Published : 22 Jan 2017 11:39 AM
Last Updated : 22 Jan 2017 11:39 AM
நவீனத் தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு கணிசமானது; தவிர்க்க முடியாத வரலாற்றுப் பதிவுமானது. இந்தியாவில் வங்கத்துக்கு அடுத்தபடியாகத் தமிழ் இலக்கியத்துக்குத்தான் இஸ்லாமியர்கள் அதிகமாகப் பங்களித்திருக்கிறார்கள். உமறுப்புலவர் தொடங்கி செய்குதம்பி பாவலர் வரை அதன் தொடர்ச்சி ஒரு சரமாக நீள்கிறது. இந்தத் தொடர்ச்சியில் மதங்கள் கடந்த நவீன இலக்கிய வெளியில் படைப்பாக்கரீதியாக பிரம்மாண்டத்தன்மையையும், பெரும் தரத்தையும் உருவாக்க முடியாமல் போனது ஒரு பின்னடைவே.
கதைகள்
எல்லாக் கட்டமைப்புகளையும் மரபார்ந்த பொதுப்புத்தியையும் உடைத்துக்கொண்டு எழுத வந்தவர்களில் தோப்பில் முகமது மீரான் முக்கியமானவர். குமரி மாவட்டத்தில் கடலோர கிராமமான தேங்காப்பட்டணத்தில் பிறந்த மீரான் தன் எழுத்துவெளி முழுவதையும் சொந்த மண் பற்றிய சித்திரமாக மாற்றினார். கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சுவண்ணம் தெரு போன்ற அவரது நாவல்கள் முக்கியமானவை. தேங்கிப் போன சமூக மரபுகளைக் கேள்விக்குட்படுத்தியவை. அவரது மொழி யதார்த்தமானது; கலையின் அம்சங்களை உள்ளடக்கியது. சமூகத்தின் தேக்கத்தை அது கேள்விக்குட்படுத்தியது. பழமையான வாழ்வியல் தேக்கத்திலிருந்து விடுபடக் கோரியது. அப்படியான வாழ்க்கை முறையை விமர்சனத்துக்குட்படுத்தியது. தோப்பில் மீரானின் படைப்புகள் இடைக்காலத் தமிழ் இஸ்லாமிய உலகின் வாழ்வியல் யதார்த்தங்கள் மீதான விமர்சனங்களாக இருந்தன.
புனைவிலக்கிய வெளியில் களந்தை பீர்முஹம்மது, நாகூர் ஆபிதீன், கீரனூர் ஜாகிர் ராஜா, எஸ்.அர்ஷியா, மீரான் மைதீன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். கீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன்காரத் தெரு, மீன்குகைவாசிகள், துருக்கித்தொப்பி, வடக்கே முறி அலிமா போன்றவை சிறந்த நாவல்கள். இஸ்லாமிய சமூக அமைப்பு சார்ந்த முரண்களைப் பிரதிபலிப்பவை. மீன்குகைவாசிகள் நாவல் ஜாகிர் ராஜாவின் புனைவு மொழிக்கு உதாரணம். மனித வாழ்க்கைப் புதிர்கள் குறித்த சித்திரங்கள் பல்வேறு கதாபாத்திரங்களாக இந்நாவலில் விரிகின்றன. ஜாகீர் ராஜாவின் மொழியும் புனைவாக்கத்தன்மையும் இதில் யதார்த்தத்தைத் தாண்டி நிற்கின்றன.
களந்தை பீர்முஹம்மது ஆரம்ப கால எழுத்தாளர்களில் ஒருவர். அவரின் பிறைக்கூத்து, சுலைமான் ஹாஜியாரும் சில்க் சுமிதாவும் சிறந்த கதைத் தொகுப்புகள். அடிப்படைவாத சமூக யதார்த்தத்தை, அதன் இயங்கியலைக் கேள்விக்குட்படுத்தும் கதைகள் இவை. இதன் தொடர்ச்சியில் எஸ். அர்ஷியாவின் ஏழரை பங்காளி வகையறா, அதிகாரம் ஆகியவை முக்கிய நாவல்கள். அதிகாரம் நாவல், நான்கு வழிச் சாலையின் இயக்க ஓட்டம் குறித்த சித்திரம். அதில் தினசரி நகர்ந்து செல்லும் வாகனங்கள், மனிதர்கள் குறித்த கதையாடல் சாலை போன்றே நீண்டு செல்கிறது. மேலும் மீரான் மைதீனின் அஜ்னபி புலம்பெயர் வாழ்க்கையை, குறிப்பாக வளைகுடா நாடுகள் சார்ந்த மனித வாழ்க்கையை வெளிப்படுத்தும் நாவல்களில் மிக முக்கியமானது. அரபு நாட்டுப் பாலைவன வாழ்க்கையின் வலியும் துயரமும் பல்வேறு கதைக்களங்களாக இதில் சிதறுகின்றன. மலையாளத்தில் புன்யாமீனின் ஆடுஜீவிதம் நாவலுக்கு ஒப்பான ஒன்று.
கவிதைகள்
அப்துல் ரஹ்மான், மேத்தா, இன்குலாப் போன்றவர்கள் வானம்பாடி காலகட்டத்தின் முக்கியக் கவிஞர்கள். அப்துல் ரஹ்மானின் பால்வீதி, ஆலாபனை, பித்தன் போன்றவை முக்கியக் கவிதைத் தொகுதிகள். மேலும் கவிதைகளில் குறியீடுகள், படிமம், உவமை சார்ந்தும் பல சோதனைகளை நிகழ்த்தியவர். இதன் மூலம் மரபுக்கு மாற்றான கவிதை முறையியலைக் கொண்டவர் அப்துல் ரஹ்மான். இன்குலாபின் கவிதைகள் அதிகமும் புரட்சிகர தன்மை கொண்டவை; நேரடியான வெளிப்பாடு கொண்டவை. இவரின் மொத்தத் தொகுப்பானது ஒவ்வொரு புல்லையும் என்ற பெயரில் வெளிவந்தது. அடுத்த நிலையில் அபி, ஹெச்.ஜி.ரசூல் போன்றவர்களின் கவிதைகள் நவீனம் சார்ந்தவை. குறிப்பாக ஹெச்.ஜி.ரசூலின் ஜனகன மன, பூட்டிய அறை, மைலாஞ்சி, உம்மா கருவண்டாகப் பறந்து செல்கிறாள் போன்றவை முக்கியத் தொகுப்புகள். இதில் ஆரம்பகால தொகுப்பான ஜனகன மன முக்கியமானது. அக்காலப் புரட்சியின் நுட்பமும் அதற்கான குறியீட்டுப் படிமங்களும் கொண்டது. பூட்டிய அறை பெண்கள் பற்றியும் அவர்களின் அந்நியப்பாடு, சமூக விலக்கல்கள் குறித்த சித்திரம்.
பெண்கள்
நவீனத் தமிழ் இலக்கிய வெளியில் இஸ்லாமியப் பெண்கள் மிக அபூர்வமாகவே எழுத வருகின்றனர். அவர்களில் சல்மா முக்கியமானவர். அவரின் பச்சை தேவதை, ஒரு மாலையும் இன்னொரு மாலையும் போன்றவை முக்கியக் கவிதைத் தொகுப்புகள். மேலும் இரண்டாம் ஜாமங் களின் கதை, மனாமியங்கள் ஆகியவை இவரது நாவல்கள். இரண்டாம் ஜாமங்களின் கதை யதார்த்த மொழியில் முஸ்லிம் பெண்கள் சார்ந்த வாழ்வைச் சித்திரித்திருந்தது. மனாமி யங்கள் குடும்ப வாழ்க்கை சார்ந்து இன்ன மும் தொடரும் நெருக்கடிகள் குறித்த கதை. திருமணம், விவாகரத்து, மறுமணம், தாம்பத் யம் போன்ற வாழ்க்கைக் கூறுகளில் இடையறாது தொடரும் சிக்கல்கள் குறித்த கதைக்களங்களை அடிப்படையாகக் கொண்டது. இரு நாவல்களின் மொழியும் கலைத்தன்மையும் குறிப்பிடத்தக்கவை.
இலங்கைப் படைப்புகள்
தமிழ்நாட்டை ஒப்பிடும்போது, இலங்கை இஸ்லாமியர்களின் இலக்கியப் பங்களிப்பும் வாசிப்பும் அதிகம். நிலவியல் சூழலும் தேசிய அரசியலும் அதற்கு மிக முக்கியக் காரணம். இலங்கை முஸ்லிம் இலக்கிய வெளியில் புனைவு சார்ந்து எஸ்.எல்.எம். அனீபா முக்கியமானவர். கிழக்கிலங்கை முஸ்லிம் வாழ்க்கைப் பதிவுகள் சார்ந்த பங்களிப்புகளைப் புனைவு வெளியில் நிகழ்த்தியவர் அவர். இதைத்தொடர்ந்து ஒட்டமாவடி அரபாத், ஹசீன் ஆகியோர் முன்னிலை பெறுகின்றனர். இருவரின் படைப்புகளும் இலங்கை இலக்கிய வெளியில் தவிர்க்க முடியாதது.
இலங்கை கவிதை வெளி மிக நீண்டது. பலர் கவிதை சார்ந்து தொடர்ச்சியாகவும், வலிமையோடும் இயங்கிவருகின்றனர். அவர்களின் மஜீத், சோலைக்கிளி, ரியாஸ் குரானா, ரிஷான் ஷெரிப், றஷ்மி போன்றவர்கள் முக்கியமானவர்கள். பெண்களில் அனார், ஷர்மிளா செய்யித் போன்றோர் நவீன இலக்கியத்தோடும் அதன் தரத்தோடும் அதிகமும் இயைந்தவர்கள். ஷர்மிளா செய்யிதின் உம்மத் சிறந்த நாவல்களில் ஒன்று. இலங்கை தேசிய அரசியலில் முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அடையாளச் சிக்கல்கள், தமிழர்களுடனான அவர்களின் உறவாடல்கள், அது தமிழ் அடையாளமாக ஒன்றிணைய முடியாத தனித்த இருப்பு போன்றவற்றைக் குறித்த கதையாடல். கவிதை வெளியில் அனாரின் ஓவியம் வரையாத தூரிகை, பச்சை வானம், பெருங்கடல் போடுகிறேன் போன்றவை முக்கியத் தொகுப்புகள். இவை குறியீட்டியல் ரீதியான நுட்பமான மொழியுடன், இலங்கை நிலப்பரப்பை பிரதிபலிப்பு செய்பவை.
நவீனத் தமிழ் இஸ்லாமியப் படைப்புலகம் அதற்கான கலைத்தன்மையையும், தரத்தையும் உட்கொண்டு நகர்ந்து வந்தாலும் பிறமொழி இலக்கியங்களை ஒப்பிடும்போது இன்னும் நெடுந்தூரம் கடக்க வேண்டியதிருக்கிறது.
தொடர்புக்கு: mohammed.peer1@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT