Published : 30 Nov 2013 04:14 PM
Last Updated : 30 Nov 2013 04:14 PM
தேவேந்திர பூபதியின் கவிதைகள் ஆழ்ந்து படிக்க வேண்டியவை. மேற்பார்வையில் ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல் தோன்றி ஏமாற்றிவிடக் கூடியவை. எழுத்தாளர்கள் விரும்பிப் படிக்கும் தன்மையுடைய கவிதைகள். மிகவும் வித்தியாசமான கவிதைகளாக நான் இவருடைய கவிதைகளைக் கருதுகிறேன். ‘யாரோ நானறியேன்’ என்ற கவிதையைத் தருகிறேன்.
“புற்களையுண்ணும் விலங்குகள்
தன் உதடுகளால் அதன் கொழுந்துகளை மட்டும்
ஆய்ந்து உண்கின்றன.
நிலமெங்கும் வேர்கள் ஜீவித்திருப்பது
அவற்றுக்குத் தெரியும்
நிலத்தில் மறைந்திருக்கும் அக்கினிக்கு
மேற்பரப்பில் பச்சை நிறம் காட்டும் புற்களை
பாலையில் ஈச்சை, ஒரு தாவர நீருற்று
மலைமீதோ இச்சை பூரிக்கும் மரங்கள்
காற்றையும் கடலையும் மழையையும் சேற்றையும்
நாலாயிரம் காலமறிந்து வாழ்ந்தோம்
வேர்விட்டு விலங்கு போல்
விச்ராந்தியாகத்தான் முடியவில்லை.
பின், புல்லாகி, பூண்டாகி, பல்விருகமாகி
பாம்பாகி, யார், யாரோ நாமறியோம்.”
புற்கள் மேற்பரப்பில் பச்சை நிறம் காட்டுகின்றன. பூமிக்குக் கீழ் வேர்கள் இருக்கின்றன. விலங்குகள் நாக்கைச் சுழற்றி மேற்பரப்பில் இருக்கும் புல்லை மட்டும் உண்கின்றன. காற்றையும், மழையையும், கடலையும், சேற்றையும் நாலாயிரம் ஆண்டுகளாகக் காலமறிந்து வாழ்ந்த மனிதனுக்கு வேர்விட்டு, புற்களை மட்டும் உண்ணும் சாமர்த்தியம் போலத் திறன் இருக்கிறதா. விலங்குகளின் அந்த நிலையை விச்ராந்தி என்ற சொல் மூலம் குறிக்கிறார். புல் என்ற சொல் வந்துவிட்டதல்லவா எனவே புல்லாகி, பூண்டாகி, பல்விருகமாகி, பாம்பாகி என்ற மாணிக்கவாசகரின் மானுட உருக்கம் கவிதையில் வந்து சேர்கிறது. மனிதனுக்கு விச்ராந்தியாக இருக்க முடிகிறதா என்ற கேள்வியுடன் இந்த மானுட உருக்கம் இயைகிறது. மாணிக்கவாசகரின் கவிதை, இக்கவிதையில் நுழைந்தவுடன் கவிதை வேறு பரிமாணம் கொள்கிறது.
‘தரைபடிந்த ஓவியம்’ என்றொரு கவிதை.
செத்த எலி போல நாறுகிறது, தர்மம்
அதர்மத்தின் கழுகுக்கண்கள்
எறும்புகளின் சுறுசுறுப்பு
நீர் உறிஞ்சின் வெயிலின் தாகம்
வாகனச் சக்கரங்களின் அவசரம்
அனைத்திலும் தட்டையாகி
தரை படிந்த ஓவியமாய்
காற்றில் எழும்பிப் பறந்து
மரத்தில் ஒட்டிய கார்ட்டூன் எலி
குழிந்த கண்களால்
சாலையைக் கண்காணிக்கிறது.
தர்மத்தின் நிலையை இக்கவிதை அதனுடைய நோக்கில், அபூர்வமான ஒரு சித்தரிப்பாக உருவாக்கியுள்ளது. தர்மம் அதர்மத்தின் கழுகுக் கண்களாலும், எறும்புகளின் சுறுசுறுப்பினாலும், வெயிலின் தீவிரத்தாலும், வாகனச் சக்கரங்களினாலும், தட்டையாகித் தரைபடிந்த ஓவியமாய்க் கிடக்கிறது. தர்மம் இங்கு செத்துக்கிடந்த எலியுடன் இணைகிறது. தரைபடிந்த ஓவியமாகக் கிடந்தது எழும்பிப் பறந்து மரத்தில் ஒட்டுகிறது. அப்போது கார்ட்டூன் எலியாக மாறுகிறது. குழிந்த கண்களால் சாலையைக் கண்காணிக்கிறது. தர்மத்தின் நிலையை இக்கவிதை நூதனமான, புதுமையான முறையில் சித்தரித்திருக்கிறது.
சொற்களை நகர்த்தும்போது புரிவதுதான் கவிதைக்கு அழகு என்ற சொற்றொடரை உண்மையாக்குகிறது இவரது கவிதைகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT