Published : 14 Dec 2013 01:18 PM
Last Updated : 14 Dec 2013 01:18 PM
ஆண்கள் மீது பெண்களுக்கு ஈடுபாடு, ஈர்ப்பு, நேசம், மோகம், காதல், காமம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இவற்றை வெளிப்படுத்தும் எண்ணங்களை மனத்தடை மறிக்கிறது. எழுதினால் பிற்போக்குத்தனம் என்ற பெயர் கிடைக்குமோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது. இந்த நிலைகளை மீறி, சூழலின் வறட்சியைப் போக்கும் விதத்தில் சக்தி ஜோதியின் காதல் கவிதைகள் வெளிவந்துள்ளன. ‘காதல் வழி’ என்றொரு கவிதை:
ஆற்றின் கரைகளுக்கு
இடையில்
இருக்கின்றேன்.
வெள்ளம் என்மீது
புரண்டோடுகிறது.
தொண்டை வறண்டு
தாகத்தில் தவிக்கின்றேன்.
கால்கள் நீரில் மிதக்கின்றன.
ஆற்றின் போக்கை
எதிர்க்க இயலாமல்
மீனாய் மாறுகின்றேன்.
தப்பிக்க இயலாது
இனி
நானும்
என்னிடமிருந்து
நீரும்
இக்கவிதையின் தலைப்பு ‘காதல் வழி’ என்று அமைந்திருப்பதால், புது அர்த்தங்கள் கிடைக்கின்றன. ஆற்றின் போக்கை எதிர்க்க இயலாமல் மீனாய் மாறும்போது, நானும் நீரிடமிருந்து தப்பிக்க இயலாது; நீரும் என்னிடமிருந்து தப்பிக்க இயலாது என்ற பொருள் அரத்தங்களை விரிக்கின்றது. இதை இன்னொரு கோணத்தில் ‘காம வழி’யாகவும் பார்க்கலாம். காம வெள்ளம் புரண்டோடுகிறது. விரக தாபம் தாகமாகி தொண்டையை வறளச்செய்கிறது. சமாளிக்க ஒரே வழி மீனாக மாறுவதுதான். அதுதான் வெள்ளத்தினுள் நுழைந்து தாபத்தைத் தணிக்கும் வழி.. இப்போது நீர், மீனிடம்; மீன் நீரிடமும் மாட்டிக் கொள்கிறது. ஆனால் மீன் நீரைத் தற்போது கையாள முடியும்.
சங்க இலக்கியத்தில் வரும் காதலின் காத்திருப்பையும், சித்தரிப்பையும் நினைவு கொள்ளத்தக்க வகையில் பல கவிதைகள் அமைந்துள்ளன. சில எடுத்துக்காட்டுகள்.
“முகமூடி நீங்கிய
என் முகத்தை
நீ எப்பொழுது
பார்க்கப் போகிறாய்
என்னை விட
இந்த இரவு
ஆசைப்பட்டுக் காத்திருக்கிறது”
“செல்ல நாய்க்குட்டியென
அவன் வருவது
தொலைவில் தெரிய
காற்றில் கிளை அசைகிறது”
“தோழிகளுடன் வரும் என்னை
யானையின் மீதேற்றி
வலம் வரச் செய்ய
யானையை மண்டியிடச் செய்வான்
மழையில் நனைந்து
பிளிறும் யானையின் முன்பு
வேங்கை மலர்களைக்
கொத்தாகச் சூடி நிற்பேன்”
இவை காதல் கவிதைகள். காதல் கவிதைகள் அற்ற நவீனக் கவிதையுலகில் புழங்குபவர்களுக்கு, இக்கவிதைகள் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடும். காதலில் மெலிந்தோர், மெலிந்துகொண்டிருப்போர் சக்தி ஜோதியின் காதல் கவிதைகளைப் படிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment