Published : 09 Apr 2017 10:33 AM
Last Updated : 09 Apr 2017 10:33 AM
ஞானக்கூத்தனின் மறைவுக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘இம்பர் உலகம்’கவிதைத் தொகுதி அவரது நீடித்த தரத்தையும் உள்ளடக்கத்தின் வளமையையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு வடிவத்தில் நீண்ட காலம் புழங்கியவர்கள் என்ற கவுரவம், பணிமூப்புத் தகுதி மட்டுமே கோராத புதுமையும் வளர்ச்சியும் கொண்டது ஞானக்கூத்தனின் கவிதை உலகம்.
இப்படித் தங்களையும் தங்கள் மொழியையும் உள்ளடக்கத்தையும் புதுப்பித்தபடி இளம் கவிஞர்களின் மொழியையும் பாதிப்பவர்கள் என்று ஞானக்கூத்தனையும் தேவதச்சனையும் சொல்ல முடியும். இம்பர் உலகம் என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவர் ஞானக்கூத்தன்.
இத்தொகுதியில் வரும் ஏழாவது கவிதையான ‘குருதியின் குரல்’எதிர்வினைகளே எதிர்ப்புகளாக மயங்கித் தெரியும் இக்காலகட்டத்துக்குப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
நாயை, அதன் குரைப்பைப் பரிசீலனை செய்யும் கவிதை குருதியின் குரல். எனக்கு சமீபத்தில் நாய்களை, குறிப்பாக, தெருநாய்களைப் பார்க்கும் போது, நேசமும் அவற்றுடனான அடையாள உணர்ச்சியும் பெருகி வருகிறது.
நாய்கள் மழையையும் கோடை யையும் வயோதிகத்தையும் இளமை யையும் மனமின்றி, மொழி யின்றி, உடல் வழியாக, சலிக்கச் சலிக்கப் பூரணமாக அனுபவிக் கின்றன. ஒரு புலன் தூண்டலாக, எதிர்வினையாக, அவை உருவங் களைக் கண்டு அந்நியர் களைக் கண்டு, நிழலைக் கண்டு குரைக் கின்றன; உஷ்ணம் அதிகரிக்கும்போது, மணலைக் கால் களால் நோண்டி, ஈரம் தென்பட, அந்தப் பள்ளத்தில் இளைப்பாறுகின்றன.
நாக்கைத் தொங்கவிட்டு எச்சில் சிந்த வெயிலில் சலித்திருக்கும் நாயைப் பார்க்கும்போது எனக்கு, நாயாக வேண்டும் என்ற ஆசை எழுகிறது.
காலம் காலமாகத் தமிழ் மொழியில் நாய், இழிபிறவியாக, கீழானதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘நாயிற் கடையாய்’ என்கிறார் மாணிக்கவாசகர். சித்தர் பாடல்களில் நாய், படாத பாடு படுகிறது. நவீன கவிதையில் சுந்தர ராமசாமி ‘நடுநிசி நாய்க’ளை மனிதனின் குணப் பிறழ்வுகளின் உருவகமாகவே வகுக்கிறார். பாரதியிலும் நகுலனிலும் நாய்கள் வாஞ்சையாக அணுகப்படுகின்றன.
நவீனன் டைரி நாவலின், ‘ஏன் நவீனனை நாய் என்று அழைக்கக் கூடாது?’ என்ற வாசகம் சிறுபத்திரிகை வாசகர்களிடையே பிரபலமானது. ஒவ்வொரு வடிவமும் ஒவ்வோர் உயிரும் இன்னோர் உயிரின் மேல் உருவாக்கும் சாயலின் அடிப்படையில் நவீனனை நாய் என்று நாம் அழைக் கலாம் அல்லவா?
ஞானக்கூத்தனின் ‘குருதியின் குரல்’ கவிதையில் நாய் வெளிப் படையாக இருக்கிறதா என்று தெரிய வில்லை. ஆனால், குரைப்பு இருக் கிறது. கவிதை ஆசிரியர், ‘ஒரு நாயின் குரல்போல் அது கேட்கிறது’ என்றுதான் சொல்கிறார்.
ஆனால், அது குரைக்கிறது என்பது தெளிவு. அது நமக்கு ஏற்கெனவே தெரிந்த காரணங்களுக்காகக் குரைக்கவில்லை. ஆனால், அது குரைக்கிறது. தன்னையும் மறுகரையையும் பிரிக்கும் நதியைக் கடப்பதற்காக அது குரைக்கிறதாம்!
நம்மையும் நாம் சேர நினைக்கும் மறுகரையையும், நம்மையும் நாம் அடைய நினைக்கும் நியாயங் களையும் லட்சியங்களையும், நம்மையும் நாம் அடைய நினைக்கும் இலக்குகளையும் பிரிக்கும் ஒரு நதி, குரைப்பதால் இல்லாமலோ குறுகியோ போய்விடுமா? இக்காலத்தில் இதுமட்டும்தான் சாத்தியமா? எதிர்வினையையும் எதிர்ப்பையும் பிரிக்கும் ஒரு நதியைப் பார்த்து இந்தக் குரைத்தல் நடக்கிறதா? எதிர்ப்பு சாத்தியம்தானா? - என்பதை யெல்லாம் யோசிக்கத் தூண்டுகிறார் அமரர் ஞானக்கூத்தன்.
குருதியின் குரல்
தெளிவாய்க் கேட்கிறது குருதியின் கூக்குரல்
இடுப்புச் சிறுத்து
விலாப்புறம் வடிவாய் அமைந்து
ரோமம் அதிகமில்லாத வாலுடைய
ஒரு நாயின் குரல்போல் அது கேட்கிறது
பசிக்காக அது குரைக்கவில்லை
பகையின் உரவம் தென்பட்டதற்காக அல்ல
யாரிடமும் கடிபடவும் இல்லை
ஆனால் அது குரைக்கிறது
தன்னையும் ஒரு மறுகரையையும்
பிரிக்கும்
ஒரு நதியைக் கடக்க அது குரைக்கிறது.
தொடர்புக்கு: sankararamasubramanian.p @thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT