Last Updated : 18 Oct, 2014 04:44 PM

 

Published : 18 Oct 2014 04:44 PM
Last Updated : 18 Oct 2014 04:44 PM

தமிழ் தலித் அரசியலுக்கு அவசியமான வரவு

நமது இன்றைய சூழலில் நடக்கும் அத்தனை உரையாடல்களிலும் விவாதங்களிலும் எல்லாருக்கும் கண்ணுக்குத் தெரியும் ஒரு எதிரி அவசியமாகத் தேவைப்படுகிறார். மாற்று அறிவு, அரசியல், கலாச்சாரச் செயல்பாட்டுக் களங்களுக்கும் இது பொருந்தும்.

இப்படித்தான் தலித் பண்பாட்டு அரசியல் சார்ந்த உரையாடல்கள் அனைத்திலும் காந்தி முக்கியமான எதிரியாகக் கடந்த 30 ஆண்டுகளாக முன்னிறுத்தப்படுகிறார். இன்னொரு சாராருக்கோ வெளியில் சொல்ல முடியாத எதிரியாக அம்பேத்கர் இருந்துவருகிறார்.

தெற்காசியர்களைப் பொறுத்தவரை கருத்தியல் அடையாளம் என்பது சுயவெறுப்பை வெளிப்படுத் துவதற்கான முகமூடி என்று ஆஷிஸ் நந்தி கூறுவதை இத்துடன் பொருத்திப் பார்க்கலாம். பெரும்பாலான இடதுசாரி, வலதுசாரிகள் இரு தரப்பினருக்குமே ஆஷிஸ் நந்தியின் இந்தக் கூற்று பொருந்தும். இங்கு யாரும் யாரையும் வலதுசாரி என்றும் இந்துத்துவா என்றும் முத்திரை குத்திவிட முடியும்.

முரண்பாடுகளுக்கு அப்பால்...

இப்படியான நாயக-வில்லன் என்ற எளிய எதிர் மறைக் கற்பிதங்களைத் தாண்டிய ஆளுமையாக, சீற்றத்தின் அரசியலைக் கடந்தவராக கன்னட அறிவுஜீவி டி.ஆர். நாகராஜின் எழுத்துகள் அவரை அடையாளப்படுத்துகின்றன. இந்தியப் பொதுப் புத்தியில் இன்று எதிர்மறையான பிம்பங்களாக வைக்கப்பட்டிருக்கும் காந்திக்கும் அம்பேத் கருக்கும் இடையிலான முரண்களை மீறி ஒரு மீள் இணக்கத்தைக் கண்ட முதல் அறிவுஜீவி டி.ஆர். நாகராஜ்.

காந்தியின் இடைவெளிகளை நிரப்புபவராக அம்பேத்கரையும், அம்பேத்கர் கண்டுகொள்ளாத புள்ளிகளைப் பரிசீலிப்பவராக காந்தியையும் இவர் இனம் காண்கிறார். அந்த இரு பிம்பங்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்ட பகைமையைக் குணப்படுத்துவதாக டி.ஆர். நாகராஜின் எழுத்துகள் இருக்கின்றன.

1954-ல் பிறந்து இந்திய அறிவுஜீவிகள் மட்டத்திலும் கல்விப்புலத்திலும் நம்பிக்கைக்குரிய அறிஞராக இளம் வயதிலேயே அறியப்பட்டவர் டி.ஆர்.நாகராஜ். 1970-களில் கர்நாடகத்தில் பெரும் அலையாக எழுந்த தலித் பாந்தயா(கலகக்கார) இலக்கிய இயக்கத்தின் சக பயணியாக நாவலாசிரியர் தேவநுறு மகாதேவா, கவிஞர் சித்தலிங்கையா ஆகியோருடன் செயலாற்றியவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளியின் மகனான டி.ஆர். நாகராஜ், கன்னட தலித் இயக்கத்தின் சக பயணியாகவும் இலக்கிய விமர்சகராகவும் இருந்தார்.

தலித் இயக்கங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற முன்வரைவைத் தனது எழுத்துகள் வழியாக அவர் உருவாக்கினார். 1993-ல் டி.ஆர். நாகராஜ் எழுதிய கட்டுரைகள் ஆங்கிலத்தில் ‘தி ஃபிளேமிங் பீட்’ என்ற பெயரில் வெளியானது. துரதிர்ஷ்டவசமாக 44 வயதிலேயே காலமானார் நாகராஜ். அவர் எழுதிய கன்னடக் கட்டுரைகள் அவரது மரணத்துக்குப் பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இரண்டு புத்தகங்களாக வெளிவந்தன.

அதை மொழி பெயர்த்துத் தொகுத்தவர் பிருத்வி சந்திர தத்தா ஷோபி. அந்த நூல்களிலிருந்து அரசியல் கட்டுரை களை மொழிபெயர்ப்பாளர் ராமாநுஜம் ‘தீப்பற்றிய பாதங்கள்’ நூலில் தந்துள்ளார்.

முக்கியமான புத்தகம்

பூனா ஒப்பந்தத்தை முன்னிட்டு காந்தி-அம்பேத்கர் மோதலிலிருந்து இந்தியாவில் தொடங்கிய தலித் இயக்கத்தின் போக்கைப் பின்தொடர்ந்து, சமீபத்திய உலகமயமாக்கல் பின்னணியில் டி.ஆர். நாகராஜ் விவரிக்கிறார். சாதியப் படிநிலையையே ஆதாரமாகக் கொண்ட இந்தியக் கிராமத்தைத் தீண்டாமையின் தொட்டில் என்று கூறி அம்பேத்கர் வெறுத்து ஒதுக்குகிறார். அம்பேத்கர் இந்தத் தீர்மானத்துக்கு வருவதற்கான நியாயத்தை டி.ஆர்.நாகராஜ் ஏற்றுக்கொள்கிறார்.

ஆனால், உலகமயமாக்கலாலும் மேம்பாட்டுத் தொழில்நுட்பங்களாலும் கிராமியப் பொருளா தாரத்துக்கு ஏற்படும் சீர்குலைவு தலித் மக்களின் வாழ்வாதாரத்தையும் கைவினைத் தொழில்களையும் தான் முதலில் பாதிக்கும் என்ற அவரது அவதானம் தற்போது அதிர்ச்சிக்குரிய யதார்த்தமாக மாறியுள்ளது. இந்தப் புள்ளியில்தான் காந்தியை நோக்கி அவரது சுயராஜ்ஜியக் கருத்துகளில் அம்பேத்கரின் இடை வெளிகளை நிரப்பும் சாத்தியத்தை நோக்கி நம்மையும் பரிசீலிக்கத் தூண்டுகிறார் நாகராஜ்.

தமிழில் கருத்தியல் சார்ந்த விவாதங்கள் பொது வெளியில் அதிகம் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, கருத்தியல் சார்ந்த எளிமையான சொற்களின் போதாமையை இந்த மொழிபெயர்ப்பில் ஆங்காங்கே நாம் கண்டுகொள்ள முடிகிறது. தமிழின் தலித் இலக்கியம் மற்றும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை சார்ந்த கலாச்சார அரசியலுக்கு மிக அத்தியாவசியமானது டி.ஆர். நாகராஜின் சிந்தனை. அந்த வகையில் ராமாநுஜம் மொழிபெயர்த்துள்ள இந்நூல் மிக முக்கியமானது.

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x