Published : 17 Jun 2017 09:48 AM
Last Updated : 17 Jun 2017 09:48 AM
சீனமும் தமிழும் செம்மொழிகள். தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டவை. காலத்தின் சோர்வு தழுவாத இளமையுடன் துலங்குபவை. ஒரே கண்டத்தில் வழங்கிவருபவை. எனினும், இவ்விரு மொழிகளுக்கிடையேயான உறவு அரிதாகவே இருந்துவருகிறது. இந்தச் சூழலில் மொழிபெயர்ப்பாளர் எம். ஸ்ரீதரன் சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக செய்யும் மொழியாக்கங்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.
பயணி என்னும் புனைபெயர் கொண்ட எம். தரன் தற்சமயம் தாய்வானில் உள்ள இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றுகிறார். ஐ.எப்.எஸ். அலுவலர்கள் வெளிநாட்டு மொழியொன்றைக் கற்க வேண்டுமென்பது விதி. பயணி சீன மொழியைத் தேர்ந்தெடுத்தார். சீன மொழி கடினமானது. சீன மொழியின் வரிவடிவம் ஓவியத்தைப் போல இருக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், பலருக்கும் தெரியாதது, சீன மொழியில் எழுத்துக்களே இல்லை என்பது. எல்லாமே சொற்கள்தான். சீன மொழியை எழுத்துக்கூட்டிப் படிக்க முடியாது. சீன மொழியின் ஆயிரக்கணக்கான சொற்களைத் தனித்தனியே எழுதவும் ஒலிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இது மொழி பற்றிய நமது அடிப்படைப் புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கக் கூடியது. சீன மொழியைக் கற்கத் திறந்த மனமும் வியப்பின் சுவையும் உழைப்பின் வலிவும் தேவை. இவையெல்லாம் பயணிக்கு இருந்தன. அவர் சீன மொழியைக் கற்றுத் தேர்ந்தார். தான் பெற்ற கல்வியை மற்றவர்களேடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விழைந்தார். அதன் விளைவுதான் அவரது முதல் நூல்- ‘சீன மொழி- ஓர் அறிமுகம்’ (காலச்சுவடு பதிப்பகம், 2004).
சீனமொழியைக் கற்பதற்கும் வேறு வரிவடிவங்களில் எழுதுவதற்கும் ரோமன் எழுத்துக்களைக் கொண்டு சீனச் சொற்களை ஒலிக்கும் ‘பின்யின்’ என்னும் முறை கடந்த 50 ஆண்டுகளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாகத் தமிழின் வரிவடிங்களைக் கொண்டு சீன மொழியின் சொற்களை ஒலிக்கும் புதிய முறையைப் பயணி அறிமுகப்படுத்துகிறார். தமிழிலிருந்து நேரடியாகச் சீன மொழியைக் கற்பது எளிதானது என்றும் இந்த நூலில் நிறுவுகிறார். பயணியின் அடுத்த நூல் ‘வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை- கவித்தொகை - சீனாவின் சங்க இலக்கியம்’ (காலச்சுவடு, 2012). சீன நூல்களில் மிகத் தொன்மையான ‘ஷிழ் சிங்’ (Shi Jing) சீனாவின் முதல் நூல். சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ‘ஷை சிங்’ என்பதற்குப் ‘பாடல்களின் தொகுப்பு’ எனப் பொருள் சொல்லலாம். இதையே கவித்தொகை என்று தமிழாக்கியிருக்கிறார் பயணி.
கவித்தொகைப் பாடல்கள் பல வகையில் தமிழின் சங்க இலக்கியங்களுக்கு ஒப்பானது. சங்கப் பாடல்களைப் போலவே இவையும் எப்போது எழுதப்பட்டன, எப்போது தொகுக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. சங்க இலக்கியத்துக்குத் திணை, துறை இருப்பதைப் போலவே கவித்தொகையின் பாடல்களிலும் பல வரைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. கவித்தொகையும் அகமும் புறமும் கலந்த ஒரு வாழ்க்கையைக் காட்டுகிறது. இந்த நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனப் பாடல்களின் நேரடி மொழிபெயர்ப்புடன் கூடவே பின்னணி விவரங்களையும் பாடல்களின் கருப்பொருளையும் விவரிக்கும் பயணி, கவித்தொகையின் வரலாறு, அதன் உள்ளடக்கம், மொழிபெயர்த்த விதம் ஆகியவற்றைக் குறித்தும் எழுதியிருக்கிறார். கவித்தொகையின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைவிட பயணியின் தமிழாக்கமே சிறப்பாக இருக்கிறது என்கிறார் இருமொழி நாவலாசிரியர் பி.ஏ. கிருஷ்ணன். ‘ஈங் ஈங் எனும் சாணி வண்டுகள்/ வேலிப்படல்களின் மீது’ எனத் தொடங்கும் பாடலை அவர் எடுத்துக் காட்டுகிறார். நாட்டின் நலம் நாடும் ஒருவரைப் பற்றி, மன்னனிடம் பழிகூறுகிறார்கள் நிந்தனையாளர்கள். ஆங்கில மொழிபெயர்ப்புகளில் blue-flies (மாட்டு ஈக்கள்) பறந்துவருகின்றன. எனினும் பயணியின் மொழியாக்கத்தில் வரும் சாணி வண்டுகளே (dung beetles) இங்கு பொருத்தமாக அமைகின்றன. ஏனெனில் சாணி வண்டுகள் எங்கும் நுழைய முயல்வன. சூரிய ஒளி படாத இடங்கள் அவற்றுக்கு உகந்தவை. ஆதலால் அரசவை அல்ல, சாணக் குவியலே நிந்தனையாளர்களுக்குப் பொருத்தமான இடமென்பது பாடலில் பொதிந்திருக்கும் பொருள். வேலிப்படல் அரசவைக்கு உருவகமாக அமைந்தது.
பயணியின் மூன்றாவது நூல் ‘மாற்றம்’ (காலச்சுவடு, 2015). 2012-ல் நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் மோ யான் எழுதிய நாவலின் தமிழாக்கம். ‘மாற்றம்’ நாவல் வடிவத்தில் அமைந்த சுயசரிதை. 1969-ன் இலையுதிர் காலத்தில் ‘துருப்பிடித்த இரும்பு மணி தொங்கிக்கொண்டிருக்கும்’ ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பிக்கும் நாவல், 2009-ல் நவீனமயமான நகரொன்றின் பாரில் பள்ளி நண்பர்கள் இருவர் வைன் அருந்துகிற காட்சியோடு முடிகிறது. இடைப்பட்ட நாற்பதாண்டு காலத்தில் சீனாவில் நிகழ்ந்த மாற்றங்கள் பாரதூரமானவை. உலக வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாதவை. இதைச் சொல்வதற்கு மோ யான் அரசியல், சித்தாந்த ரீதியிலான மாற்றங்களைப் பட்டியலிடவில்லை. மாறாக, இதை மூன்று பள்ளிக்கூட மாணவர்களின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களின் வாயிலாக மோ யானால் சொல்ல முடிகிறது. அதைச் சீன வாழ்வின் ஈரப்பசையுடன் பயணியால் தமிழில் கடத்திவிட முடிகிறது. மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைக்கு வார்த்தை இணையான சொல்லைக் கண்டுபிடிப்பதில்லை என்பதும் புரிகிறது.
கவித்தொகை நூலின் முன்னுரையில் பயணி, நூலில் இருக்கக்கூடிய குறைகளுக்கு ‘எனது ஓட்டைத் தமிழ்த் தட்டும் உடைந்த சீனக் கிண்ணமும் காரணங்கள்’ என்று எழுதியிருக்கிறார். அவையடக்கம் ஒரு பண்பாக வேர்விட்டிருக்கும் தமிழ் மரபிலிருந்து கிளைத்தவர் பயணி. அவர் அப்படித்தான் சொல்வார். இந்தத் தமிழ் மரபுடன் சீனப் பயிற்சியும் இலக்கியத் தேர்ச்சியும் பயணியைத் தேர்ந்த மொழிபெயர்ப்பாளராக்குகின்றன. தமிழ்த் தட்டில் நிறைய இடம் இருக்கிறது. சீனக் கிண்ணம் நிரம்பி வழிகிறது. பயணி தொடர்ந்து பரிமாற வேண்டும்.
- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
மூன்று நூல்களையும் பெற காலச்சுவடு பதிப்பகம் தொடர்புக்கு: 9677778863
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT