Published : 30 Sep 2018 01:55 AM
Last Updated : 30 Sep 2018 01:55 AM
‘இடைவெளி’ நாவல் எடிட்டிங் பணியில் தொடங்கிய எங்கள் நட்பு, அடுத்த சில மாதங்களில் மிகவும் இணக்கமான இலக்கிய உறவாகச் செழித்தது. எங்கள் இருவருக்கும் பிடித்தமானவர்களாக தஸ்தாயேவ்ஸ்கி, டி.எச்.லாரென்ஸ் இருந்தனர். இருவரையும் ஒரே நம்பிக்கைதான் நகர்த்திக்கொண்டிருப்பதாக உணரச்செய்தது. அவருடன் உரையாடுவது இதமாக இருந்தது. ‘இடைவெளி’ கையெழுத்துப் பிரதியை வரிவரியாகப் பார்த்தோம். திருத்தங்களின்போது கூடிவரும் அழகு அவருக்குக் குதூகலம் தந்தது. தகிக்கும் மனநிலையும் எளிதில் பரவசப்படும் குழந்தை மனநிலையும் அவரிடம் பிணைப்புற்றிருந்தன.
‘சாவு’ தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் கனவுப் பகுதியின்போது, “இதை நீயே பார்த்துக்கொள். இதை எழுதியபோது சாவு என்னைப் படுத்திய பாடு போதுமப்பா, காய்ச்சலில் விழுந்து தப்பித்திருக்கிறேன். இன்னொரு தடவை அதன் பிடியில் சிக்கிக்கொண்டால் அவ்வளவுதான். எனக்குப் பயமாயிருக்கு...” என்று எழுந்து உள்ளறைக்குள் போய்விட்டார். நான் திகைத்துப்போய் அமைதியாக இருந்தேன். சிறிது நேரம் கழித்து வந்து, “சரி, பார்க்கலாம்” என்றபடி உட்கார்ந்தார். ‘சாவு என்பது இடைவெளி’ என்று தினகரனுக்கு வசப்படும்போது கையைத் தரையில் குத்தி, “எவன் இதைச் சொல்லியிருக்கான். இதுக்கே நோபல் பரிசு தரணும்” என்றார். சதா தகிக்கும் உள்ளார்ந்த தீவிர மனநிலையும், நேசிக்கும் தன்மையிலான ஒருவிதப் பேதமையும் ஒன்றையொன்று மேவி அவரிடம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். அப்போது தொடங்கிய நட்பு, அடுத்த ஆறேழு மாதங்கள் – அதாவது, 1984 ஜூலை 26-ல் அவர் இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு வரை – தொடர்ந்தது.
1983 இறுதியில் என் குடும்பமும் சென்னை வந்தது. நண்பர் சச்சிதானந்தம் வீட்டு மாடியில் குடியமர்ந்தோம். ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் தயவில் அந்த மாடி இரண்டாகத் தடுக்கப்பட்டு ஒரு பகுதி எங்களுக்கான வீடாகவும், மற்றொரு பகுதி, க்ரியாவின் புத்தகக் கிடங்கு, அச்சுக் கோப்பகமாகவும் அமைக்கப்பட்டது. 1984 ஜூன் வாக்கில் ‘இடைவெளி’ அச்சு வேலை தொடங்கியபோது, சம்பத் ஒவ்வொருநாளும் மதிய வேளைகளில் எங்கள் வீட்டுக்கு வருவார். அச்சாகிய பக்கங்களைப் பார்ப்பார். அப்போதும்கூட ஒன்றிரண்டு வாக்கியங்களை இப்படி மாற்றலாமா என்று ஆர்வத்தோடு கேட்டிருக்கிறார். “அடுத்த பதிப்பில் பார்த்துக்கொள்ளலாம்” என்று சிரித்தபடி பதில் சொல்லியிருக்கிறேன். சென்னை வெயிலில் அவர் வந்தவுடன் செய்யும் முதல் காரியம், சட்டையைக் கழற்றிப்போடுவதுதான். சட்டை பாக்கெட்டில் எப்போதும் லாட்டரிச் சீட்டு இருக்கும். 10, 15 நாட்கள் வந்துகொண்டிருந்தவர், திடீரென்று பல நாட்கள் வரக்காணோம். ‘இடைவெளி’ அச்சு வேலை முடிந்து பைண்டிங்கில் இருந்தது. இச்சமயத்தில் ஒருநாள் காலை க்ரியாவில் பணியாற்றிய எழுத்தாளர் திலீப்குமார், “சம்பத் இறந்துவிட்டதாகத் தகவல்” என்று தயக்கத்துடன் கூறினார். அத்தகவல் தெரியவந்தபோதே அவர் இறந்து 15, 20 நாட்களாகிவிட்டன. நான் அன்றே சம்பத் வீடு சென்று அவருடைய துணைவியாரைச் சந்தித்தேன். மறுநாளே அவர் பற்றிய ஒரு குறிப்பு எழுதிப் புத்தகத்தில் சேர்த்தோம்.
புத்தகத்தின் அச்சான பக்கங்களை மட்டும்தான் சம்பத் பார்த்திருந்தார். புத்தகம் பைண்டிங்கில் சில நாட்கள் முடங்கிக் கிடந்தபோதுதான் அவர் மரணம் நிகழ்ந்துவிட்டிருந்தது. சாவு என்னும் அடிப்படைப் பிரச்சினையில் உழன்று அதன் அடிப்படைத் தன்மையைக் கண்டறிய விழையும் முழுமுற்றான புனைவுப் பயணம் ‘இடைவெளி’ நாவல். எனினும், அதற்கு முன்னரே சாவை மையப் பிரச்சினையாகக் கொண்ட, ‘சாமியார் ஜூவுக்குப் போகிறார்’, ‘கோடுகள்’, ‘இடைவெளி’ போன்ற அருமையான சிறுகதைகளையும் சம்பத் படைத்திருக்கிறார். ‘இடைவெளியென இருப்பதாலேயே எவராலும் வெல்லப்பட முடியாத சாவு’ திடீரென ஏற்பட்ட மூளை ரத்தநாளச் சேதம் மூலம் 42-வது வயதில் சம்பத்தின் உயிரை அபகரித்தது.
1941 திருச்சியில் பிறந்த சம்பத், வளர்ந்ததும் படித்ததும் டெல்லியில். டெல்லி ரயில்வேயில் உயரதிகாரியாகப் பணியாற்றிய அவருடைய தந்தை பணி ஓய்வுபெற்று சென்னை திரும்பியபோது சம்பத்தும் தன் குடும்பத்துடன் சென்னை வந்தார். எம்.ஏ. (பொருளாதாரம்) பி.எட். படித்திருந்த சம்பத், சென்னை வாழ்வின் தொடக்கத்தில் ஆய்வு நிறுவனங்களிலும் சில தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றினார். கடைசி சில ஆண்டுகள், படைப்பாளியிடம் அவனுடைய முழு நேரத்தையும் கேட்டு நிற்கும் எழுத்தின் குரலுக்குக் கட்டுப்பட்டு முழுநேரப் படைப்பாளியாகச் செயல்பட முடிவெடுத்தார். இத்தகைய முடிவு தமிழ்ச் சூழலில் அளிக்கும் மோசமான நெருக்கடிகளையும் அவஸ்தைகளையும் குடும்ப, சமூக, எழுத்துலகப் பின்புலங்களில் அனுபவித்தார். ஒருகட்டத்தில் வணிக இதழ்களில் எழுதிப் பணம் பார்த்துவிடுவது என்றுகூடப் பிரயாசைப்பட்டிருக்கிறார். அவருடைய நண்பர் ஐராவதமுடன் இணைந்து வெகுஜனக் கதைகளை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு ஜனரஞ்சமாக எழுத வராது என்பதால், அவர் கதைகளைச் சொல்வதென்றும் ஐராவதம் எழுதுவதென்றும் முடிவெடுத்து எழுதி அனுப்பியிருக்கிறார்கள். எதுவும் பிரசுரமாகவில்லை.
தன் படைப்பூக்கம், மேதமையின் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தவர் சம்பத். பணத்தின் மதிப்பை மையமாகக் கொண்டு ஆயிரம் பக்க பெரும் நாவலொன்றை எழுதவிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இடையில் எழுதிய சில படைப்புகளை ஏதோ ஒரு மன அவசத்தில் எரிக்கவும் செய்திருக்கிறார்.
நவீனத் தமிழ் இலக்கிய மேதையான புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பின் சுழன்றுவிட்ட 70 ஆண்டுகளில் புனைவும் மேதமையும் முயங்கிய படைப்பாளிகளில் எஸ்.சம்பத் மிக முக்கியமானவர். அதிர்வலைகள் எழுப்பும் ஆழமான குரலும் உள்ளார்ந்த மெளனமும் உறைந்திருக்கும் படைப்புலகம் இவர்களுடையது. இருவரையுமே மரணம் நடுத்தர வயதில் சுருட்டிக்கொண்டுவிட்டது. புதுமைப்பித்தன் இன்று ஒரு பெயராக நிலைத்துவிட்டிருக்கிறார். இதில் நாம் ஆறுதல் கொள்வதற்கான எவ்வித முகாந்திரங்களும் சூழலில் இல்லை. ஏனெனில், புதுமைப்பித்தன் என்ற பெயரில் பொதிந்திருக்கும் இலக்கிய தார்மீகங்கள் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை. சம்பத் எதிர்கொண்ட நெருக்கடிகளையும், அவருடைய மரணச்செய்தி வெளிப்படவே பல நாட்கள் ஆனதையும், தன் வாழ்நாளில் அவருடைய ஒரு புத்தகம்கூட வெளிவராமல் போனதையும் நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. பண்பட்ட எந்தவொரு மொழிச் சூழலிலும் இத்தகைய அவல அனுபவங்கள் ஒரு படைப்பு மேதைக்கு நிகழ்ந்திருக்குமா?
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT