Published : 13 Aug 2016 09:26 AM
Last Updated : 13 Aug 2016 09:26 AM
பழங்குடி மக்களின் குரலாக எழுதிவருபவரான ச. பாலமுருகனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘பெருங்காற்று’. தனது ‘சோளகர் தொட்டி’ நாவலில் பழங்குடி மக்களின் குரலை உரக்கப் பேசியவர், இதில் ஒடுக்கப்பட்ட பலதரப்பட்ட மனிதர்களின் அவல வாழ்வைப் புனைவாகச் சித்தரித்திருக்கிறார். அரசு அதிகாரத்தால் நசுக்கப்படும் ஏதிலிகளின் வாக்குமூலமாக வந்து விழுகின்றன வார்த்தைகள். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட பெண்களின் வலியை அதிகம் பதிவு செய்திருக்கின்றன பாலமுருகனின் சிறுகதைகள்.
மனித உரிமைகள் நசுக்கப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மாநிலங்களுக்குக் கள ஆய்வுக்காகச் சென்றிருக்கிறார் ஆசிரியர். அங்கே கிடைத்த அனுபவங்களைப் புனைவாக்கி, சந்தித்த மனிதர்களைக் கதை மாந்தர்களாக்கிக் கதைகளில் உலவவிட்டிருக்கிறார் பாலமுருகன். அதில் பல மாந்தர்கள் வெறும் உயிரை மட்டுமே சுமந்து திரிகிறார்கள். பல மாந்தர்களுக்கு உயிரும் இல்லை. காவிரி, பவானி, சட்லெஜ், ஜீலம் ஆகிய நதிகளையும் அவலங்களுக்கான மவுன சாட்சிகளாக்கியிருக்கிறார் ஆசிரியர்.
புத்தகத்தில் இடம்பெறும் கடைசிச் சிறுகதையின் தலைப்பு ‘பெருங்காற்று. வீரப்பன் வேட்டையில் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி பழங்குடி ஆண்களையும், சித்ரவதை முகாமில் நினைத்தபோதெல்லாம் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களையும் கதை மாந்தர்களாக்கியிருக்கிறார். சித்ரவதை முகாமில் வள்ளி எதிர்கொள்ளும் அவல வாழ்க்கை, அவள் விடுதலையான பின்பும் மாறவில்லை; சித்ரவதை முகாமுக்குச் சற்றும் சளைத்ததல்ல இந்த சமூகம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழகத்தில் அந்தியூர், பர்கூர், மேட்டூர், மாதேஸ்வரன் மலை, தாளவாடி என வனத்தையொட்டிய ஊர்களில் வசிக்கும் பழங்குடிகளின் வாழ்வாதாரம், கல்வி போன்ற பிரச்சினைகளையும் கதைகளின் பேசுபொருளாக்கியிருக்கிறார் பாலமுருகன். ஒன்னகரை என்கிற பழங்குடி மலைக் கிராமத்தில் தன்னார்வத்தில் பள்ளியை உருவாக்கிய ஆசிரியர் நோயில் படுத்துவிட அந்தப் பள்ளியை அரசு எடுத்துக்கொள்கிறது. அரசு ஆசிரியர் வருவார் என்று கிராமமே காத்திருக்கிறது. அரசு ஆசிரியரோ சகல உத்திகளையும் பயன்படுத்தி தனது வருகையைப் பல மாதங்கள் தள்ளிப்போடுகிறார். வேறு வழியின்றி நிர்ப்பந்தத்தால் கிராமத்துக்கு வரும் அவர், தனது கோபத்தைக் குழந்தைகளிடம் காட்டுகிறார். அதன் பின்னர் அவரும் சென்றுவிடுகிறார். ஆளரவமின்றிப் புதர்கள் மண்டிவிடுகின்றன அந்தப் பள்ளியில். தமிழகம் முழுவதும் புதர் மண்டிக் கிடக்கும் மலைக் கிராமப் பள்ளிகளின் குரலாக ஒலிக்கிறது ‘பள்ளித்தலம்’ சிறுகதை.
ஈரோடு, குமாரபாளையம் பகுதிகளில் காவிரி ஆற்றின் தீவுகளில் சிக்கிக்கொண்ட சிறுவனின் தவிப்பைத் திகிலோடு விவரிக்கிறது ‘ஆற்றங்கரை’ சிறுகதை. ஆசிரியரின் சிறு வயது சொந்த அனுபவம் இது. காவிரியின் தீவுகளில் ஆளுயர்ந்த நாணல் புதர்களில் சாராயம் காய்ச்சுவதையும், சாராயம் காய்ச்சும் தொழிலாளிகளின் நிச்சயமற்ற ஜீவனத்தையும் வார்த்தைகளில் வடித்திருக்கிறார் ஆசிரியர். சாராயம் காய்ச்சும் ஒரு வயதான தொழிலாளி, பழங்கஞ்சியில் உப்பு போடாமல் குடிக்கிறார். எந்நேரமும் தண்ணீரிலும் ஊறலிலும் சொதசொதவென்று ஊறி வெண்மையேறியிருக்கும் கையில் உப்பு பட்டால் தோல் பொத்தலாகிவிடும் என்கிற காரணத்தை அறியும்போது அந்தத் தொழிலின் பின்னால் இருக்கும் உஷ்ணமும் வேதனையும் புரிகிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் வாழிடம் அழிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்ணின் அனுமாஷ்ய அழுகுரல், பஞ்சாபில் ராணுவத்தால் கொல்லப்பட்ட மகனைத் தேடியலையும் தாயை தொந்தரவு எனக் கருதி வனத்துக்குள் கொண்டுவிடும் காவல் ஆய்வாளர், காஷ்மீரத்தில் கொல்லப்பட்ட கணவனைத் தேடி அலையும் மனைவியையும் தாயையும் பாலியல் பலாத்காரம் செய்யும் அரசு ஆதரவுக் கும்பல் என கதைக்களம் முழுவதும் அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்கள் எதிரொலிக்கின்றன. அப்படிப் பார்த்தால் ‘பெருங்காற்று’ சிறுகதைத் தொகுப்பு அல்ல. அது நம் பொதுச் சமூகம் முன்பாக வைக்கப்பட்ட புகார் புத்தகம்!
- டி.எல்.சஞ்சீவிகுமார், sanjeevikumar.tl@thehindutamil.co.in
பெருங்காற்று
ச.பாலமுருகன்
விலை: ரூ.120
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98.
தொலைபேசி: 044 - 26251 968.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT