Published : 04 Mar 2017 10:01 AM
Last Updated : 04 Mar 2017 10:01 AM
என் எழுத்தின் நாடோடித் தன்மையின் பின்னணியைப் பற்றி சென்ற வாரம் குறிப்பிட்டேன். மூன்று வெவ்வேறு கலாச்சாரங்களின் விளைபொருள் நான். குடும்பம் என்று பார்த்தால் தெலுங்கு பேசிய தந்தையும் சுற்றமும். அம்மாவின் பூர்வீகம் பர்மா. வேர் தேட முடியாத அளவுக்குச் சிக்கலானது. இந்தப் பின்னணியில் வாசிக்கத் தொடங்கிய எனக்கு சமகாலத் தமிழ் எழுத்தாளர்களை விட மார்க்கி தெ சாத், ஜான் ஜெனே, காப்ரியல் காலத், ஜார்ஜ் பத்தாய் போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்களே சக பயணிகளாகத் தெரிந்தனர். சாத் மற்றும் ஜெனே பற்றி கணிசமானோருக்குத் தெரியும். காலத், ஒரு லெஸ்பியன் எழுத்தாளர். பத்தாய், பாலியல் சொல்லாடல்களைக் கொண்டு எழுதியவர். புகழ்பெற்ற தத்துவ அறிஞராக இருந்தும் புனைபெயரிலேயே தன் ‘கண்ணின் கதை’ என்ற நாவலை வெளியிட்டார்.
ஒருமுறை அந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்தபோது அதைப் படித்துப் பார்த்த என் சக எழுத்தாளர் ஒருவர் என் வீட்டை விட்டு விழுந்தடித்து ஓடியது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இதனாலெல்லாம் அப்போது நானும் என்னுடைய நெருங்கிய நண்பர்களாக இருந்த ஒன்றிரண்டு பேரும் ஒரு காபாலிகக் கூட்டமாகவே கருதப்பட்டோம். இலக்கிய பயங்கரவாதிகள் என்று எங்களைப் பற்றி எழுதினார்கள். ஒருநாள், எழுத்தாளர் கூட்டம் ஒன்று என் வீட்டுக்கு வந்தது. இரவு நேரம். வீட்டைச் சுற்றிலும் இருள். அப்போது வீட்டில் வாத்துக் கறி சமையல் ஆகிக்கொண்டிருந்தது. என்ன ஆயிற்றோ தெரியவில்லை, வந்த கூட்டம் அப்படியே கிளம்பிவிட்டது.
பிறகுதான் வெகு நாட்களுக்குப் பிறகு தெரிந்தது, நாங்கள் ஏதோ விநோத ஜந்து ஒன்றின் கறியைச் சமைத்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்து பயந்து ஓடிவிட்டதாக அவர்களில் ஒருவர் சொன்னார். என் வாசிப்பும் எழுத்தும் எந்த அளவுக்குத் தமிழ்ச் சூழலில் அந்நியமாக இருந்தது என்பதற்காக அந்த இரண்டு சம்பவங்களையும் குறிப்பிட்டேன்.
அப்படிப்பட்ட சூழலில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தவர்கள் தமிழவன், அ.மார்க்ஸ், ரவிக்குமார், கரிச்சான் குஞ்சு. கரிச்சான் குஞ்சுவை முதல்முறை சந்தித்தபோது கட்டியணைத்துக்கொண்டார். அவருடைய ‘பசித்த மானுடம்’ தன்பாலின உறவு பற்றிய நாவல். சந்திக்காமலேயே நான் நேசம் கொண்ட மற்றொரு எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம். அவருடைய ‘காதுகள்’ நாவலைப் படித்தால் எனக்கும் அவருக்குமான தொப்புள்கொடி உறவை ஒருவர் புரிந்துகொள்ளலாம்.
கொஞ்ச காலம் சென்று, என் எழுத்தைப் பலரும் தூற்றிக்கொண்டிருந்தபோது, “நீ தைரியமாக எழுது, நீ எழுதுவதெல்லாம் சம்ஸ்கிருதத்தில் ஜுகுப்ஸ ரசம் என்று சொல்லப்படுகிறது” என்று சொல்லி என்னை ஊக்கப்படுத்தியவர் இந்திரா பார்த்தசாரதி. முனியாண்டி என்ற பெயரில் எழுதிய எனக்குக் களம் அமைத்துக் கொடுத்தவர் பிரம்மராஜன்.
என் எழுத்தில் உள்ள பன்னாட்டுத்தன்மைக்கு இந்தப் பின்னணியும் வாசிப்பும்தான் காரணம். உதாரணமாக, என் நாவல்களில் உள்ள தமிழ்ப் பெயர்களை ஐரோப்பிய பெயர்களாக மாற்றினால் அவை அந்தந்த நாட்டு மொழியில் எழுதப்பட்ட நாவல்களாகத் தோன்றும். சர்வதேச அளவில் இத்தன்மை ஹாருகி முராகாமியிடம் மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன். அவருடைய எழுத்திலும் ஜப்பானிய வேர்கள் கிடையாது. அதனாலேயே அவர் எழுத்துக்கு மேற்கில் அதிக வாசகர்கள் உண்டு. இன்று என் எழுத்தால் இளைஞர்கள் அதிக அளவில் ஈர்க்கப்படுவதற்கும் இதுதான் காரணம் என்று தோன்றுகிறது. என் நண்பர் நேசமித்திரனோடு இது பற்றி உரையாடிக்கொண்டிருந்த போது அவர் குறிப்பிட்ட சில அவதானங்கள் என் எழுத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
கைகளால் ஒலி எழுப்பக் கூடிய ஜெம்பே (Djembe) என்ற ஆப்பிரிக்கத் தோல்கருவி ஆட்டுத்தோலால் செய்யப்பட்டது. ஒரு பக்கம் மென்தோலால் கட்டப்பட்டு மறுபுறம் லெங்கே என்ற மரத்தால் அடிக்கூடு கொண்ட அதன் ஒலி கேட்பவரின் அடிவயிற்றில் ஒரு மெல்லதிர்வை உண்டு பண்ணும் தன்மையுடையது. தன் குட்டி இறந்ததும் மார்பில் அடித்துக்கொண்டு அழுத சிம்பன்ஸியிடமிருந்து ஒரு வேடன் அந்த வாத்தியத்தைச் செய்தான் என்பது செவிவழிக் கதை.
தென்கிழக்கு ஆசியா என்ற நிலப் பகுதியில் வாழும் ஒரு வாசகனுக்கு அந்த ஆப்பிரிக்கக் கருவியின் சப்த அதிர்வுகள் கிளர்ச்சியையும், துடியேறிய உன்மத்தத்தையும் தருகின்றன. அவனுடைய நிலத்துக்கு அப்பாற்பட்ட அந்த இசையும் அதிர்வுகளும் அவனுக்குள் ஏதோ ஒரு உணர்வு முடிச்சைச் சுண்டுகின்றன. ஒரு விலங்கின் ஆதித்திமிர் அழியாத வேட்கையின் வாசனையைத் தூண்டுவது போன்ற நிகழ்வு அது. ஒரு எழுத்து அப்படியான தீண்டலையும் அதிர்வையும் நிகழ்த்துமாயின் அது இதுநாள் வரை அவன் பழகிய நிலங்களைக் கடந்து, அவன் ஒளித்து வைத்திருக்கும் வேட்கையையும், ரகசியத் தோல் போர்த்தி இருக்கும் பாசாங்குகளையும் தகர்த்து அவனை அவனுக்கு அறிவிக்கிறது.
இந்தப் புத்தாயிரத்தில் ‘உலகளாவிய மன நிலப்பரப்பு’ (global memory landscape) என்ற சொற்சேர்க்கை நம் கவனத்துக்குரியது. உலகமயமாக்கலுக்குப் பிறகான ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் சமூகத் தன்னிலை ஆகியவற்றின் வழியாக நிகழும் புதிய பண்பாட்டு மாற்றங்களைக் குறுக்குவெட்டாகப் பதிவு செய்வது ஒருவகையில் ஒரு புதிய திணையைக் கண்டறியும் முயற்சி என்றே சொல்லலாம். அவ்வகையில் என் எழுத்து ஐந்திணைகளுக்கு அடுத்ததாக மெய்நிகர் திணை (Virtual landscape) ஒன்றை உருவாக்கி உலகளாவிய இலக்கியத்துக்கு வழங்கியிருப்பதாகவே நினைக்கிறேன்.
இன்றைக்கு சமூக ஊடகங்களின் வழியே உருவாகி யிருக்கும் உடல், பிரபஞ்ச உடல். தன் வேட்கையின் கரங்களை ‘முகபாவக் குறி’களாகவும் (emoticons) பிம்பங்களாகவும் துய்க்கும் ஒரு இளம் சமூகத்தின் முதல் குரல்களை எனது பாத்திரங்கள் பேசுகின்றன. புலம்பெயர்ந்துகொண்டே இருக்கும் ஒரு பண்பாட்டு மனதின் கூட்டு உணர்ச்சியைக் கொண்டு வாழ்வின் புதிய மதிப்பீடுகளை உருவாக்கும் ஒரு தலைமுறையை எழுதுவதன் வழியாக அவர்களின் நேசத்துக்குரியவனாக இருப்பதாக நினைக்கிறேன்.
காலவெளிச் சேர்க்கை என்ற பழைய பதத்தை ஒட்டி எழுதும் நவசெவ்வியல் எழுத்துமுறையை மீறுவதன் வழியாக பழமைவாதிகளுக்கு நான் ஒரு கலகக்காரனாகத் தோற்றமளிக்கிறேன்.
(தொடரும்)
- சாரு நிவேதிதா, ‘ஸீரோ டிகிரி’, ‘எக்ஸைல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT