Last Updated : 10 Jul, 2016 11:06 AM

 

Published : 10 Jul 2016 11:06 AM
Last Updated : 10 Jul 2016 11:06 AM

வன்முறையை ஏவாதிருங்கள்!

எழுத்தாளர் பெருமாள் முருகன் வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து இருவிதமான கருத்துகள் பத்திரிகைகளிலும் மின்னணு ஊடகங்களிலும் ஒருவார காலமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

வலதுசாரி சிந்தனையாளர்கள், கருத்துச் சுதந்திரத் தின் எல்லைகளை நிர்ணயிப்பதுதான் முக்கியம் என்றும்; புண்பட்ட சமூகத்தினரின் மனநிலையை இத்தீர்ப்பு கவனத்தில் கொள்ளவில்லை என்றும் பேசலாம். ஆனால் புண்படுத்தும் புனைவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது போன்ற வாதங்களை முன்வைத்து அவர்கள் தீர்ப்பை விமர்சிக்கிறார்கள்.

எழுத்தாளர்கள், இடது சாரிகள், ஜனநாயகவாதிகள் இத்தீர்ப்பை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இது எதிர்பார்த்ததுதான்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடுத்தவன் என்கிற முறையில் இதன் பின்னணி குறித்துச் சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.

காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக 2010-ம் ஆண்டு வெளிவந்த நாவல் மாதொருபாகன். 2011-ல் இரண்டாம் பதிப்பும் 2012-ல் அதன் மூன்றாம் பதிப்பும் வெளியானது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான ONE PART WOMAN 2014-ல் பென்குயின் பதிப்பக வெளியீடாக வந்தது. தமிழில் சுமார் ஐயாயிரம் பிரதிகள் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்தபோது எழாத சர்ச்சைகள் 2014-ம் ஆண்டு இறுதியில் எழுப்பப்பட்டன.

சுமார் ஐந்தாண்டுக் காலம் எவர் மனமும் புண்படாதிருந்த சூழ்நிலையில் திடீரென்று 2014 இறுதியில் மனங்கள் ‘புண்பட்டன’ எப்படி என்கிற கேள்வி முக்கியமானது. மதச்சார்பற்ற, ஜனநாயக சோசலிசக் குடியரசான நம் இந்திய தேசத்தின் மாண்புகளுக்கு மாறாக, சாதியின் பேராலும் மதத்தின் பேராலும் பகைமையைத் தூண்டி அதன் வழியாக அரசியல் அணி திரட்டலை முன்னெடுக்கும் சில அமைப்புகள், திட்டமிட்ட முறையில் இந்த நாவலின் சில பக்கங்களைப் பிரதியெடுத்து கோவில் வாசலில் நின்றும் தெருத்தெருவாகச் சென்றும் மக்களிடம் கொடுத்து எழுத்தாளருக்கு எதிரான உணர்வைத் தூண்டிய பிறகுதான், தங்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் உழன்றுகொண்டிருக்கும் அப்பகுதி எளிய மக்களும் ‘புண்படத்’ தொடங்கினர் என்கிற உண்மையை சும்மா கடந்துவிட முடியுமா?

நல்ல இலக்கியங்களைப் பிரதி எடுத்து மக்களிடம் வழங்கும் பழக்கம் இத்தகைய அமைப்புகளுக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். ஆகவே இது திட்டமிட்ட முறையில் அரசியல் அணிதிரட்டலுக்காக ‘உருவாக்கப்பட்ட’ புண்படல் என்பது தெளிவு. மக்கள் மீது குற்றமில்லை. அவர்கள் தாமாக வாசித்து யாரும் புண்படவுமில்லை.போராடவும் இல்லை.

தொடர்ந்து எழுத்தாளருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்கள், ஆபாச வார்த்தைகளில் திட்டுவது போன்ற கரசேவைகள் தொடர்ந்தன. பேராசிரி யரான அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும், நாவலைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டங்களும் அப்பகுதியில் தொடங்கப் பட்டன. இதில் எதிலுமே அரசு தலையிட்டு எழுத்தாளருக்கு எதிராக ‘வளர்க்கப்பட்ட’ பகை நெருப்பைத் தடுக்கவில்லை. அவர் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

திருச்செங்கோடு நகரில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அறைகூவல் விடப்பட்டது. போராட்டக்காரர்களுடன் பேசி சமாதானம் உண்டாக்க எழுத்தாளர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை. இந்தப் பின்னணியில் டிசம்பர் 27 அன்று எழுத்தாளருக்கு ஆதரவாக எங்கள் அமைப்பு சென்னையில் கண்டன முழக்கப் போராட்டம் நடத்தியது. தமிழகம் முழுவதும் நூறு இடங்களுக்கு மேலாகக் கண்டனக் கூட்டங்களை நடத்தினோம். கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக மக்கள் ஆதரவையும் அரசின் நடவடிக்கையையும் கோரினோம்.

கடையடைப்புக்கு இரு தினங்கள் முன்னதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தாமாக முன்வந்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். 7.1.2015 அன்று அது குறித்து அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் மன்னிப்பு மதிக்கப்படவில்லை. கடையடைப்பு நடத்தப்பட்டது. ஆகவே அவர்களின் நோக்கம் தெளிவாகிறது. மாதொருபாகன் அவர்களுக்கு ஒரு கருவியாகப் பயன்பட்டது. அவர்களுக்கு பெருமாள் முருகன் ஒரு எதிரியும் அல்ல. பொருட்டும் அல்ல. அவர்களுக்கு ஒரு பிரச்சினை தேவைப்பட்டது.

இதற்குப் பிறகுதான் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அந்தப் புகழ்பெற்ற சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு எதிர் தரப்பில் எட்டுப் பேர் அழைக்கப்பட்டிருந்தனர். மறு தரப்பில் எழுத்தாளர் பெருமாள் முருகனும் நூலைப் பதிப்பித்த பதிப்பாளரும் மட்டும். அந்த எட்டுப் பேரில் இருவர் இந்து முன்னணித் தலைவர்கள், இன்று கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ் ஒருவர். சாதி அமைப்புகள், கோவில் கமிட்டியைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்.

இவர்கள்தான் கூட்டுச் சேர்ந்து அவ்வட்டாரத்தில் பிரச்னையைக் கிளப் பியவர்கள் என்பதால்தான் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால், இவர்கள் யாரும் மாவட்ட வருவாய் அலுவலரின் அழைப்பை மதித்து சமாதானக் கூட்டத்துக்கு வரவில்லை. பதிலியாக வேறு நபர்களை அனுப்பினர். ஆனால், அப்பாவி எழுத்தாளரோ நிர்வாகத்தின் அழைப்பை மதித்து அங்கே போய் நின்றார். நிர்வாகத்தின் அழைப்புக் கடிதத்தையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது யார் என்பதையும் பார்த்தாலேயே இது புரியும்.

‘எங்கள் அய்யா’ என்கிற ஒரு புத்தகத்தை பேராசிரியர் பெருமாள் முருகனின் மாணவர்கள் இப்போது வெளியிட்டுள்ளனர். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு எப்படிப்பட்ட ஓர் அறிவுப்படையை உருவாக்கும் புனிதமான பணியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பதை மாணவர்களின் வாக்குமூலங்கள் காட்டுகின்றன. அவருடைய எளிய மனம் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு நிபந்தனையற்ற சரணாகதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ‘சமாதான’க் கூட்டத்தில் தள்ளப்பட்டது. என்ன துயரமான நிலை ஒரு படைப்பாளிக்கு? யாருக்கு முன்னால் யாரைச் சரணடையச் செய்வது?

அக்கூட்டத்துக்குப் பிறகுதான் ‘எழுத்தாளன் செத்துவிட்டான்’ என்று அறிவித்து உள்ளொடுங்கினார் பெருமாள் முருகன். இவ்வளவுக்கும் பிறகுதான், நாமக்கல் ஆட்சியர் வளாகத்தில் நடந்தவை சட்டவிரோதமானவை. அந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி, நாங்கள் வழக்குத் தொடுத்தோம். நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைத் தாங்கி நிற்கும் சாதி, மத சக்திகளின் வாதங்களை மறுத்து இந்திய முதலாளித்துவ ஜனநாயக அரசின் பகுதியான நீதிமன்றம்,

இந்த வழக்கில் கருத்துச் சுதந்திரத்தின் பக்கம் நின்று உறுதியான குரல் எழுப்பியிருக்கிறது. நீதியரசர்களின் தனித்த பங்களிப்பு இதில் மிக முக்கியமானது. கற்றறிந்த ஞானத்தோடும் ஜனநாயக உள்ளத்தோடும் இந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டும் இத்தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும் வலதுசாரிகள் அவர்கள் பாணியில் எல்லாவற்றையும் திரித்துப் பேசுவதுபோலவே இத்தீர்ப்பு குறித்தும் திரித்துப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இது கவலையளிக்கும் போக்கு.

இருபக்கமும் கசப்பு மறைய வேண்டும். காலம் அதற்கு உதவ வேண்டும் எனத் தீர்ப்பில் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர். எழுத்தாளர்களாகிய நாங்கள் தீர்ப்பை மதித்து நடக்கத் தயாராக இருக்கிறோம். எங்கள் வாழ்வும் மனமும் எப்போதும் மக்கள் ஒற்றுமைக்காகவும் எல்லோருக்கும் நல் வாழ்க்கை அமையவேண்டும் என்பதற்காகவும் கனவு காண்பதாகும்.

திட்டமிட்ட அரசியலுக்கு அப்பால் பொதுமக்களின் மனம் புண்பட ஒருபோதும் நாங்கள் சம்மதிக்க மாட்டோம். கருத்துச் சுதந்திரமும் படைப்பாளியின் சமூகப்பொறுப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை, எங்கள் சங்கம் எப்போதும் வலியுறுத்தியே வருகிறது. எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் உள்நோக்கமோ மறைமுக அரசியலோ ஒருபோதும் இருப்பதில்லை. சமூகத்தின் மனச்சாட்சியாக நின்று பேசாப்பொருளையும் பேசுவதே எம் தொழில். அதை உறுதியுடன் தொடர்வோம்.

எளிய உழைப்பாளிகளையும் காலம் காலமாக ஒடுக்கப்படும் பெண்களையும் பிரச்சாரத்தின் மூலம் ‘புண்படவைத்து’ வாசித்தோ வாசிக்காமலோ கடந்து போக வேண்டிய படைப்புகள் மீது வன்முறையை ஏவாதிருக்க எதிர்தரப்பு அரசியலாளர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு எழுத்தாளனை இவ்வளவு துன்பப்படுத்தியது போதாதா?

-ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர், ‘தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

படம்: சீனிவாசன் நடராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x