Last Updated : 16 Sep, 2018 11:58 AM

 

Published : 16 Sep 2018 11:58 AM
Last Updated : 16 Sep 2018 11:58 AM

தி.ஜானகிராமன் ‘தன்மறதி’ எனும் கலைக் கோட்பாடு

நவீன இலக்கியம் நம் வாழ்வுக்கான மாறுபட்ட சாத்தியங்களைக் கண்டடையும் பேராற்றல்மிக்க ஒரு சக்தி. இலக்கியம் அடிப்படையில் புனைவின் ஆற்றலில்தான் ஒளிர்கிறது. இந்த உலகம் என்னவாக இருக்கிறது என்பதிலிருந்து உருக்கொள்ளும் ஒரு படைப்பு, அதன் புனைவுப் பயணத்தில் சாத்தியமான உலகம் பற்றிய கனவுவெளிக்குள் பிரவேசிக்கிறது. படைப்பாளியும் படைப்பும் பரஸ்பரம் முயங்கித் திளைக்கும் படைப்பாக்கப் பயணத்தில் வெகு இயல்பாகக் கூடிவரும் அம்சம் இது.

இதன்மூலம்தான் கலை தன் உத்தேசத்தை நிறைவேற்றிக்கொள்கிறது. வாழ்வின் அடிப்படையான அகவய யதார்த்தமும் சுதந்திரமும் மனிதனிடமிருந்து பிடுங்கப்பட்டு, பாதைகள் களவாடப்பட்டு, ஒரு ஒடுங்கிய வட்டத்துக்குள் சிக்குண்டிருக்கும் மனிதனுக்குப் புதிய சாத்தியங்களை விரிக்கிறது இலக்கியம். அதிலும் குறிப்பாக, நாவல் கலை தனி மனிதனின் முழுமையை அகப்படுத்தும் சக்தி கொண்டதாக இருப்பதால், அது கண்டடையும் சாத்தியங்கள் ஸ்தூலமாக வெளிப்படுகின்றன. இனி, தி.ஜானகிராமனின் மிகச் சிறந்த படைப்பான ‘மோகமுள்’ நாவல் கண்டடைந்திருக்கும் மாறுபட்ட சாத்தியம் பற்றி அவதானிக்கலாம்.

தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ தமிழின் முதல் நவீன செவ்வியல் நாவல். நவீன வாழ்வும் செவ்வியல் படைப்பு நெறிகளும் அபாரமாகக் கூடி முயங்கியது. நாவலின் நாயகன் பாபு, கும்பகோணத்தில் தனியறை எடுத்துக் கல்லூரியில் பி.ஏ. படித்துவருகிறான். ஊர், பாபநாசம். அப்பா வைத்தி, கோயிலில் கதாகாலட்சேபம் செய்பவர். பாபுவை இசைக் கலைஞனாக்கும் ஆசையோடு இருப்பவர்.

அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் கனவு பாபுவிடம் குடியிருக்கிறது. கல்லூரித் தோழன் ராஜம் மூலமாக, கர்னாடக இசையைத் தவமாகக் கொண்டு வாழும் இசை மேதையான ரங்கண்ணாவிடம் சேர்ந்து இசை பயில்கிறான். அதேசமயம், அப்பாவின் குடும்ப நண்பரான சுப்ரமணியின் இரண்டாம் மனைவி பார்வதி (மராத்திப் பெண்மணி) கும்பகோணத்தில் வசிக்கிறார். அவர்கள் வீட்டுக்கு அவ்வப்போது செல்லும் பாபு, பார்வதியின் ஒரே மகளான யமுனாவின்மீது அதீதக் காதல் வயப்படுகிறான். பாபுவைவிட யமுனா பத்து வயது மூத்தவள். முதிர்கன்னி. யமுனா அவன் காதலை மறுக்கிறாள்.

இச்சூழ்நிலையில் பாபுவின் கல்லூரிப் படிப்பு முடிகிறது. ரங்கண்ணா மரணமடைகிறார். உற்ற சிநேகிதன் ராஜம் மேற்படிப்புக்காக டெல்லி செல்கிறான். சூழலின் வெக்கையிலிருந்து விடுபட மாறுதல் வேண்டி பாபு சென்னை செல்கிறான். அங்கு இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. அதேசமயம், யமுனாவின் மீதான காதல் வேட்கை அவனுள் அணையாது சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையே பார்வதியின் கணவர் சுப்ரமணியின் மரணத்தையடுத்து, எவ்வித ஆதரவும் பராமரிப்புமின்றி யமுனாவின் குடும்பம் நலிந்து வறுமையில் உழல்கிறது. இக்காலகட்டத்தில் அம்மாவுடன் ஏற்பட்ட கடுமையான தார்மீகப் பிணக்கினால் நிராதரவான யமுனா, பாபுவை நாடி சென்னை வருகிறாள். பாபுவுடன் இருக்கும் சில தினங்களில் ஒருநாள் ஒரு நெருக்கடியான தருணத்தில் அவன் காதலை ஏற்றுத் தன்னை அவனுக்கு உவந்தளிக்கிறாள். பாபுவைத் தன் வாழ்வுக்கான நம்பிக்கைச் சுடராக ஏந்தியபடி ஊர் திரும்புகிறாள். இந்நாவலின் மைய நீரோட்டமான பாபு-யமுனா காதலின் பூரண மலர்ச்சியோடு நாவல் முடிவதில்லை. பாபு இசைமீது கொண்ட தீராக் காதல் மேலெழுகிறது.

ரங்கண்ணாவின் சீடரான பாலூர் ராமு, சென்னையில் பாபுவைச் சந்திக்க நேரும்போது அவனை இசைக் கச்சேரி செய்ய வற்புறுத்துகிறார். பாபு அதை ஏற்க மறுக்கிறான். அதேசமயம், இசை வாழ்க்கையைத் தவமென மேற்கொள்ள அவன் மனம் விழைகிறது. கும்பகோணம் கோயிலில் அவன் கேட்டுப் பிரமித்த மராட்டியப் பாடகரின் இந்துஸ்தானி இசையின் பிரபஞ்சவெளி அவனை அழைக்கிறது.

அவருடைய குரல் வளமும் இசை ஞானமும் அவன் அடைய விரும்பும் லட்சிய இசை உலகமாக இருக்கிறது. யமுனா தரும் உத்வேகத்தோடும் நம்பிக்கையோடும் மராட்டியப் பாடகரிடம் இசை பயில பாபு மகாராஷ்டிரா செல்வதோடு நாவல் முடிகிறது. நாவல் கண்டடையும் மகத்தான சாத்தியமிது. பொதுவிலிருந்தும் சராசரியிலிருந்தும் விலகி, படைப்பு தன் உத்தேசத்தை நிறைவேற்றிக்கொள்ளும் அடிப்படை அம்சமிது.

‘தன்மறதி’ என்பதுதான் ஜானகிராமனின் அடிப்படைக் கலைக் கோட்பாடு. இந்த வார்த்தை அவருடைய படைப்புகளில் திரும்பத் திரும்ப வருகிறது. புணர்ச்சிக் களிப்பின்போதும், மகோன்னதமான இசையில் திளைக்கும்போதும், தன்னை முழு முற்றாக ஒப்புக்கொடுத்துவிட வைக்கும் எந்த ஒரு அனுபவத்தின்போதும் நிகழ்வது ‘தன்மறதி’. அது லயிப்பின் உச்ச அனுபவ நிலை. ஜானகிராமனின் நாவல் உலகில் கலைகள் விஸ்தாரமாக இடம்பெறுகின்றன.

‘மோகமுள்’ளிலும் ‘மரப்பசு’விலும் இசை; ‘உயிர்த்தேனி’ல் சிற்பக்கலை; ‘மலர் மஞ்ச’த்தில் நாட்டியம் என கலைகள் முக்கிய அம்சங்களாகி இருக்கின்றன. இக்கலைகளின் சிறப்புகள் அனைத்தும் ‘தன்மறதி’ என்ற லயிப்புக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே பேசப்படுகின்றன. நவீனத்தின் அடிப்படைக் கலைக் கோட்பாடான ‘அந்நியமாதல்’ என்பதற்கு எதிர்நிலையிலான செவ்வியல் கலைக் கோட்பாடு ‘தன்மறதி’. எழுத்துரீதியான கதையாடலில் ‘தன்மறதி’யை நிகழ்த்திவிடும் அற்புதத் தன்மையில்தான் வெகுமக்களின் லயிப்பை இவர் படைப்புலகம் பெற்றுவிடுகிறது.

இசையின் அல்லது இசை அனுபவத்தின் தன்மையில் அமையும் படைப்புலகம் இவருடையது. ‘ஒரு எண்ணம், ஒரு சங்கதி, ஒரு பிடி’ எனத் திளைக்கும் சஞ்சாரத்தில் அவருடைய சிறுகதைகள் அமைகின்றன என்றால், பல எண்ணங்கள், சங்கதிகள், பிடிகள் எனத் திளைக்கும் விஸ்தாரத்தில் அவருடைய நாவல்கள் அமைகின்றன. இத்தன்மையை எழுத்தில் சாத்தியமாக்குவது, நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் அவருடைய அபார வித்தகம்தான்.

ஜானகிராமனின் படைப்புகள் சம்பவங்களாலும் நினைவோட்டங்களாலும் உரையாடல்களாலும் கட்டமைக்கப்படுபவை. படைப்பில் காலமானது ஓரிரு வரிகளிலோ, அத்தியாயப் பிரிவிலோ, பாகங்களின் பிரிவிலோ நகர்ந்துகொண்டிருக்க, நிகழ்வுகளின் ஊடுபாவலில் படைப்பு உருக்கொள்கிறது. நிகழ்வுகளைத் துல்லியமான காட்சிகளாகச் சித்தரிக்கும் அலாதியான நுட்பம் இவருடையது.

நிகழ்வின் இடப் பின்புலம், அந்நேரத்திய வெளிச்சம், சப்தம், வாசம், அதில் இடம்பெறும் பாத்திரங்களின் தோற்றம் என எல்லாமே ஓர் இசைமையில் உருத்திரண்டு நிகழ்வு சலனிக்கும் காட்சியாக உயிர் கொண்டுவிடுகிறது. அக்காட்சியில் நிகழும் பாத்திர உரையாடல்களில் ஒரு காந்தம் மாயப் பூச்செனப் படர்கிறது. வாசிக்கும் எந்த ஒரு இதயத்தையும் அது தன்னில் லயிக்கச் செய்கிறது.

ஜானகிராமன் ‘தன்மறதி’யின் லயிப்போடு மாய்ந்து மாய்ந்து, வியந்து வியந்து எழுதிச்செல்கிறார். இந்த வியப்பிலிருந்தும் லயிப்பிலிருந்தும் தமிழ்ப் புனைவுலகுக்குச் சில அபூர்வங்கள் கிடைத்திருக்கின்றன. ஜானகிராமனின் படைப்புலகைக் கட்டமைத்தது நவீனத்துவமல்ல.

மாறாக, நவீன செவ்வியலின் புத்தெழுச்சித் தன்மை. இன்றைய இளம் படைப்பாளிகளும் வாசகர்களும் ஜானகிராமன் நமக்கு அளித்திருக்கும் பொக்கிஷங்களின் பலன்களை இழந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நம் மரபின் வளங்களிலிருந்து பெற்றுக்கொள்வதன்மூலம்தான் ஒரு படைப்பாளி தன்னுடைய தனித்துவங்களைக் கண்டடையவும் தன்னுடைய பிரத்தியேக அடையாளங்களைப் பதிக்கவும் முடியும்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x