Published : 20 Jun 2017 10:13 AM
Last Updated : 20 Jun 2017 10:13 AM
ஒரு பள்ளி ஆசிரியையிடம் பேசிக் கொண் டிருந்தேன். மனதில் இருந்த ஆதங்கங்களைக் கொட்டத் தொடங்கினார்.
‘‘இப்போதெல்லாம் பசங்க படிக்கிறதுல, நல்ல மார்க் வாங்குறதுல முன்பைவிட ரொம்ப முன்னேறியிருக்காங்க. ஆனா, அவங்க பழக்கவழக்கம், எண்ணங்கள்தான் ரொம்ப மோசமாகிட்டு வருது. குறிப்பா செல்போன், இன்டர்நெட், சோஷியல் நெட்வொர்க் மூலமா பசங்க எதையெல்லாம் கத்துக்கிடக் கூடாதோ, அத்தனையும் ஈஸியா கத்துகிடுறாங்க.
அவங்க மனசைக் கெடுக்கிறதுல பெரிய பங்கு செல்போனுக்கு இருக்கு. ஒரு டீச்சரா இதை தடுக்க முடியலையேன்னு வருத்தப்படுறேன். வகுப்பறையில் நான் செல்போனை தடுக்க முடியும். ஆனா, பள்ளியைவிட்டு வெளியே போன தும் அவன் கையில் போன் வந்துருதே. என்ன செய்யறது?
பசங்க செல்போனை எப்படி பயன்படுத்துறாங்கன்னு, வீட்டுல யாரும் கவலைப்படுவதே இல்லை. ஆபாசப் படம். ஆபாசப் பாட்டு. வீடியோகேம், சாட்டிங். நினைக்கவே முடியாத பயங்கரம் எல்லாம் ஈஸியா நடந்துட்டு இருக்கு. இது பையனுங்கப் பிரச்சினை மட்டுமில்லை. பொண்ணுகளையும் சேர்த்துதான்.
என் ஸ்கூல்ல பத்தாம் வகுப்புப் படிக்கிற பையன் என்னை டீச்சர்னுகூட நினைக்காம, உடம்பையே வெறிச்சிப் பார்த்துகிட்டு இருக்கான். பக்கத்துல கூப்பிட்டு பேசினா, என்னை உரச டிரை பண்ணுறான். இப்படி இருந்தா எப்படி பாடம் சொல்லிக் கொடுக்கிறது?
நிறைய நேரம் வெறும் பாடம் மட்டுமே நடத்துற டீச்சராவே இருக்கிறேன்னு எனக்கே குற்றவுணர்ச்சியிருக்கு. கூடவே என் பிள்ளைகளும் இப்படித்தானே கெட்டுப் போவாங்கன்னு பயமாவும் இருக்கு.
ஸ்கூல் பசங்க செல்போன், இன்டர்நெட் எல்லாம் பயன்படுத்தாம கவர்மென்டே தடுக்க முடியாதா? எதை பசங்க பார்க்கணும்? பார்க்கக் கூடாதுன்னு இன்டர்நெட்டுக்கு சென்சாரே கிடையாதா? பாடத்தில் மட்டும் ஒழுக்கத்தை கற்பித்தா போதுமா? படிக்கிற பிள்ளைகளை ஏன் சார் இப்படி கெடுக்குறாங்க? இதை ஏன் சமுதாயத்துல யாரும் கண்டுகிடவே மாட்டேங்குறாங்க?’’ என்றார்.
அந்த டீச்சரின் ஆதங்கக் குரலைக் கேட்க வருத்தமாக இருந்தது. அது தனிக் குரல் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் கல்விச் சூழலில் ஏற்பட்டுவரும் சீர்கேட்டின் எதிரொலி. பெருநகரப் பள்ளிகள் தொடங்கி சிற்றூர்களின் பள்ளி வரை மாணவர் மத்தியில் ஆபாசப் படங்கள், பாடல்கள், உரையாடல்கள் தொற்றுநோயென பரவிவிட்டன. மாணவர்கள் ஆபாசப்படங்களைத் தரவிறக்கம் செய்து பரிமாறிக் கொள்கிறார்கள். கூடிக் குடிப்பதும். குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
கல்வித்துறைப் பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது, பயிற்றுவித்தலில் மாற்றம் கொண்டு வருவது வரவேற்க வேண்டிய முயற்சி. ஆனால், அவற்றைவிட ஆதாரமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் புரையோடிவிட்ட இந்தச் சீரழிவுகளை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம்? இதற்கு ஆசிரியர், பெற்றோர். கல்வி நிறுவனங்கள் என்ன செய்யப் போகின்றன என்பது பதிலற்ற கேள்வியாகவே உள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளில்கூட மாணவர்கள் இணையம் மற்றும் செல்போனை எங்கே, எப்படி உபயோகம் செய்வது என்பதில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், நம் ஊரில் பொதுக் கழிப்பறையைப்போல செல்போனை உபயோகம் செய்து வருகிறோம்.
ஒழுக்கமும் பண்பாடும் இல்லாத கல்வி, மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமின்றி சமூகத்தின் எதிர்காலத்தையும் சேர்ந்து நாசப்படுத்தக் கூடியது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நடுவே ஆலோசகர்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக, உளவியல் ஆலோசகர்களின் தேவை அதிகமிருக்கிறது. அவர்கள் மாணவர்களுடன் கலந்து பேசி நெறிப்படுத்தினால் கல்வியின் தரம் மட்டுமின்றி, மாணவர்களின் ஆளுமையிலும் மாற்றங்கள் உருவாகும்.
ஜப்பானில் ஒரு பவுத்த மடாலயம் இருந்தது. அங்கே, இளந் துறவிகள் பலர் வேறு வேறு ஊர்களில் இருந்து வந்து தங்கி பவுத்த ஞானத்தைப் பயின்றார்கள். அந்தத் துறவியர் மடாலயத்துக்கு ஒரு இளந்துறவி வந்து சேர்ந்தான். அவன் மதுப் பழக்கம் உள்ளவன். யாருக்கும் தெரியாமல் இரவில் அவன் மடாலயத்துக்கு வெளியே சென்று குடித்துவிட்டு வருவான். அதைக் கண்ட மூத்த துறவி, தலைமை குருவிடம் புகார் சொன்னார்.
அதைக் கேட்ட தலைமை குரு சொன்னார்: ‘‘அவசரப் படாதே. கல்வி கற்க வருபவனைக் கடுமையாக தண்டித்து துரத்திவிடக் கூடாது. அறிவுரை சொன்னால் திருந்திவிடுவான்!’’ என்று சொன்னவர், மறுநாள் அவனை அழைத்து அறிவுரை வழங்கினார்.
ஆனால், அவன் அதற்குக் கட்டுப்படவில்லை. ஆகவே, மடாலயத்தின் கதவுகளை இரவில் பூட்டிவைக்கும்படி உத்தரவு போட்டார் மூத்த துறவி. இப்போது அந்த இளந்துறவி குடிப்பதற்கு பகலிலேயே வெளியே போய்வரத் தொடங்கினான்.
இதை தலைமை குருவிடம் சொன்னபோது அவர் சொன்னார்: ‘‘அவசரப்படாதே, காசு இருந்தால்தானே குடிக்கச் செல்வான். அவனிடம் உள்ள காசை பறித்துவிடு!’’ என்றார்.
அப்படியே காசை பறித்து, அவன் பகலில் வெளியே செல்லக்கூடாது என தடுத்து, நிறைய வேலைகளை செய்ய வைத்தார்கள். அவனோ, வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், குடிப்பதற்காக திருடவும் தொடங்கினான். அத்துடன் சேர்ந்து குடிக்க சிலரை துணைக்கும் சேர்த்துக்கொண்டான்.
மூத்த துறவிக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அவர் தலைமை குருவிடம் மறுபடியும் முறையிட்டார். அதற்கு அவர் சொன்னார்:
‘‘அவசரப்படாதே. இப்போதும் அவனை திருத்த வழி இருக் கிறது. நானே அவனிடம் பேசுகிறேன்.”
தலைமை குரு அந்த இளந்துறவியைக் கூப்பிட்டு அறிவுரை சொன்னார். அவன் ஏற்றுக் கொண்டதைப் போல நடித்தான். ஆனால், மறுநாள் பகலில் அவன் சிலரை அழைத்துக் கொண்டு குடிக்கப் போனதுடன், மது விடுதியில் பணியாற்றும் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து அடி, உதை வாங்கித் திரும்பினான்.
இப்போது தலைமை குரு சொன்னார்: ‘‘போதும் அந்த இளந்துறவியை அடித்து துரத்திவிடு. அவன் கல்வி பயில லாயக்கற்றவன். ஒரு தவறான மாணவன் நூறு தவறான மாணவர்களை உருவாக்கிவிடுவான் என்பது உண்மை. சுய ஒழுக்கமும், அறமும், கட்டுப்பாடுகளும் இல்லாத மடாலயம் சூதாட்ட விடுதி போலாகிவிடும் என்பதை புரிந்து கொண்டேன்.அவனை துரத்திவிடு!’’ என்றார்.
இளந்துறவியை மட்டுமின்றி, சேர்ந்து குடித்தவர்கள் அத்தனை பேரையும் உடனே மடாலயத்தில் இருந்து துரத்தி விட்டார்கள் என்று முடிகிறது அந்த ஜப்பானியக் கதை.
அன்பை போதிக்கும் பவுத்த மடாலயம் என்றாலும் கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் தேவையாகத்தானே இருக்கின் றன. இன்று கட்டணம் கொடுத்து, அதுவும் அநியாயக் கொள்ளையாக பணம் பறிக்கும் கல்விநிலையங்களில் பணம் கட்டிப் படிக்கும் மாணவர்கள் தங்கள் தவறுகளைத் தட்டிக் கேட்க, கல்வி நிலையத்துக்கு என்ன உரிமை இருக்கிறது என கேள்வி கேட்கிறார்கள்.
கல்வியை சந்தைப் பொருளாக்கியதால் கல்வியின் தரம் மட்டும் பாதிக்கப்படவில்லை. மாணவர்களின் இயல்பும், ஒழுக்கமும், சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாகவே நாட்டில் வன்முறையும் குற்றங்களும் பெருகி வளர்கின்றன.
தங்கள் பிள்ளை நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற ஆசைப்படும் பெற்றோர், அவன் மனதளவில் எத்தனை சதவீதம் தூயவனாக, நல்லெண்ணங்கள் கொண்டவனாக இருக்கிறான் என்பதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. புற்றுநோயைத் தடுக்க எத்தனையோ மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், புரையோடிப் போன கல்விச் சீர்கேட்டினைத் தடுக்க என்ன மருந்து தரப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT