Last Updated : 12 Jun, 2016 12:10 PM

 

Published : 12 Jun 2016 12:10 PM
Last Updated : 12 Jun 2016 12:10 PM

புத்தகக் காட்சி வலம்: சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அறிவோம்!

இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியில் முதல்முறையாக இடம்பெற்றிருக்கிறது ‘சிங்கப்பூர் இலக்கிய’ அரங்கு. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களைத் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் பல ஆண்டுகளாகச் சென்னை புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள முயற்சி எடுத்திருக்கிறது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம். இந்த ஆண்டு, சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவாலும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் தந்த ‘கவுரவ விருந்தினர்’ என்ற ஊக்கத்தாலும் அது சாத்தியமாகியிருக்கிறது.

“சிங்கப்பூர் இலக்கியத்தைத் தமிழ்நாட்டு வாசகர்களுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்தும் வகையில் எங்களுடைய அரங்கில் 150 தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், நாடகங்கள் எனச் சிங்கப்பூரில் பரிசுபெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன், வாசகர்களுக்கு இருபது சதவீதக் கழிவில் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்படியும் ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்கிறார் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன்.

‘சிங்கப்பூர்ப் பொன்விழா சிறுகதைகள் 50’, ‘அகரத்திலிருந்து சிகரத்தை நோக்கி’ ‘பொன்விழா கட்டுரைகள் 50’ ஆகிய மூன்று புத்தகங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜே. எம் சாலி எழுதிய ‘நவீன சிங்கப்பூரின் தந்தை - லீ குவான் இயூ’ என்ற நூலும் வாசக கவனம் பெற்றுள்ளது.

“சிங்கப்பூரில் பல தளங்களில் பல்வேறு குழுக்கள் அமைப்புகள் முயற்சியில் தமிழ் இலக்கியம் அடைந்து வரும் வளர்ச்சி வெளியில் தெரியாமலேயே உள்ளது. சிங்கப்பூருக்குத் தமிழக எழுத்தாளர்களும் படைப்பாளர்களும பலரும் கலை இலக்கிய நிகழ்வு களுக்காக வந்து போனாலும் எழுத்தாளர் மாலன் போன்ற ஒரு சிலரைத் தவிர இந்நாட்டு இலக்கியத்தை வாசிப்பவர்களும தொடர்ந்து கவனிப்பவர்களும் மிகவும் குறைவு. அந்த வகையில் தமிழக எழுத்தாளர்கள், ஊடகங்கள், வாசகர்கர்கள் ஆகியோருக்கு இது ஒரு அறிமுகமாக அமைந் துள்ளது” என்கிறார் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கனக லதா.

“நவீன சிங்கப்பூர் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள விரும்பும் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு இந்தப் புத்தகங்கள் பெரியளவில் உதவும். அடுத்ததாக ஈரோடு புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள இருக்கிறோம். உலகத் தமிழர் படைப்புகள் என்ற தலைப்பில் இடம்பெறப் போகும் அரங்குகளில் ‘சிங்கப்பூர் இலக்கிய’ அரங்கும் இடம்பெறும். இனி, தொடர்ந்து தமிழ்நாட்டில் நடக்கும் புத்தகக் காட்சிகளில் கலந்துகொள்ளப் போகிறோம்” என மகிழ்ச்சியுடன் சொல்கிறார் நா. ஆண்டியப்பன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x