Published : 12 Oct 2014 12:50 PM
Last Updated : 12 Oct 2014 12:50 PM
அரசியல் தளம் சார்ந்து மட்டுமே அதிகம் அறியப்படும் அயோத்திதாசப் பண்டிதரின் (1845 - 1914) இலக்கிய ஈடுபாடு போதுமான அளவில் அறியப்பட்டதில்லை.
ஆனால் அவரின் சமூக அரசியல் பண்பாட்டுப் புரிதலுக்கும் பணிகளுக்கும் வேராக இருந்தவை இலக்கியப் பிரதிகளேயாகும். அவர் முதன்முதலாக அறிஞர் ஹென்றி ஆல்காட்டைச் சந்தித்து தாம் சார்ந்த ஒடுக்கப்பட்ட வகுப்பினர் பௌத்தர்களே என்று உரிமைகோருவதற்கான ஆதாரமாகக் கூறியது அஷ்வகோஷர் எழுதிய ‘நாரதிய புராண சங்கைத் தெளிவு’ என்கிற ஏட்டுப் பிரதியேயாகும். ஏடு வாசிக்கும் குடும்பப் பின்புலத்தைக் கொண்டிருப்பவராக இருந்ததால், ஏடுகளைத் தேடுகிறவராகவும் அவற்றைச் சான்றுகளாகக் கொண்டு விளக்கங்களை அளிப்பவராகவும் இருந்தார். ஏட்டு மரபும் அச்சு என்கிற நவீனமும் சந்தித்த காலகட்டத்தில் வாழ்ந்த அவர் நவீனமான முறையில் இதழ்களை நடத்தினார்.
அயோத்திதாசப் பண்டிதர் நடத்திய ‘தமிழன்’ இதழில் (1907 - 1914) அரசியல் சமூகப் பிரச்சினைகளைவிடப் பண்பாட்டு அம்சங்களை உள்ளீடாகக் கொண்ட இலக்கிய விளக்கங்கள், விவாதங்களுக்கு இடம்கொடுத்தார். அதன்வழி மாற்று இலக்கிய வரலாற்றை எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டினார். எதைப் பற்றி எழுதினாலும் ஒரு பாடலையோ வழக்காற்றையோ உதாரணம் காட்டாமல் அவரால் எழுத முடிந்ததில்லை.
இலக்கிய ஏடுகள் பலவும் அச்சுக்கு மாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்ததால் அச்சில் வெளியான பிரதிகளின் விடுபடல், திரிபு, பொருள் மயக்கம் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டிவந்தார். ஒரே கதைக்கு வழங்கிவரும் வெவ்வேறு வடிவங்கள் பற்றி அவர் அறிந்திருந்ததால் அவற்றில் அதிகாரபூர்வ அந்தஸ்து அளிக்கப்பட்ட பிரதி எதுவென்பதையும் அதற்கான அரசியலையும் அவர் கட்டுடைத்து எழுதிவந்தார்.
உதாரணமாக மேரு மந்திர புராணம் அச்சுக்கு வந்து புலமையுலகில் அறியப் பட்ட காலம் அது. சேலத்தைச் சேர்ந்த பி.சேஷகிரி ராவ் என்கிற வாசகர் அப்படி யொரு நூலுண்டா என்றும் கிடைக்குமிடம் குறித்தும் கேட்டுத் தமிழன் இதழுக்குக் கடிதம் எழுதுகிறார். உடனே அவ்வேட்டின் பதிப்பு விவரங்களை அயோத்திதாசர் வெளியிடுகிறார். தேதி 02.06.1909.
பதிப்புகள் தொடர்பான அதிருப்தி
பதிப்புச் சூழலில் நிலவிய குளறுபடிகள் குறித்தும், நவீன கண்ணோட்டத்தில் கட்டமைக்கப்பட்ட தமிழ் வரலாற்றியல் எழுத்து முறை குறித்தும் அவருக்குப் பெரும் அதிருப்தி இருந்தது. அன்றைய அதிகாரத் தேவைக்கு ஒத்துவராத சில ஏடுகள் கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக் கப்பட்டன. எனவே அவரே சில ஏடுகளை தமிழன் இதழில் வெளியிட்டார்.
உதயணன் கதை, பெருங்குறவஞ்சி, அகஸ்தியர் விவேகப்பத்து, யூகமுனி பாடல், வஜ்ஜீரசூசி, அகஸ்தியர் விவேக தச பாரதம், பரமபாரதம், அகஸ்தியர் சிவநரபாரதம், நாரை குறவஞ்சி, விபூதி விளக்கவொளி, அருங்கலைச்செப்பு, நிகழ்காலத் திரங்கல் போன்றவை. தனி நூல் வடிவில் பதிப்பிக்க வில்லையெனினும் அச்சுக்கு மாற்றிய காரணத்தால் இவற்றை அயோத்திதாசரின் பதிப்பு முயற்சிகள் என்று கூறலாம்.
பாட வேறுபாடுகள்
இவற்றில் பலவும் இன்றுவரை யாராலும் பதிப்பிக்கப்படாதவை. அதனாலேயே பலருக்கும் இந்நூல்களின் பெயர்கள்கூடத் தெரியவில்லை. இவற்றுள் பௌத்தம், தமிழிலக்கணம், வைத்தியம் தொடர்பான நூல்கள் அடங்கும். பலவேளைகளில் பிறர் அச்சில் வெளியிட்ட பிரதியின் பாடல்களுக்கும் அயோத்திதாசர் காட்டும் பிரதியின் பாடல்களுக்கும் வேறுபாடுகள் இருந்தன.
மணிமேகலையில் அயோத்திதாசர் காட்டும் பகுதிகள் இன்றைக்கு இல்லை. அதே போன்று அருங்கலச் செப்பு நூலிலிருந்து அறுபத்தைந்திலிருந்து எழுபது நூற்பாக்களைக் காட்டுகிறார். அந்த நூலில் 187 நூற்பாக்களே இப்போது கிடைக்கின்றன. ஆனால் இந்த 187 நூற்பாக்களில் அவர் காட்டும் நூற்பாக்கள் இல்லை என்கிறார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்.
அதேவேளையில் அயோத்திதாசர் தமிழன் இதழில் அச்சுக்கு மாற்றிய ஏடுகள்கூட முழுமையானவையாக இல்லை. கிடைத்த அளவுக்கு மட்டுமே வெளியிடப்பட்டன. 1910 தொடங்கி 1911 இறுதி வரை ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து வெளியிடப்பட்ட உதயணன் கதை முழுமையடையாமலேயே நின்றுபோனது.
அயோத்தியதாசப் பண்டிதர்
அயோத்திதாசர் உயிரோடு இருந்த வரையிலும் ‘தமிழன்’ இதழும், அயோத்திதாசர் எழுதிய 10 நூல்களும் மட்டுமே வெளியாகியிருந்தன. இக்காலத்துக்குப் பின்னரே உதயணன் கதையும், பெருங்கதையும் தமிழில் பதிப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தம் கையிருப்பில் இருந்த பெருங்கதையை 1924-ல் உவேசா பதிப்பித்தார். 1907-ம் ஆண்டு ‘தமிழன்’ இதழ் தொடங்கப்பட்ட போது சென்னை ஆதிமூலம் அச்சகத்தில் வாடகைக்கு அச்சிடப்பட்டது.
ஓராண்டு கழித்து அதில் சிக்கல் வந்தபோது கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் பௌத்த சங்கக் கிளையினர் நிதி மூலம் இதழுக்குச் சொந்த அச்சகம் வாங்கப்பட்டது. அயோத்திதாசரின் மறைவிற்குப் பின் அச்சகம் கோலாருக்குக் கொண்டு செல்லப்பட்டு வேறு சில மாறுதல்களோடு இதழ் மீண்டும் கொண்டு வரப்பட்டது.
புத்தகச் சாலை தொடங்கப்பட்டது
தொடர்ந்து நூல்களை வெளியிட சித்தார்த்தா புத்தக சாலை (சிபுசா) என்ற வெளியீட்டகத்தையும் ஆரம்பித்தனர். 1950 வரை இயங்கிய இப்பதிப்பகம் மூலம் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. யாவும் பௌத்தம் மற்றும் சாதி மறுப்பு நூல்களே. இக்காலத்தில் அயோத்திதாசர் எழுத்துகள் மட்டுமல்லாது தமிழன் இதழில் எழுதி வந்த அவரின் சக அறிவுக் குழாத்தினரின் எழுத்துகளும் நூலுருப்பெற்றன.
இந்த வரிசையில் தமிழன் இதழில் அயோத்திதாசர் வெளியிட்டுச் சென்ற ஏடுகளின் அச்சு வடிவம் முதன்முறையாக சிபுசா வெளியீட்டகத்தால் நூலாக்கம் பெற்றன. அத்தகையவற்றுள் உரையூர் காளங்கர் இயற்றிய நிகழ்காலத் திரங்கல், திருமுல்லையார் இயற்றிய பெருங்குறவஞ்சி ஆகிய நூல்கள் கிடைத்துள்ளன. இவ்விரண்டு நூல்களும் சிபுசா பதிப்பகத்தின் எட்டு மற்றும் ஒன்பதாம் நூல்களாகும். அதே போல இரண்டுமே பௌத்தச் சார்பு கொண்டவை.
“இது முற்றுங் கோர்வையுறாமல் வெகு சில பாடல்களே கிடைத்து அவைகளுமிடைமிடையே பாக்கள் குறைந்துமிருக்கின்றன. இந்நூல் முற்றும் பரிசோதித்தச்சிட வேறொரு பிரிதியைத் துருவியும் கைக்கு கிடைக்காததால் உள்ளவாறே அச்சிடப்பட்டுள்ளது. பூர்த்தியானதும் திருத்தமானதுமான வேறொரு யாதார்த்த பிரிதி யாவரிடத்திருந்தேனு முதவுவார்களாயின் அவர்கள் பெயரிலேயே மறுபதிப்பு பதித்து வெளிப்படுத்த சித்தமுள்ளவர் களாகயிருக்கின்றோம்” என்று நிகழ்காலத் திரங்கல் பதிப்புரை (1925) அமைந்துள்ளது.
இதே பொருளிலேயே பெருங்குறவஞ்சி பதிப்புரையும் (1925) கூறுகிறது. சி.பு.சா.வின் பதிப்புப் பார்வையைப் புரிந்துகொள்ள இதுவொரு சான்று. அதேவேளையில் இம்முயற்சியில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் கிட்டவில்லை என்றே தெரிகிறது. அதைவிட, சிபுசாவின் இத்தகைய பணிகள் நடந்தன என்பது பற்றிய நினைவுகள்கூட இன்றைய பதிப்பு வரலாற்றில் இல்லை என்பதை என்னென்று சொல்வது?
கட்டுரையாளர், விமர்சகர்,
தொடர்புக்கு: stalinrajangam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT