Last Updated : 09 Sep, 2018 09:45 AM

 

Published : 09 Sep 2018 09:45 AM
Last Updated : 09 Sep 2018 09:45 AM

தி.ஜானகிராமன்: புனைவுலகின் கனவுகள்

ஜானகிராமன் வாழ்ந்த காலம்தான் (1921-1982) அவர் படைப்புலகின் காலப் பின்னணி. அதாவது, இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான காலம். அவர் வாழ்ந்து வளர்ந்த தஞ்சைப் பகுதியும், ஆரம்பகாலத்தில் பணியிடமாக இருந்த சென்னையும்தான் இடப் பின்புலம். இக்காலத்திய மனித இருப்புகளின் நெருக்கடிகள் சார்ந்த புனைவுலகம் அவருடையது. அதாவது, சமூக மதிப்புகளிலும் கலாச்சார மதிப்புகளிலும் நிகழ்ந்த மாற்றங்கள், குடும்ப அமைப்பிலும் உறவுகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள், ஆண்-பெண் உறவுகளுக்கிடையிலான சிடுக்குகள் என நவீனத் தொழில்முறை அமைப்பின் வளர்ச்சியில் நிலவுடைமைச் சமுதாயம் சிதைவுறத் தொடங்கியதன் தொடர்ச்சியாக விளைந்த மாற்றங்களை அவருடைய படைப்புலகம் எதிர்கொள்கிறது. இவற்றினூடாக, மனிதகுல மீட்சிக்கான இரு கனவுகளை இவருடைய படைப்புலகம் சுடரும் திரிகளாகக் கொண்டிருக்கிறது. ஒன்று, மனிதர்கள் பசியற்று வாழ வேண்டும்; இரண்டாவது, தூய அன்பின் பிணைப்பில் மனித இனம் செழிப்புற வேண்டும்.

தமிழில் அதிக அளவிலும் அதேசமயம் மிகச் சிறப்பாகவும் எழுதிய படைப்பாளிகளில் முதன்மையானவர் தி.ஜானகிராமன். அவருடைய ஏழு நாவல்களில் முதலாவதும் மகத்தானதுமான ‘மோகமுள்’ நாவலிலேயே அவரது கனவுகள் உருக்கொண்டுவிட்டன. ‘மோகமுள்’ளுக்குப் பின் வந்த நாவல்களில் இக்கனவுகள் இன்னும் ஆழமாக உள்ளுறைந்திருக்கின்றன. ‘உயிர்த்தேன்’ நாவலில் முழு வடிவம் பெற்றிருக்கின்றன. ‘உயிர்த்தேன்’ நாவலை தி.ஜா.வின் படைப்புலகின் லட்சிய மாதிரியாகக் கொள்ளலாம். மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாகவும், தி.ஜா.வின் மிகச் சிறந்த படைப்பாகவும் அசோகமித்திரன் தொடர்ந்து இந்நாவலைக் குறிப்பிட்டுவந்திருக்கிறார். எனினும், ‘மோகமுள்’ அவருடைய புனைகனவுகளின் விஸ்தார சஞ்சாரம் என்பதில் சந்தேகமில்லை. ‘மோகமுள்’ நாவலில் யமுனா, வறுமையின் அசுரப் பிடியில் சிக்குண்டு பல இன்னல்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, பசி பற்றி இவ்வாறு சொல்கிறாள்: “பசியில்லாம இருக்கணும். பசி இருந்தா மனசு நாயாய்ப் போகிறது. கோபமும் பொறாமையும் எரிகிறது. பொல்லாத நினைவெல்லாம் வருது. பசியில்லாம இருந்தா போதும்... எனக்கு யார்கிட்டயும் கோபம் கிடையாது, இந்த உலகத்துல. பசி ஒண்ணுகிட்ட தவிர. பெரிய பீடை. இருக்கிற இடமே விடியாது. மனுஷனை அல்பத்தனம், விவஸ்தை கெட்ட துணிச்சல் எல்லாத்திலும் கொண்டு இறக்கிவிடும்.”

‘அம்மா வந்தாள்’ நாவல் இறுதியில் வேத பாடசாலையை அன்னசத்திரமாக மாற்ற பவானி அம்மாள் முடிவெடுக்கிறார். அப்போது அவர் அப்புவிடம், “பசிதான் ஸ்வாமி. அதுக்கு நைவேத்யம் பண்ணினா போதும்” என்கிறார். ‘மரப்பசு’வில் அம்மணி, ரயில் பயணத்தின்போது சந்திக்கும், கடவுள் நம்பிக்கையை வலியுறுத்திப் பேசும் ஆங்கிலேயர் பென்னட்டிடம், எல்லோரும் பசியாறி இருக்கும் மார்க்ஸ் சொன்ன ராம ராஜ்யம் வர வேண்டுமென வாதிடுகிறாள். ‘உயிர்த்தேன்’ நாவலின் தொடக்கத்தில் ஆறுகட்டி கிராம வயல்கள் வறண்டு கிடக்கும்போது ஊர் மக்களின் மனோபாவங்களும் வறட்சியால் பீடிக்கப்பட்டிருக்கின்றன. செங்கம்மாவின் ஆலோசனையின்படி, பூவராகன் ஊர்ப் பொதுவுக்கும் விவசாயத்தை மேற்கொண்டதன் தொடர்ச்சியாக ஊர் செழிக்கும்போது மக்களின் மனோபாவங்களும் செழுமையடைகின்றன. பசியற்ற வாழ்வின் அருமை குறித்த தி.ஜா.வின் கனவு வெகு இயல்பாக இந்நாவலில் உயிர் கொண்டிருக்கிறது.

ஜானகிராமனின் மற்றொரு மகத்தான கனவு, அன்பு வேட்கை. அவருடைய படைப்புலகம் அன்பு எனும் நித்திய மதிப்பைப் பெரும் கனவாகக் கொண்டது. அவருடைய புனைவுலகம் பெரிதும் அன்பால் இயக்கம் பெறுவது. சுதந்திரமான, உடமைப்படுத்தாத, உடமையாகாத அனைவரையும் தொட்டுத் தழுவி அரவணைக்கும் பேரன்பால் இயங்கும் உலகம். தி.ஜா.வின் கனவாக அவர் நாவல் உலகில் அன்பின் சுடர் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. பொதுவாகவே, தி.ஜா.வின் பாத்திரங்கள் அன்பானவர்கள்தான். அதிலும் பெண்கள் பேரன்பும் பேரழகும் சூடியவர்கள். தி.ஜா.வின் கண்களால் நாம் பார்க்கும்போது அவர்களுடைய பேரழகையும், அவருடைய மனதால் ஸ்பரிசிக்கும்போது அவர்களுடைய பேரன்பையும் உணர்கிறோம். ‘உயிர்த்தேன்’ அனுசூயாவும், ‘மரப்பசு’ அம்மணியும் இந்தப் பேரன்பின் வேட்கையுடன் உலகைப் பரவசத்துடன் தழுவிக்கொள்கிறார்கள். தமிழ் வாழ்வுக்கு, குறிப்பாகப் பெண்கள் வாழ்வுக்கு, தமிழ்ப் புனைவில் புதிய சாத்தியமொன்று புலப்பட்டிருக்கிறது. ‘மோகமுள்’ளிலிருந்தே பெண்கள் பேரழகும் பேரன்பும் சூடிய சுடர்களாகப் பொலிகிறார்கள் என்றாலும், அந்நாவலில் யமுனா அவளுடைய குடும்பப் பின்னணி காரணமாக வேதனைக்கு ஆளாகிறாள். வறுமையில் வாடி வதங்குகிறாள். தப்பும் தவறுமான இணைமுடிச்சு காரணமாக தங்கம்மாள் தற்கொலை செய்துகொள்கிறாள். பெண்கள் இத்தகைய சங்கடங்களுக்கு ஆளாவதில் தி.ஜா.வுக்கு விருப்பமில்லை. பின்னர் வந்த நாவல்களில் பெண்கள் கம்பீரமாகவும் குதூகலமாகவும் இருப்பதோடு, தாமிருக்கும் இடத்தையும் சூழலையும் ஒளிமயமாக்குகிறார்கள். ஆண்கள்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ‘உயிர்த்தேன்’ பழனி; ‘அம்மா வந்தாள்’ சேஷராமன்; ‘அன்பே ஆரமுதே’ ரங்கன்.

‘அம்மா வந்தாள்’ அலங்காரத்தம்மாள், மணமாகி ஆறு குழந்தைகள் பெற்றவர். கணவனுடன் வாழ்ந்து முதல் மூன்று குழந்தைகள், காதலின் பேறாக அடுத்த மூன்று குழந்தைகள் என ஆறு குழந்தைகள் பெற்ற பின்னரும், மூத்த மகனுக்குத் திருமணமாகி மருமகள் வீட்டிலிருக்கும் நிலையிலும் தன் காதலனுடன் அம்மாவால் வெகு சகஜமாக வீட்டிலேயே உறவாட முடிகிறது. எவ்வித சங்கடமும் இல்லை. மாறாக, அலங்காரத்தம்மாள் எங்கும் எப்போதும் கம்பீரமாகவே இருக்கிறார். சுதந்திரமான பாலியல் வேட்கையுடன் மனித உறவுகளைக் கொண்டாடும் ‘உயிர்த்தேன்’ அனுசூயாவுக்கும், ‘மரப்பசு’ அம்மணிக்கும் பிற பெண்களோடும் உறவுகள் அற்புதமாக அமைந்துவிடுகின்றன. பெண்களுக்கு இடையே அமையும் உறவுகளில் அலாதியான இசைமை கூடிவருகிறது. ‘உயிர்த்தேன்’-ல் அனுசூயா, செங்கமலம், ரங்கநாயகி ஆகியோருக்கிடையே நிலவும் அனுசரணையான, அலாதியான, லட்சியபூர்வமான உறவுநிலையில் கவித்துவம் கூடியிருக்கிறது. இதுபோன்றே ‘மரப்பசு’வில் அம்மணிக்கும் மரகதத்துக்கும் இடையே அற்புதமான உறவு அமைந்திருக்கிறது. ‘மோகமுள்’ இந்துவுக்கு நேர்ந்ததைப் போல அல்லாமல் ‘உயிர்த்தேன்’ செங்கமலத்துக்கும், ‘மரப்பசு’ மரகதத்துக்கும் இணக்கமான கணவர்கள் அமைந்துவிடுகிறார்கள்.

‘மரப்பசு’வில் கோபால் காணும் ஒரு கனவில் வெளிப்படுவது ஜானகிராமனின் புனைகனவன்றி வேறில்லை. கோபால் கண்ட அக்கனவின் மூலம் நாம் அறிவது, உடமைப்படுத்திக்கொள்ள விழையாத அன்புறவில் பூமியே அன்புமயமாகிவிடுகிறது.

தன் காலம் என்னவாக இருக்கிறது என்ற புரிதலிலிருந்தும் பரிசீலனையிலிருந்தும் உருவாகும் ஒரு படைப்பு, அதன் புனைவுப் பயணத்தில் அது எப்படியாக இருக்க வேண்டும் என்ற கனவு வெளிக்குள் பிரவேசிக்கிறது. யதார்த்தப் புனைவெளியினூடாக மலர்ந்து விரியும் கனவுவெளிதான் ஜானகிராமனின் படைப்புகள். அந்தக் கனவுவெளியில் நம் வாழ்வுக்கான, ஒருபோதும் வற்றாத ஓர் இன்ப ஊற்று சுரந்துகொண்டிருக்கிறது.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x