Published : 13 Sep 2018 09:00 AM
Last Updated : 13 Sep 2018 09:00 AM
அறிஞர் அண்ணா
"மேரி கரோலியின் ‘த மாஸ்டர் கிறிஸ்டியன்' என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்குள் படித்து முடித்துவிடுவேன். பிறகு நான் இறந்தாலும் கவலையில்லை. அறுவை சிகிச்சையை நாளை மறுநாள் வைத்துக்கொள்ளலாமா?" என்று மருத்துவரிடம் கேட்ட அறிஞர்களின் அறிஞரான அண்ணாவை மரணம் இரக்கமின்றி அழைத்துக்கொண்டது. அபூர்வமான மனிதரென்றாலும், ஆற்றல்மிக்க தலைவரென்றாலும் மரணம் மனம் இரங்கிவிடுமா என்ன?
புத்தகங்களின் காதலர்
"பத்தாயிரம் ஜீவானந்தங்கள் நமது இயக்கத்தை விட்டுப் போனாலும், முப்பதினாயிரம் முத்துச்சாமி வல்லத்தரசுகள் நம்மைவிட்டு விலகினாலும், பல்லாயிரம் நீலாவதி ராமசுப்ரமணியம்கள் நீங்கினாலும், நமது இயக்கத்தைக் கட்டிக் காக்க, அறிவாற்றல்மிக்க ஓர் அண்ணாதுரை போதும்" என்று பட்டுக்கோட்டை அழகிரி நம்பிக்கை வைத்த அண்ணாவையே மரணம் இயக்கத்தைவிட்டு பிரித்துக் கொண்டது.
பேச்சும் புகையிலையும் தின்று தீர்த்த தொண்டைக் குழியை மிச்சமில்லாமல் எடுத்துக்கொள்ள புற்றுநோய் வந்தது. நோயை குணமாக்க அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்று மருத்துவர்கள் சொன்னவுடன், பயணத்தில் படிக்க ஆங்கில, தமிழ்ப் புத்தகங்களைப் பட்டியலிட்டுச் சேகரித்தார். வாழ்வா, மரணமா என்று தெரியாத நிலையில், வாழும்வரை வாசிப்பும் பேச்சும் என்றிருந்த அறிஞர்.
அடுக்குமொழிக்கோர் அண்ணா
வெற்றிலைக் காவியேறிய பற்கள், விரிந்த முகம், பரந்த நெற்றி, நறுக்கு மீசை, அரைமணிக்கொருமுறை பொடி போட்டுக்கொண்டு, ஒளிரும் கண்களும் புன்னகை தவழும் முகமுமாக இருந்த அந்தக் குள்ள உருவமே, முப்பதாண்டு காலம் தமிழகத்தின் வசீகர உருவமாக இருந்தது. தமிழகத்தையே தம்பிமார்களின் நாடாக்கியவர். தன்னைவிட வயதில் மூத்தவர்களுக்கும் அண்ணாவானார். தலைவருக்குரிய அன்பும், தொண்டருக்குரிய வேகமும், ஆட்சியாளருக்குரிய விவேகமும் சீர்திருத்தவாதிக்குரிய தீர்க்கமும் இருந்ததால்தான் அண்ணா, இன்றுவரை தமிழகத்தின் மந்திரச்சொல்லாக இருக்கிறார்.
படிப்பில் முதல் மாணவர்
‘தொண்டை நாடு சான்றோருடைத்து' என்ற பெயரை எத்தனையோ கலைஞர்கள் விளங்கச் செய்தார்கள். அண்ணாவே காஞ்சித் தலைவனானார். நடுத்தரக் குடும்ப
மொன்றில் பிறந்த அண்ணா, படிப்பில் முதல் மாணவர். குடும்பத்தின் சூழல்களைக் கடந்து பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் பொருளாதாரம் படித்த அண்ணா, படிக்கும் காலத்திலேயே தமிழிலும் ஆங்கிலத்திலும் மேடைப்பேச்சில் தேர்ந்தவர். சென்னையில் உள்ள மிகப்பெரிய நூலகங்களில் அண்ணா படிக்காத புத்தகங்களே இல்லையென்று சொல்லும் அளவுக்கு நூலகங்களிலேயே குடியிருந்தார்.
பெரியாரின் மாணவர்
திருப்பூரில் நடந்த செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதல்முறையாக பெரியாரைச் சந்திக்கிறார். அண்ணாவின் பேச்சாற்றலில் வியந்த பெரியார், அண்ணாவைத் தன்னுடனேயே வைத்துக்கொள்ள விரும்பி, ‘குடியரசு’ இதழின் துணை ஆசிரியராக்கினார். பெரியாரின் வடநாட்டுச் சுற்றுப் பயணத்தின்போது அண்ணாவே அவரின் ஆங்கில மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, வர்ணாசிரம ஒழிப்பு போன்ற கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் முழங்கிக் கொண்டிருந்தனர். குலக் கல்வி முறையையும், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கவும் காங்கிரஸ் அரசு முயற்சித்தபோது, பெரியாரின் தளபதியாக நின்று சூறாவளியாகச் செயல்பட்டவர் அண்ணா.
சேலம் மாநாட்டில் நீதிக் கட்சியின் பெயரை திராவிடர் கழகமாக மாற்ற வேண்டும் என்று அண்ணா கொண்டு வந்த தீர்மானத்தின்மேல் 35 மணிநேரம் நீண்ட விவாதம் நடந்து, பின் ஏற்கப்பட்டது. திராவிடர் கழகம் உருவானது.
காட்டாற்று வெள்ளத்தின் மதகு
"இயக்கத்தில் உள்ள எல்லோரும் கருப்புச் சட்டை அணிய வேண்டும், எல்லா நேரமும் அணிய வேண்டும்" என்றும், "இந்தியாவின் விடுதலை தினத்தை துக்க தினமாகவும்" அறிவித்த பெரியாரின் நிலைப்பாட்டில் அண்ணாவுக்கு உடன்பாடில்லை. தந்தைக்கும் மகனுக்குமிடையிலான ஊடலாகவே இருந்தன அம்முரண்பாடுகள். "கழகத்தின் பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுத்துவிட்டேன்" என்று பெரியாரும், "சாவி என்னிடமிருந்தாலும், பெட்டி பெரியாரிடம்தான் இருக்கும்" என்று அண்ணாவும் அவரவர் அன்பைக் காட்டினார்கள். பெரியார் என்ற காட்டாற்று வெள்ளத்தின் மதகாக இருந்தவர் அண்ணா.
பெரியார் - மணியம்மை திருமணத்தைக் காரணம் காட்டி, அதுவரை இருந்த முரண்பாடுகளெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு, திராவிடர் கழகம் இரண்டாகப் பிரிய வழிவகுத்தது. திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. "எங்களின் தலைவர் பெரியார்தான், அவருக்காகத் தலைவர் பதவி காலியாகவே இருக்கும்" என்று அறிவித்தார்.
சமூகச் சீர்திருத்தம் ஒன்றே அண்ணாவின் கொள்கை. சமூகம் ஒளியிழந்து கிடப்பதற்கான காரணங்கள் அத்தனையையும் போக்க, அண்ணா அவரறிந்த கலைகள் அத்தனையிலும் முயன்றார். ஒலிபெருக்கியும் மின்சாரமும் இல்லாத இடங்களிலும்கூட உரத்தக் குரலில் மேடைகள் தோறும் பகுத்தறிவை விதைத்தார். சிறுகதைகள், கட்டுரை
கள், நாடகங்கள் எழுதினார். நாடகத்தில் நடித்தார். திரைக்கதை எழுதினார். பத்திரிகை நடத்தினார். ‘தம்பிக்கு’ என்று தினம் கடிதங்கள் எழுதி இயக்கம் வளர்த்தார். ஆட்சியில் அமர்ந்தால்தான் கொள்கைகளுக்குச் சட்டரீதியான நடைமுறையையும் பாதுகாப்பையும் உண்டாக்க முடியும் என்று தமிழகத்தின் ஆட்சியாளராகவும் ஆனார்.
தமிழகத்தின் முதல்வரானவுடன் அண்ணா சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் கொடுத்தார். சுய மரியாதைத் திருமணத்தில் பிறந்த குழந்தைகள் அதன்பிறகே சட்டபூர்வமான வாரிசுகளானார்கள். இருமொழி கொள்கையைக் கொண்டு வந்தார். அண்ணாவின் கொள்கைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்பாகவே மரணம் முந்திக்கொண்டது.
30 ஆண்டு காலம் தன்னுடைய பேச்சால் தமிழக மக்களைக் கட்டிப்போட்டிருந்த அண்ணா, கடைசி நாட்களில் ஒரு மிடறு கஞ்சியைக்கூட விழுங்க முடியாமல் தவித்தார். கஞ்சிக்கிடையில் ஒரு முழு சோறு வந்துவிட்டாலும் உயிர்போகும் வலியில் துடித்தார்.
சுறுசுறுப்பு சூரியன்
முற்றிலும் உடல்நிலை சீர்குலைந்திருந்த நேரத்தில், தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு' என்று பெயர் மாற்றும் விழாவில் அண்ணா பேச வேண்டும். பேசினால் உடல்நிலை அதிகம் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். "இதற்கே உடல் ஊறு நேரிடுமானால் பிறகு உடல் இருந்து பயனில்லை" என்று கூறிவிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த விழாவில் கலந்துகொண்டு அண்ணா பேசினார்.
மென்மையான குணமும், குழந்தை மனமும், ரசனையும் கொண்டவர் அண்ணா. முதல்வரான பிறகும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் திரைப்படம் பார்க்க இரவுக் காட்சிகளுக்குச் செல்வார். சுற்றுப் பயணங்களில் எந்த ஊரில் தெருக்கூத்துகள் நடந்தாலும் தலைப்பாகைக் கட்டிக்கொண்டு கூட்டத்தில் அமர்ந்து நாடகம் பார்ப்பார். இசை நிகழ்ச்சிகள் நடந்தாலும் காரை தூரத்தில் நிறுத்திவிட்டு முடியும்வரை கேட்டு ரசித்துவிட்டுச் செல்வார்.
தவறுகளைப் பெரிதுபடுத்தாமல் மன்னிக்கும் இயல்பும், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்று மாற்றுக் கருத்துகளை ஏற்கும் பக்குவமும் அவருக்கு ஏராளமான அன்புத் தம்பிகளைப் பெற்றுத் தந்திருந்தது.
கண்ணீர் ஊர்வலம்
உடல்நலமின்றி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு மாத காலம் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தம் தலைவனின் இதயத் துடிப்பு சீராகிவிடாதா என்று தொண்டர்களின் இதயத் துடிப்புகள் அதிகமாயின. அவர் மௌனத்தைப் பொறுக்க முடியாமல் தமிழகம் அலறியது. இந்தியா முழுக்க உள்ள தலைவர்கள் அக்கறையுடன் அண்ணாவின் உடல்நலத்தைக் கேட்டறிந்தபடி இருந்தார்கள்.
"எல்லாம் போச்சு" என்று பெரியாரும், "நாங்க அநாதைகளாகிவிட்டோமே அய்யா" என்று கலைஞரும் கலங்கித் தவிக்க, ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று சொல்லிய அண்ணா விடைபெற்றார். லட்சக்கணக்கான பேர் இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் பின்தொடர்ந்து வர, மெரினா கடற்கரையில் ஓய்வெடுக்கச் சென்றார்.
அதிகம் பேர் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம் என்பது உலகச் சாதனையாக இருந்தாலும், அண்ணாவை கொண்டு போவதைப் போல் ஒரு மரணம், தங்களுக்கு வராதா என்று பலரையும் ஏங்கச் செய்துகொண்டிருப்பதே, அந்த ஊர்வலத்தின் உண்மையான தாக்கம்.
- நிறைவு
எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT