Published : 17 Jul 2016 12:31 PM
Last Updated : 17 Jul 2016 12:31 PM
கவிதை கவிஞனின் அடையாளம்தான். ஆனால் வாசிக்க வாசிக்க கவிதை வாசகனின் கவிதையாக மாறிவிடுகிறது. இந்த நிகழ்வே கவிதையின் வெற்றி. வாசகன் தனக்கான அனுபவத்தோடு கவிதையை வாசிக்கிறான். அப்போது வாசக அனுபவம் கவிதைமீது படிகிறது. படைப்பாளியும் வாசகனும் தம்மை அறிந்துகொள்கிற இடமாக ஆகிறது கவிதை. ஞானக்கூத்தனின் ‘கடைசீப் பெட்டி’ கவிதை வாசகனை மதிக்கிற கவிதை.
கடைசீப் பெட்டி
வண்டி புறப்பட நேரம் இருக்கிறது
இரயில் நிலையத்துக் கடிகாரத்தின் பெரியமுள்
திடுக்கிட்டுத் திடுக்கிட்டு நகர்கிறது
பிறந்தகம் போகும் புதுமணப் பெண்ணுக்கு
ஆரஞ்சு தோலுரித்துத் தருகிறான் மாப்பிள்ளை
தொட்டுக் கொள்கிற துவையல் பற்றாமல்
எஞ்சிய இட்லியோடு ஒருவன் ஓடுகிறான்
பெட்டிகள் வராத தண்டவாளத்தின்மேல்
நிலைய விளக்குகள் ப்ரகாசிக்கின்றன
திடுக்கிட்டுத் திடுக்கிட்டு நகர்ந்த முள்
ரெயிலின் புறப்பாட்டு நேரத்தைத் தொட்டது
சென்ட்ரல் ஸ்டேஷன் ரயில் நிலையத்தில்
சிந்திய எனது கண்ணீர் உன்னை மறைக்கிறது
இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்
சோகம் தருவது உலகில் வேறேது?
இந்தக் கவிதையில் உரையாடலைத் தூண்டும் இடம் ‘திடுக்கிட்டுத் திடுக்கிட்டு நகர்கிறது’ என்ற வரி. திடுக்கிடல் காண்பவரின் மனம் சார்ந்தது. ‘ஆரஞ்சு தோலுரித்துத் தருகிறான்’ என்பது உறவின் நெருக்கத்தைக் காட்டுகிறது. ‘எஞ்சிய இட்லியோடு ஒருவன் ஓடுகிறான்’ என்ற வரியில் அவசரமும் போதாமையும் தெரிகிறது. சற்று நேரத்தில் ரயில் போய்விடும் என்பதில் ஒரு வலியை உணர்கிறோம். ‘ரயில் நிலையத்தில் சிந்திய எனது கண்ணீர் உன்னை மறைக்கிறது’ இந்த இடத்தை வாசிக்கும்போது உறவின் ஆழம், பிரிவின் வலி இரண்டையும் உணர்கிறோம். கவிதைக்குள் பேசாத இடங்கள் கவிதையின் சக்தியாக மாறுகிறது. ‘இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்/சோகம் தருவது உலகில் வேறேது?’ பின்புறம் என்று சொல்கிறபோது பார்க்க முடியாத ஒன்றும் கூடவே பிறக்கிறது. இருந்தும் உணர்வுகள் தீண்ட முடியாத ரயில் வண்டி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. வாசித்து முடித்த பின் நீளும் உரையாடல் அந்தரங்கமாக மாறுவது ஞானக்கூத்தனின் கலா அதிர்வு. வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றம் இந்தக் கவிதை.
விளிம்பு காக்கும் தண்ணீர்
கொட்டிவிட்ட தண்ணீர்
தரையில் ஓடியது. ஓடி
சற்று தூரத்தில் நின்றுவிட்டது
வழி தெரியாதது போல.
தொங்கும் மின்விசிறியின் காற்று
தண்ணீரை அசைக்கிறது
மேலே தொடர்ந்து செல்ல
தண்ணீருக்கு விருப்பமில்லை
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.
காற்றினால் கலையும்
தன் விளிம்புகளை
இறுகப் பிடித்துக்கொண்டு
அங்கேயே நிற்கிறது தண்ணீர்
காணும் அனுபவம் கவிதா அனுபவமாக மாறி எப்படி ஒரு கவிதையைத் தருகிறது என்பதை அறிந்துகொள்ள இந்தக் கவிதை மிகச் சரியான எடுத்துக்காட்டு. ‘சற்று தூரத்தில் நின்றுவிட்டது / வழி தெரியாதது போல.’ இந்த வரிதான் நீரின் ஓட்டத்தைக் கவிதைக்கான நிகழ்வாக்குகிறது. ஓடாது அங்கேயே நிற்கிற நீரை வழி தெரியாது நிற்பதாகப் பார்க்கிறார் ஞானக்கூத்தன். கவிஞனின் இந்தப் பார்வைதான் கவிதை மீது நாம் கொள்கிற காதல். எந்தக் கவிதையும் யாருக்குமான கவிதையாக மாறுவது இந்த இடத்தில்தான்.
நீரின் ஓட்டத்தை மனித வாழ்வின் பயணமாக அல்லது மனதின் எண்ணமாக மாற்றுகிறது கவிதை. இன்னொரு வாசக அனுபவம் இதை வேறாகவும் வாசிக்கலாம். இதே கவிதை எனக்கு நாளை இன்னொரு உணர்வைத் தரலாம். அதற்கான சாத்தியம் கவிதையில் அதிகம். கொட்டிய வினையால் நிகழ்ந்த நீரின் ஓட்டத்தை மனித வாழ்வோடு இணைக்கிறது கவிதை.
வழி தெரியாதது போல என்கிற வரி வாழ்வின் பயண நடுவில் நிகழ்கிற ஸ்தம்பிப்பு. அல்லது ஒரு தயக்கம். அதனால்தான் ‘வழி தெரியாதது போல’ என்கிறார். வாசிப்பில் நீரோடு நம் மனமும் பயணிக்கிறது. நீரின் இடத்தில் வாசிக்கும் மனம் உட்கார்ந்துகொள்கிறது. இப்போது நீர் வேறு மனம் வேறல்ல. அதனால் கவிதை எல்லாருக்குமானதாகிறது. கடந்து வந்த வாழ்வை அசைபோடுகிறது மனம். புறம் அந்த இடத்தைக் கலைக்க விரும்பலாம். மனம் அதே இடத்தில் இருக்க விரும்பலாம். ‘தன் விளிம் புகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு’ என்ற வரியிலிருந்து வாசகன் எளிதாக மீள முடியாது.
- கட்டுரையாளர், கவிஞர், நாவலாசிரியர், தொடர்புக்கு: kavai.palanisamy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT