Published : 22 Sep 2018 10:05 AM
Last Updated : 22 Sep 2018 10:05 AM
கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் தொடங்கப்பட்ட ‘வாசிப்பு முற்றம்’, சமீபத்தில் நூறாவது அமர்வைக் கடந்திருக்கிறது. இதையொட்டி கவிஞர் புவியரசு, விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் உள்ளிட்ட ஆளுமைகள் முன்னிலையில் இந்த வாசிப்பு முற்றத்தால் உருப்பெற்ற மாணவ மாணவிகள் பேசினர். “இந்த வாசிப்பு முற்றத்துக்கு வரும் முன்பு எங்களில் பலர் மேடை ஏறவே பயந்தோம். வாசிப்பு என்பது பாடப்புத்தக வாசிப்பு மட்டுமே என்று கருதியிருந்தோம். ஆனால், இப்போது எங்களில் பலர் பேச்சாளர்கள், சினிமா கலைஞர்கள். எங்களில் 7 பேர் கவிதை, கட்டுரை நூல்களும் வெளியிட்டுவிட்டோம்!” என்று தங்களில் கண்ட மாற்றங்களை பேருவகையோடு பேசினர். அதன் உச்சமாக, “உங்கள் காலத்தில் நாங்கள் மாணவர்களாக இல்லையே. அரங்கின் அந்த மூலையில் அமர்ந்து இதைப் பார்த்து கை தட்டக் கொடுத்து வைக்கவில்லையே!” என்றார் கவிஞர் புவியரசு. இந்த நூறாவது வாசிப்பு முற்றத்திலும் இதை நடத்தும் மாணவர்கள் சும்மாயிருக்கவில்லை. மூன்று கவிதை நூல்களை வெளியிட்டதோடு, 100-வது வாசிப்பு முற்றம் பெயரில் அஞ்சல்தலை வெளியீட்டையும் நடத்தி அசத்தினர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் பின்பற்ற வேண்டிய முன்னுதாரண முன்னெடுப்பு இது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT