Published : 14 Jun 2016 10:13 AM
Last Updated : 14 Jun 2016 10:13 AM
தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் எழுபதுகள் பல சிறந்த ஆளுமைகளை அறிமுகப்படுத்தியது. வாழ்வின் ஜீவத் துடிதுடிப்பைக் கலாபூர்வமாக வெளிப்படுத்திய அவர்களால் தமிழ்ச் சிறுகதை புதுமுகம் கொண்டது. அதுவரையில் புறக்கணிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் பாடுகள், மனத் தலங்கள் வடிவம்கொண்டன. ஒடுக்கப்பட்டோர் பற்றிய பல கதைகள் அந்தத் தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டவை.
‘அந்தச் சலுகையின் பலத்தால் நிற்பவை அவை’ என்ற விமர்சனம் சுத்த சுயம்பிரகாச விமர்சகர்களால் முன் வைக்கப்பட்டன. உண்மை அதுவல்ல. மாதவையா காலத் தில் இருந்தே சிறுகதைகள் பத்துக்கு நாலு பழுதில்லை என்பதாகத்தான் இருந்தன. மிகச்சிறந்த கலை வெளிப்பாடு கொண்ட வாழ்வு பற்றிய சுயமான பார்வை கொண்ட சில ஆளுமைகள், இருபதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் வெளிப்பட்டார்கள். அவர்களில் முக்கியமானவர் அழகிய பெரியவன்.
வேலூர் மாவட்டம் எனத்தக்க மண்ணின் மக்களை, தான் அறிந்த அவர்களை அழகிய பெரியவன் எழுதத் தொடங்கினார். தமிழ்ப் பரப்பில் அவரது கதைகள் எப்போதும் இழந்தவர் பக்கம் நின்று பேசின. இன்றில் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டு கால நியாயங்களை வரலாறு மற்றும் மானுட நீதியின் பக்கம் நின்று அவர் உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். தாம் உருவாக்கிய சிறுகதைகள் மற்றும் சமீப நாவலான ‘வல்லிசை’ வரைக்கும், கலைப் பிரதிகள் என்ற ஓர்மை வழுவாமல், கலைப் பின்னம் வந்துவிடாமல் அவர் முழுமையான படைப்புகளை எழுதி வந்திருக்கிறார்.
‘அழகிய பெரியவன் கதைகள்’என்ற 56 கதைகளும் ஆறு நாவல்களும் கொண்ட நற்றினை பதிப்பகம் வெளி யிட்ட தொகுப்பு என் மேஜை மேல் இருந்துகொண்டு, பல கதைகள் தன்னை எழுதச் சொல்கின்றன.
‘பொற்கொடியின் சிறகுகள்’ என்ற ஒரு கதையைப் பார்ப்போம். மிகச் சிறந்த கதை இது. இந்தக் கதையின் முதல் வரி இப்படித் தொடங்குகிறது:
‘இளங்காலையின் செறிந்த மவுனம் பொற்கொடிக்காகக் காத்துக் கொண் டிருந்தது. அவள் திண்ணையில் வந்து அமர்ந்ததும் வெறியோடு அவளைத் தழுவிக் கொண்டது.’ அழகிய பெரியவன் கதைகளின் முதல் வரி, கவனம் கோரும் இயல்புடையது. கதையின் ‘தொனியை’ அந்த முதல் வரி எழுதிவிடுகிறது. வாசகர் கவனம் எனும் ரயில் சக்கரம், அந்த வரித் தண்டவாளத்தில் உருளத் தொடங்குகிறது.
பொற்கொடி குளிருக்காகக் கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு இப்படி அப்படியுமாக உடலைத் திருப்பினாள். அம்மா எதுவும் பேசாமல் இவளையே பார்த்துக் கொண்டிருந்து, பார்வையின் இறுதியில் இரண்டு சொட்டு கண்ணீர் வடிப்பார். பொற்கொடி கவனிக்குமுன், முந்தாணையால் கண்களைத் துடைத் துக் கொண்டார். திண்ணையில் உட் கார்ந்து கொண்டு தூரத்து இரட்டை மலைகளைத்ப் பார்த்துக் கொண்டி ருப்பது, கிழக்கு பார்த்த அரண்மனை வீடு, செம்மண் நிலத்தில் மொச்சைக் கொடிகள், தப்புச் செடிகளின் மஞ்சள் பூக்கள்... பார்ப்பதற்குத்தான் எத்தனை இருக்கின்றன!
அம்மா அவளுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்திருந்தாள். பகல் முழுக்க அவள், அவளுடன் மட்டும்தான். தனிமை. இரக்கமற்ற தனிமை. வேறு வழியும் இல்லை. அம்மா வேலைக்குப் போக வேண்டும். தம்பி, தங்கை பள்ளிக்கூடம் போனபிறகு, அவள் அவளையே தின்னுகொண்டு இருக்க வேண்டும். தவமணி அக்காவின் சட்டையை எடுத்து தைக்கத் தொடங்கினாள். தைப்பதை நிறுத்திவிட்டு வாசல் பக்கமிருக்கும் சரக்கொன்றையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். அப்புறம் மெஷின். அவளுக்கு முன் ஒரு புகைப்படம் சட்டம் போட்டு மாட்டப்பட்டிருந்தது.
மலையும், வானமும், மரங்களும், மேகமும். சட்டத்தை ஊடறுத்துக்கொண்டு சில பறவைகள் பறந்தபடி. அந்தப் பெரிய புகைப்படத்தைக் கழற்றி எறிந்துவிட வேண்டும். அவளுக்குப் பெரும் கனவு ஒன்று இருந்தது. ஆனால், அது முடியாது. ‘‘நீ கொழந்தடி... ஆயுசு முழுக்க குழந்தையாவே இருக்க வேணும்னு அந்த ஆண்டவன் எழுதிட்டான். உனக்கு என்னாத்துக்குக் கவலை? நான் இருக்கேன்’’ என்பார் அம்மா. அம்மாவின் மடியைக் கண்ணிரால் நனைப்பாள் பொற்கொடி.
பொற்கொடி படித்த பள்ளிக்கூடத்தில் இருந்து கூச்சலும் கும்மாளமும் எழுந்தது. அவள் வீட்டுப் பக்கம்தான் பள்ளிக்கூடம். அலமேலுவும் நந்தினியும் அவளை அரண் கட்டிய மாதிரி அழைத்துப் போவார்கள்.
நந்தினி தனது திருமண அழைப் பிதழை எடுத்துக்கொண்டு பொற்கொடி யைப் பார்க்க வந்தபோது அம்மா கதறி அழுதார். அழைப்பை வைத்துவிட்டு நந்தினி சொன்னாள்: ‘நீதாண்டி எனக்கு தோழிப் பொண்ணு!’
அவள் போன பிறகு அம்மா பொற் கொடியை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு விம்மினாள். ‘உன்னை எப்படித்தான் கரையேத்தப் போறேனோ? எம்மாடி!’ அம்மாவின் கைகள் பொற்கொடியின் மெலிந்த கால்களை இறுக்கமாகப் பற்றி இருந்தன. அம்மாவின் தோளை நனைத்தாள் பொற்கொடி. தவமணி அக்கா வந்தாள். அவள்தான் பேச்சுத் துணை. சில நாட்களில் தனக்கோட்டி அண்ணன் வந்து, அவள் மார்பையே பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பான். அவனை ‘வர வேண்டாம்’ என்றுதான் சொல்ல நினைக்கிறாள். ஆனால், ‘வரவேண்டும்’ என்கிறது அவள் உள்மனது.
புகைப்படத்துப் பறவைகள் பறந்தது மாதிரி அவளும் பறந்தாள்.
அப்போது அந்தச் செய்தி வந்தது.
‘‘நம்ம தாயிக்கு மூணு சக்கர வண்டி வந்திருக்குதுக்கா. பொதங்கிழமை டவுன் ஐஸ்கூலுக்கு பொற்கொடியக் கூட்டிக்கினு வந்துடு. மந்திரி வர்றாரு. வர்றப்ப ஊனமுற்றோர் அட்டையைக் கொண்டு வந்துடு.’’
‘‘பொண்ணே, உனக்கு வண்டி தர்றாங்களாண்டி…’’ என்று அம்மா ஆனந்தமாகச் சிரித்தார்.
‘‘சுத்துப்பக்கம் இருக்கிற சிநேகிதிக் காரிகளை நீயே போய் பார்த்து வரலாம். ஏதாவது வேணுமின்னா மேல்பட்டி வரைக்கும்கூட தனியோவே போகலாம்’’.
புதன்கிழமை அம்மா வரவில்லை. தம்பியும், தங்கையும் உடன் வந்தார்கள். வண்டியைத் தொட்டுப் பார்த்தாள் பொற் கொடி. மூன்று சக்கரத்திலும் காற்று இல்லை. எப்படியோ தள்ளிக் கொண்டு சைக்கிள் கடைக்கு வந்து காற்றடித்துக் கொண்டு புறப்பட்டார்கள். பேருந்துகள் வழிமாற்றிவிட்டிருந்தார்கள். பொற் கொடி உட்கார சைக்கிள் கடைக்காரர் உதவி செய்தார். இரண்டு புறமும் செவ்வந்தியும், சக்திவேலும் வண்டி யைத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். செவ்வந்தி, மிகவும் வெட்கப்பட்டு விட்டாள். அவள் சிநேகிதிகள் ஏதிர்பட்டுவிட்டார்கள்.
சில இடங்களில் பொற்கொடி பெட லைக் கையல் அழுத்தி முயற்சி செய்தாள். வண்டி தாறுமாறாக ஓடியது. வீடு வந்து சேர்ந்தார்கள். பல மைல் தூரம் தள்ளிய களைப்பில் உறங்கிப்போனார்கள். விடிந்ததும் செவ்வந்தி அம்மாவிடம் குறைப்பட்டுக்கொண்டாள். ‘‘நீ பாட்டுக்கு அம்பது ரூவாயை தந்து அனுப்பி வெச்சுட்டே. எவ்ளோ சிரமப்பட்டோம் தெரியுமா? வண்டியைத் தள்ளிக்கினு வர்றத்துக்குள்ளே வெக்கமாப் போச்சு. கையி, காலெல்லாம் வலி. எங்கூட படிக்கிறவள்லாம் பாத்துட்டா. இனிமே இதுக்கெல்லாம் என்னை அனுப்பாதே.’’
பொற்கொடி சரசரவென்று புழக் கடைப் பக்கம் போனாள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வாசலில் வண்டி யைத் தள்ளும் சத்தம் கேட்டது. அம்மா வும் செவ்வந்தியும் வாசலுக்கு ஓடி வந்து பார்த்தார்கள். வாசலில் இருந்த வண் டியை சாலைக்கு நகர்த்திக்கொண்டு போய் அதில் ஏறி உட்கார முயன்று கொண்டிருந்தாள் பொற்கொடி.
அம்மா வேகமாக ஓடி பொற்கொடி யைத் தூக்கிவிட முயன்றார். அம்மா வின் கைகளை வேகமாகத் தள்ளிவிட்டாள் அவள். வண்டியில் உட்கார்ந்ததும் கைப் பெடல்களை அழுத்தமாகச் சுழற்றினாள்.
அது மெல்ல நகர்ந்தது.
பொற்கொடி நம்மோடு வாழும் ஒரு மனுஷி. மனுஷி மட்டும் அல்லாது, கதையில் அவள் ஒரு குறியீடு. பொற்கொடியை முன்வைத்து வாசகர்க்கு, பறக்க ஆசைப்படும் மனிதகுலத்துக்கு றெக்கைகளைத் தருகிறது இக்கதை. தவளை தன்னை தவளை என்று நினைத்து அதை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் அது தவளைதான். மான், தன்னை மான் என்று நினைப்பதால் அது தாவுகிறது. பறவை, தன் நினைவுகளில் பறத்தலை வைத்திருக்கிறது. ஆகவேதான் அது பறக்கிறது. பொற்கொடியின் வீட்டுச் சுவரில் மாட்டப்பட்ட அந்தப் படத்தின் பறவையில் தன்னைக் கண்டாள். வண்டி அவள் றெக்கை ஆயிற்று.
மனிதகுலத்தை அடுத்த தளத்துக்கு நகர்த்துகிறது இலக்கியம். அவர்களை அவர்களிடம் இருந்து கற்றுக்கொடுத்து, அவர்களுக்கு அவர்களை உணர்த்து வதாக இருக்கிறது இலக்கியம். எப்போ துமே, எல்லாச் சமூகத்திலும் மனிதர்கள் மேல் வரிசையில் மேல் தளத்தில் இயங்கு பவர்களாக வடிவமைக்கப்படுகிறார்கள். டாக்டர், தொழிலாளி, மேனேஜர், அதிகாரி, அவர் இவர் என்று உருவா கிறார்கள். ஆனால், மனிதர்களிடம் இன்னொரு தளம் இருக்கிறது. அதுவே, அவர்கள் நிற்க வேண்டிய தளம். அத்தளத்தில் அவர்கள் மனிதர்கள் என்று அறியப்படுகிறார்கள். அசலான கல்வி அவர்களைத்தான் உருவாக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, நம் கல்வியின் நோக்கம் அதுவாக இப்போது இல்லை.
சிறந்த கதாசிரியர்கள் அந்த உயர் பணியைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிகவும் முக்கியமானவர் அழகிய பெரியவன்.
- நதி நகரும்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT