேலோங்கியிருக்கின்றன.

லல்லா, ஆண்டாள் என நீளும் பெண் பக்திக் கவிஞர்களின் வரிசையில் ஜனாபாயும் இறைவனைப் பற்றிப் பாடும்போது உடல் குறித்த அசூயைகளை மிக இலகுவாகக் கடந்து செல்கிறார்.

எல்லா வெட்கத்தையும் உதறிவிடு.

சந்தையில் உன்னை

விற்பனைப் பொருளாக்கு.

அப்போதுதான் நீ இறைவனை அடைவது பற்றி

நம்பிக்கை கொள்ள முடியும்.

கையில் ஜால்ராவுடனும்

தோளில் வீணையுடனும்

நான் செல்கிறேன்.

என்னை யார் தடுக்க முடியும்?

எனது சேலையின் முந்தானை

நழுவி விழுகிறது (ஐயையோ! அவமானம்!)

எனினும் எந்தச் சிந்தையுமின்றி

நான் நெரிசல் மிகுந்த சந்தைக்குள்

நுழைவேன்.

ஜானி சொல்கிறாள்:

இறைவா, உனது இல்லத்தை அடைய

நான் ஒழுக்கமற்றவளாகிறேன்.

உலக வாழ்க்கை தர முடியாத சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் கடவுளின் மீதான காதலின் மூலம் அவர் அடைய முற்படுகிறார். தன்னை ஒழுக்கமற்றவளாக முன்னிறுத்திக்கொள்ளும் கவிதையின் மூலம் ஜனாபாய் இதை வெளிப்படுத்துகிறார்.

ஏழு வயதிலேயே பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தவர் ஜனாபாய். நாம்தேவ் அவரைவிடச் சிறியவராக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அந்த வீட்டில் ஒரு பெண்ணாகவும் பணியாளாகவும் பல சிரமங்களை ஜனாபாய் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை ஜனாபாய் தனது கவிதைகளில் பூடகமாக வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறார். தனது நெருக்கடிகளில் இறைவன் கூடவே இருப்பதாக ஜனாபாய் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.

தனது கவிதைகளில் பெண்களின் வாழ்நாள் துயரங்களையும் ஒரு சரியான துணைக்கான அவர்களது ஏக்கங்களையும் ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்துக்கொண்டேயிருக்கிறார் ஜனாபாய். இன்றளவும் மராத்திய மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு கவிஞராகத் திகழும் ஜனாபாயின் கவிதைகளில் பக்தி வழி பெண்ணியத்தின் தாக்கம் கூர்மையாகவே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x