Published : 13 Sep 2016 09:39 AM
Last Updated : 13 Sep 2016 09:39 AM
‘கடவுள் எங்கே இருக்கிறார்? ’ என்று எவரைக் கேட்டாலும் வானை நோக்கித்தான் கையைக் காட்டுகிறார்கள். உலகெங்கும் இதுதான் பழக்கம். ஒருவர் கூட பூமியை நோக்கி கீழே கை காட்டுவது இல்லை. பூமி மனிதர்களுக்கானது. அங்கே கடவுள் இல்லை என்ற நம்பிக்கை ஆழமாக பதிந்து போயிருக்கிறது. பூமிக்குக் கீழே வசிப்பவர்கள் அரக்கர்கள், மோசமானவர்கள் என்ற தவறான கருத்தாக்கம் நீண்டகாலமாகவே இருந்துவருகிறது.
பாதாளத்தில் ஏழு லோகங்கள் உண்டு. அவை அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், பாதாளம் மற்றும் ரஸாதலம் என்று இந்து புராணங்கள் கூறுகின்றன. ஊசி தரையில் விழுந்துவிட்டால் ஊசிக் கள்வர்கள் பூமிக்கு அடியில் இருந்து வந்து திருடிக் கொண்டுபோய்விடுவார்கள் என்று சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு எதற்கு ஊசி என்று கேட்டபோது, பூமி கிழிந்து போய்விட்டதால் ஊசியை வைத்து தைப்பது அவர்களின் வேலை என்று பதில் கிடைத்தது.
பூமிக்குக் கீழே வசிப்பவர்களின் தலை முடிகள்தான் பூமியில் மரங்களாக முளைத்திருக்கின்றன என்றொரு கதையும் நம்மிடம் இருக்கிறது. இப்போதுகூட அடித்து உன்னை அதலபாதாளத்துக்கு அனுப்பிவிடுவேன் என்று கோபத்தில் சொல்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!
பூமிக்குக் கீழே போகப் போக இருட்டு அதிகமாக இருக்கும். பூமிக்கு மேலே போகப் போக வெளிச்சம் அதிகமாக இருக்கும் என்பதே பொதுநம்பிக்கை. இருட்டிலே பிறந்து, இருட்டுக்குள்ளேயே வாழ்பவர்களுக்கு வெளிச்சத்தில் பொருட்கள் தெரிவதுபோல, கண் பழகிவிடும் என்பார்கள்.
‘இருக்கத்தான் செய்கிறது
எப்போதும்
இலையின் பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்வதற்கு
ஏதோ ஒன்று.
எப்போதும் இருக்கிறது
பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்ல முடியாத ஏதோ
ஒன்று!’
- என்ற தேவதச்சனின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. வெளிச்சமும் இருளும் இலையின் முன்பக்கமும், பின்பக்கமும் போன்றவைதானோ. சொல்லியும் சொல்லாமலும் இரண்டுக்குமான உறவு தொடரத்தானே செய்கிறது.
இன்றைய தலைமுறைக்கு பூமியுடன் எந்த உறவும் இல்லை. ‘தரையைத் தொடாதே, அழுக்கு’ என்று பழக்கி வைத்திருக்கிறோம். கையில் மண்பட்டுவிட்டால் அசுத்தம் என்று குழந்தை மனதில் ஆழமாக பதிந்து போய்விடுகிறது. மண்ணின் மணமும் ருசியும் அவர்களுக்குத் தெரியாது. மண்ணில் செய்த கலைப் பொருட்களை மலிவானவை என்று ஏளனம் செய்கிறார்கள். மண் பானையில் தண்ணீர் குடிப்பது இளக்காரமாகப் பார்க்கப்படுகிறது. மண்ணை அறியாத தலைமுறை எப்படி விவசாயத்தையும், விவசாயிகளையும் மதிப்பார்கள் என்று ஆதங்கமாகயிருக்கிறது.
நம்மால் புரிந்துகொள்ள முடியாதவற்றை கதையாக்கி விடுகிறோம். அல்லது கதை வழியே புரியாத ஒன்று புதிய அர்த்தம் பெறுகிறது.
நாய்கள் வானை நோக்கி குலைப்பதை கண்டிருக்கிறோம். ஆனால், எதற்காக நாய் வானை நோக்கி குலைக்கிறது என்பதற்கு நம்மிடம் இதுவரை சரியான விளக்கமில்லை.
தென்ஆப்பிரிக்க பழங்குடி சமூகம் இதற்கு ஒரு கதையைப் புனைந்திருக்கிறது.
முன்னொரு காலத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது உயிரினங்கள் யாவும் ஒன்று கூடி பஞ்சத்தில் நாம் உயிர் பிழைக்க வேண்டும் என்றால் சிலரை காவு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தன.
யாரைக் கொல்வது என்ற கேள்வி எழுந்தபோது, இளம் விலங்குகள் உயிர் வாழ்வதற்காக அதன் தாய் விலங்கை கொன்றுவிடலாம் என்று முடிவு எடுக்கப்படுகிறது. அதன்படி எல்லா கரடி, புலி, மான், நரி என எல்லா விலங்குகளும் தமது தாயைக் கொன்றன. ஆனால், நாய் மட்டும் அதன் தாயைக் கொல்ல விரும்பவில்லை.
மற்ற விலங்குகள் கண்ணுக்குப் படாமல் எங்கே ஒளித்துவைப்பது எனப் புரியாத நாய்க் குட்டி, தனது அம்மாவிடம் ‘நீ வானில் போய் ஒளிந்துகொள். ஒவ்வொரு நாளும் எனக்கு உணவு கிடைத்தவுடன் உன்னைக் கூப்பிடுகிறேன்’ என்றது.
அதன்படியே தாய் நாயும் வானில் ஏறி ஒளிந்துகொண்டது. ஒவ்வொரு நாள் உணவுவேளையிலும் நாய்க் குட்டி உணவு சேகரித்துக்கொண்டு தாயைத் தேடி புறப்படும். வெட்டவெளியில் நின்றபடி, வானை நோக்கி ஊளை யிடும். மறு நிமிடம் வானில் இருந்து தாய் நாய் கிழே இறங்கிவந்து குட்டி நாய் கொண்டுவந்திருந்திருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் வானத்துக்கே போய்விடுமாம்.
ஒரு நாள் இப்படி நாய்க் குட்டி செய்வதை ஒரு நரி ஒளிந்துகொண்டு பார்த்துக் கொண்டிருந்தது. மறுநாள் மதியம் நரி வெட்டவெளிக்குப் போய் நின்றுகொண்டு நாயின் குரலை போல சத்தமிட்டது. அதை நம்பி தாய் நாய் வானில் இருந்து பூமிக்கு வந்தது. திடீரென்று நரி அதன் மீது பாய்ந்து அதை கொன்று தின்றது. அதை அறியாமல் நாய்க் குட்டி தனது தாய் வானில் இருந்து வரக்கூடும் என்பதற்காக வானை நோக்கி குரைத்துக் கொண்டேயிருந்ததாம். இன்றைக்கும் அந்தப் பழக்கத்தின் காரணமாகவே
நாய்கள் வானை நோக்கி குரைக்கின்றன என முடிகிறது அந்தக் கதை.
தாய் மீது பேரன்பு கொண்ட நாய்க் குட்டியின் செயல் நம்மை நெகிழச் செய்கிறது. ‘படித்த மனிதர்கள்தான் எதையும் எளிதாகப் புரிந்துகொள்ளாதவர்கள். ஆகவே அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கி சொல்ல வேண்டியிருக்கிறது. கதை கேட்டவுடன் அதைப் பற்றிய விளக்கத்தை பழங்குடிகள் எவரும் கேட்பதில்லை’ என்கிறார் கேதலின் பர்க் என்ற ஆய்வாளர்.
கடந்த காலங்களில் பஞ்சத்தின்போது வயதானவர்களைக் கொல்லுகிற வழக்கம் சில சமூகங்களில் இருந் திருக்கிறது. வண்ணநிலவனின் புகழ்பெற்ற ‘எஸ்தர்’ சிறுகதையில் வரும் பாட்டியின் சாவு, இதுபோல ஒரு சம்பவம்தானே!
நாய்களைப் பற்றி எவ்வளவோ கதைகளும் கவிதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. ஹோமரின் ‘இலியட்’ காப்பியத்தில் 10 ஆண்டுகள் டிராய் யுத்தம் செய்தபிறகு வீடு திரும்புகிறான் யூலிசியஸ். ஊரில் அவனது மனைவியைப் பற்றி தவறான கதைகள் சொல்லப்படுகின்றன. அது உண்மையா எனப் பரிசோதிக்க மாற்று உருக்கொண்டு தன் வீட்டுக்குச் செல்கிறான். அவனை யாருக்கும் அடையாளம் தெரிய வில்லை. ஆனால், அவனது நாய் அர்கோஸ் அடையாளம் கண்டுவிடுகிறது.
உடல் மெலிந்து நோயுற்று கிடந்த அர்கோஸால் எழுந்துகொள்ள முடியவில்லை. யூலிசியஸ் தனது நாயின் பரிதாப நிலையைக் கண்டபோதும் மாற்றுருவில் இருப்பதால் எதுவும் செய்ய இயலவில்லை. அவன் வீட்டுக்குள் போன மறுநிமிடம் அர்கோஸ் இறந்து போய்விடுகிறது.
இங்கிலாந்தில் ‘பாபி’ என்ற நாய் இறந்துபோன தனது எஜமான் கல்லறையைவிட்டு நீங்காமல் 14 வருஷங்கள் கிடந்து, இறந்து போய்விட்டது என்கிறார்கள். இந்த இரண்டு நாய்களைப் பற்றியும் கதைகள் உள்ளன. கதைகள் வழியாகவே விலங்குகள் பேச ஆரம்பித்தன. கதை வழியாகவே மனிதர்கள் விலங்குகளின் இயல்புகளைப் புரிந்து கொண்டார்கள்.
பூமியில் வாழ்ந்த எத்தனையோ உயிரினங்கள் இன்று அழிந்துபோய்விட்டன. ஆனால், ‘டைனோசர்’ போன்ற சில அழிந்த உயிரினங்கள் இப்போதும் கதைகளின் வழியே வாழ்ந்துகொண்டிருக்கின்றன. கதைகளின் உலகம் அழிவற்றது. கதை சொல்வதன் வழியே உலகின் மிகப் பழமையான செயலை நீங்கள் மேற்கொள்கிறீர்கள். அந்த உணர்வோடு கதை சொல்லுங்கள். கேட்கும் மனது சந்தோஷம் கொள்ளும்!
- கதைகள் பேசும்..
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@rmail.com
இணையவாசல்: >இந்திய தேவதைக் கதைகளை வாசிக்க
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT